உழைப்பும் நேர்மையும் வெற்றியின் இரண்டு கண்கள். வாழ்க்கையில் வெற்றிக்கான திறவுகோல் முதலில் கடின உழைப்பு. உண்மையும் உழைப்பும் இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம். எந்த ஒரு வேலையையும், தொழிலையும் தாழ்வாக நினைக்காமல் உண்மையான உழைப்புடன் செயல்பட வெற்றி நிச்சயம்.
வெற்றி என்பது ஒரு பயணம். அதைத் தொடர விரும்பும் நபரைப் போலவே அதுவும் தனித்துவமானது. வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்ளுதலே.
வெற்றிபெற கடுமையான உழைப்பும், பொறுமையும் அவசியம். ஒரு இலக்கை உருவாக்கிக் கொண்டு அந்த இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியுடன் உழைக்க வேண்டும். அத்துடன் அதற்கான ஒரு காலக்கெடுவையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் உற்சாகத்துடன் செயல்பட்டு அந்த இலக்கை அடைய தொடர்ந்து நம்மை முன்னோக்கி செலுத்த முடியும்.
அத்துடன் நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றி பெற உழைப்பு மட்டும் போதாது உண்மையும் தேவை. நம் மனதை உற்சாகத்துடன் வைத்துக்கொண்டு சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் நம் இலக்கை நோக்கி நகரவேண்டும்.
நம்மைவிட வெற்றிகரமாக செயல்பட்டு வாழ்வில் உயர்வடைந்த நபர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து வாழ்க்கையின் வெற்றி பெறும் ரகசியத்தை கற்றுக் கொள்ளலாம். அதற்காக நம்மை யாருடனும் ஒப்பிட்டு நம்முடைய பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது. கடின உழைப்பு மட்டுமே வாழ்வில் வெற்றியை தேடி தரும்.வாழ்வில் வெற்றி பெறுவது என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல அதை நேர்வழியில் சம்பாதிப்பதும்தான்.
இலக்குகளை அமைப்பது:
இலக்குகளை நிர்ணயிப்பது வெற்றி அடைய ஒரு முக்கிய பகுதியாகும். இது நமக்கு ஒரு உந்துதலை வழங்கும். அத்துடன் நம்முடைய முன்னேற்றத்தை அளவிடவும் உதவும். குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை அமைத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டு நம்முடைய முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல்:
கடின உழைப்புடன் நேர்மறை எண்ணமும் அவசியம். சவால்களை எதிர்கொள்ளும் பொழுது நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். நம்மைச் சுற்றி நேர்மறையான எண்ணங்களுடைய நண்பர்களையும் குடும்பத்தினர்களையும் வைத்துக் கொள்ளுதல் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் செயல்களில் முனைப்பாக ஈடுபடவும் உதவும்.
சுய பாதுகாப்பு:
வாழ்வில் கடின உழைப்பும் உண்மையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்மை கவனித்துக் கொள்வதிலும் இருக்கவேண்டும். போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவை நம்மை பலப்படுத்தும். நமக்கான நேரத்தை உருவாக்கிக் கொண்டு நாம் விரும்பும் விஷயங்களை செய்யவும், ஓய்வெடுக்கவும், மன ஆரோக்கியத்திற்கான தியானம் போன்றவற்றிற்கும் முன்னுரிமை கொடுப்பதும் வாழ்வில் நிச்சயம் வெற்றியை தேடித் தரும்.
உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல்:
சிலர் வேலை வேலை என்று இருந்து உறவை வளர்த்துக் கொள்ள மறந்து விடுவார்கள். அர்த்தமுள்ள உறவுகளை நம்மைச் சுற்றி வளர்த்துக் கொள்வது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதில் ஒரு முக்கிய பகுதியாகும் என்பதை மறக்கக்கூடாது. குடும்பம், நண்பர்கள் மற்றும் சகஊழியர்களுடன் உறவை உருவாக்கிக் கொள்வதுடன் பராமரிக்கவும் வேண்டும். தொடர்பு, நேர்மை மற்றும் பரஸ்பர ஆதரவிற்கு முன்னுரிமை கொடுக்கவும்.
வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!