இன்றைய இளைஞர்கள், தம்மை யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, பேசுவதை விரும்புவதேயில்லை. ஆனால், பெரியவர்கள் அதனைத் தவிர வேறெதையும் செய்வதேயில்லை. ஒப்பீடு செய்து செய்து, நம் குழந்தைகளின் மனதினை நாமே காயப்படுத்தி விடுகிறோம். இது தவிர்க்கப்படவேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நமது வயது, திறமை, செழுமை, வாழ்க்கை முறை, சூழ்நிலை இவற்றால் வேறுபட்டவர்கள். நம் உடல், மனம், ஆன்மா இவற்றின் கூட்டுக்கலவையாக படைக்கப்பட்டுள்ளோம். இவை ஒவ்வொன்றும் வித்தியாசமான பண்புகளை கொண்டவை. ஆன்மாவிற்கும், மனதிற்கும் உருவம் கிடையாது. எனவே, அவற்றை ஒப்பீடு செய்வது முடியாது. நமது உடலுக்கு உணர்வு, உயரம், எடை ஆகியவை உண்டு. உணர்வு சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். உயரமும், எடையும் பெற்றோரின் மரபணுவினால் தீர்மானிக்கப்படுகிறது. இவற்றை ஒருவரோடு ஒருவர் மதிப்பீடும், ஒப்பீடும் செய்ய இயலும். எனினும், ஒப்பீட்டு முடிவுகள் நேரத்திற்கு நேரம் மாறும். எனவே, நம்பகத்தன்மையில்லாதவை.
நாம் ஒவ்வொருவரும் கடவுளின் வித்தியாசமான படைப்புகள். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இறைவனின் அருட்கொடையால் பிறருடன் ஒப்பிட முடியாத அளவு தனிப்பட்ட திறமைகள் நிரம்பியுள்ளன. எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது சாத்தியமில்லை. இந்நிலையில் மதிப்பீடும், ஒப்பீடும் தேவையுமில்லை.
புலியைப் பார்த்து பூனை, அதைப் போல் மாற வேண்டும் என்று உடலில் சூடு போட்டுக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் தனக்கு மேலே உள்ள மனிதர்களுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து, தானும் அந்த உயரத்தை எட்ட வேண்டும் என விரும்புகிறான்.
தனக்கு சாத்தியமாகாத நிலையில் தனது குழந்தைகள்மீது தன் விருப்பத்தை திணிக்கின்றான். அவர்களாலும் இயலாத போது இருவரும் நிம்மதியை இழக்கிறார்கள். மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியுறும் பெரும்பாலான மாணவர்களின் தற்கொலைக்கு இதுவே அடிப்படைக் காரணம்.
வாழ்வில் வெற்றி பெற மனம் இருந்தால் போதும், நமக்கு வெற்றி நிச்சயம். ஒப்பிடும் நபரை விட ஒரு வேளை இவன் பெரிய மனிதனாக ஆகக்கூடும் என்பதை பெற்றோர்கள் நம்ப வேண்டும். அதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து இறங்க வேண்டும்.
மனித மதிப்பீடுகள் ஒருவரை பணியில் அமர்த்தும் போதும், திருமண உறவுகளை தீர்மானிக்கும்போதும், பணியில் பதவி உயர்வு அளிக்கும்போதும், பள்ளியில் அடுத்த உயர்வகுப்புக்கு செல்லும்போதும் மட்டும் பொதுவாக தேவைப்படுகின்றன.
சக மனிதர்களைப் பற்றிய உணர்வுகளும், கருத்துக்களும் ஒரு மனிதனுடைய குணத்தை தீர்மானிக்கின்றன. நாம் 'உதவாக்கரை' என்று அடுத்தவர் தொடர்ந்து நம் மீது ஒரு மதிபீட்டை வைத்துக் கொண்டிருந்தால், நாம் அவருடைய பார்வையில் தொடர்ந்து உதவாக்கரையாகத்தான் இருப்போம். நம் மனதிலும் நாம் அப்படித்தான் போலிருக்கிறதென திடமாக நம்பத்தொடங்குகிறோம். இது அவர் நம்மை அன்றாடம் கவனித்து இந்த முடிவுக்கு வந்திருந்தால், நாம் அதை ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். முடிந்தால், நம்மை திருத்தியும் கொள்ளலாம். ஆனால் எந்த வித ஆதாரமும் இல்லாத நிலையில், அவர் நம்மைப் பற்றிய இவ்வாறான கருத்தை மேலும் பரப்பாமல் பார்த்துக் கொள்வது நமது முதற்கடமை. அதற்கு நமது நடத்தையில் விரும்பத்தக்க மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட மதிப்பீடுகளும், ஒப்பீடுகளும் தொடர்ந்து நம் மீது திணிக்கப்படும் போது, நமது மனநிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். இங்குதான் மனிதனுக்கு சுய சிந்தனையும், சுய மதிப்பீடும் அவசியமாகிறது.
தம்மை தகுதியுடையவர்களாக செதுக்கிக் கொள்ள ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனையால் உருவாகும் சுயமதிப்பீடுதான் முக்கியம். மனித ஒப்பீடு தேவையில்லை. ஏராளமான சுயமுயற்சிகளால் அறிவையும், திறமையும் வளர்த்துக் கொள்ள முடியும். நாளடைவில் சுயமதிப்பீட்டில் மதிப்பெண் உயரும். நம்முடைய ஆற்றல் நமக்கே நன்கு புரிய வரும். அடுத்தவர் நம்மீது வைக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் வலுவிழந்து போகும்.
மனித ஒப்பீட்டை இனியாவது தவிர்ப்போம். நமது சுயசிந்தனையும், திடமான மனமும் நம்மை நாமே நன்கு செதுக்கிக் கொள்ள மிகவும் உதவும் என்பதை நம்பத்தொடங்குவோம். அதன்படி செயல்படுவோம். வாழ்வில் முன்னேறுவோம்.