ஜூன் 25-ம் தேதி, 1983-ம் ஆண்டு. லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு அறை மயான அமைதியாக இருந்தது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்திருந்தது என்பதுதான் அந்த சோகத்துக்குக் காரணம்.
அப்போது பெரும் யோசனையோடு ஓய்வறைக்குத் திரும்பினார். இந்தியக் கேப்டன் கபில்தேவ். வீரர்களின் முகத்தைப் பார்த்ததும் நிலைமையைப் புரிந்து கொண்டார். இந்தியாவை, தனியொரு மனிதனாக இறுதி ஆட்டம்வரை கொண்டுவந்த தன்னால், இந்தப் போட்டியிலும் ஜெயிக்கவைக்க முடியும் என்றே எண்ணினார்.
அனைத்து வீரர்களையும் அருகே அழைத்தார். முகத்தில் புன்னகையுடன் பேசத் தொடங்கினார். "நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை 183 ரன்களுக்குள் கட்டுப்படுத்த அவர்களால் முடியுமென்றால், இந்த ரன்களுக்கும் குறைவாக அவர்களை கட்டுப்படுத்த நம்மால் கண்டிப்பாக முடியும். அவர்களால் முடியும்போது, நம்மால் முடியாதா? இன்று ஜெயிக்கப்போவது நாம்தான்; உறுதியுடன் விளையாடுங்கள்" என்று உற்சாக வார்த்தைகளை அள்ளிவீசி, எழுச்சிப் பொங்கும் உணர்வுடன் களத்தில் இறங்கினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி ஆடத் தொடங்கியது. இரண்டு முறை உலகச் சாம்பியனாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை 43 ரன் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. விளையாட்டு மைதானத்தில், இந்தியா திடுமென விஸ்வரூபம் எடுத்தது உலக நாடுகளை அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கொள்ள வைத்தது. அன்று முதல் இந்தியாவின் தேசிய விளையாட்டாக மாறிப்போனது கிரிக்கெட்.
தெருவுக்குத் தெரு கபில்தேவ் உருவானார்கள். இன்று இந்திய அணி இத்தனை இளமையும் துடிப்பும் உள்ளதாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அந்த 1983-ம் ஆண்டு கிடைத்த வெற்றிதான்.
அந்த வெற்றி கிடைக்க காரணமாக இருந்த மந்திரம். 'பிறரால் முடியுமெனில் நம்மாலும் முடியும்! என்ற அழுத்தம் திருத்தமான நம்பிக்கை மொழிதான். ஆம். இன்று ஒவ்வொரு சாதனைகளையும் பிறரால் முறியடிக்கப்படுகிறதெனில் அதற்குக் காரணம் இந்த மந்திரம்தான்.
இந்த உலகம் உள்ளவரை, ஒருவரது சாதனையை இன்னொருவர் முறியடித்துக் கொண்டே இருப்பார். அவர்களுக்கு மட்டுமல்ல. வாழ்வில் வெல்ல விரும்பும் அனைவருக்கும் உத்வேகம் கொடுக்கும் வெற்றி மந்திரம் என்றே இதனைச் சொல்லலாம்.