’பணிவும் அடக்கமும்’ நம்மை உயர்த்தும்!

motivation Image
motivation Imagepixabay.com
Published on

ணிவும், அடக்கமும் என்றைக்கும் வாழ்வில் உயர்வினைத் தரும். சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாகப் போராடியே அடைகிறார்கள்.

ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை, பெரிய பதவி என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள்.  அவர்கள் விரும்பியது எல்லாம் எளிதில் கிடைக்கிறது. வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாகப் பணிவும், அடக்கமும் மேலோங்கி இருப்பதைக் காணலாம். பிறர் பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதும் பணிவுதான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம் மந்திரக்கோல் போன்றது. பணிவுள்ளவன்தான் சிறந்தத் தலைவனாக முடியும்.

அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்கள் பலருக்கும் பதவி மட்டும்தான் அடையாளம். அதிகார போதையில் பொதுமக்களிடம் பணிவின்றி நடந்து கொண்டவர் பலரும் பதவிபோன பின் கிழிந்தத் துணி தரை துடைக்க போவது போல் ஆகிவிடுகிறர்கள். 

பருத்தியில் இருந்து தயார் செய்யப்பட்ட போர்க்கொடி ஒருநாள் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்த திரைச்சீலையைக் கண்டது. திரைச்சீலை ஒய்யாரமாகக் கதவில் தொங்கிக் கொண்டிருந்தது. அதனுடைய உடலானாது புதிதாகவும், வாசைனை நிறைந்து காணப்பட்டது.

இதனைக் கண்ட போர்க்கொடி தன்னை ஒருகணம் பார்த்தது. அழுக்கான நாற்றம் தன்னுடைய நிலைக்காக வருந்தியது.

உடனே போர்க்கொடி “நானும் பருத்தியில் இருந்துதான் பிறந்தேன். இந்தத் திரைச்சீலையையும் பருத்தியில் இருந்துதான் தோன்றியது.

ஆனால் இந்தத் திரைச்சீலை பெற்ற வாழ்வினை நான் பெற்றேனா?. அதனுடைய அழகும், மணமும் எனக்கு இல்லையே? என்று மனதிற்குள் எண்ணியது.

அதனை நினைக்க நினைக்க போர்க்கொடிக்கு துக்கம் தாங்க முடியாமல் விம்மி விம்மி அழுதது.

போர்க்கொடி அழுவதைக் கண்ட திரைச்சீலையை போர்க்கொடியிடம் “போர்க்கொடியே, நீ ஏன் அழுகிறாய்? என்று கேட்டது.

அதற்குப் போர்க்கொடி “நானும், நீயும் பருத்தியில் இருந்துதான் தோன்றினோம். நான் போர்க்கொடியாக உருவானதில் இருந்து கொடிய துன்பங்களை அனுபவிக்கிறேன்.

போர் வீரர்கள் என்னைக் கைகளில் ஏந்திக் கொண்டு செல்கிறார்கள். காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிகிறார்கள். நானும் அவர்களுடன் அலைந்து திரிகிறேன். போர்க்களத்தில் எதிரிகளிடம் அடிபடுகிறேன். வெயிலும் காய்ந்தும், மழையில் நனைந்தும் மிகவும் துன்பப்படுகிறேன். 

என்னுடைய துன்பங்கள் பற்றி உனக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. மாறாக நீயோ, அந்தப்புரத்தில் குளுமையான நிழலில் அசைகிறாய்... 

நாம் இருவரும் ஒரே இனம்தான். ஆனால் எனக்குத் தொல்லையும் துன்பமும்தான் உண்டாகிறது. உனக்கு இன்பமும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.” என்று கூறியது.

போர்க்கொடி பேசியதைக் கேட்ட திரைச்சீலை புன்னகை புரிந்தது...

பிறகு போர்க்கொடியைப் பார்த்து,

“போர்க்கொடியே, நீ தலையை நிமிர்த்தி, விண்ணில் பறக்கிறாய். தற்பெருமையுடன் ஆணவத்துடன் எல்லோர் இடையேயும் தலைதூக்கி ஆட்டம் போடுகிறாய். அதனால் நீ துன்பம் அடைகிறாய். ஆனால் நானோ, அடக்கத்துடன், பணிவுடன் தரையில் தலை தாழ்த்திக் கொண்டு இருக்கிறேன். 

எவரும் அறியாத இடத்தில் அமைதியாக இருக்கிறேன். அதனால் இன்புற்று இருக்கிறேன்” என்று கூறியது திரைச்சீலை.

பணிவு என்பது கனிவை உருவாக்கும். பணிவு என்பது பாசத்தை வளர்க்கும், பிளவைத் தவிர்க்கும். பிரிவைக் குறைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com