
யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ, படித்தவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர்தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.
இச்சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள், வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்துக் களைப்பவர்கள் (ஆண், பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப்போல், சுயமரியாதை, கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழி சொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.
மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை. சொல்லால், பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள்.
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.
மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், ''உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார்.
அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள்.
உலகப் புகழ்பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.
மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாறவேண்டும்.
சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு புதிய உலகம் அமைப்போம்.
சக மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம். நாம் கர்வம் கொண்டால் என்றைக்காவது ஒருநாள் நிச்சயம் அதற்காக வெட்கப்பட வேண்டும் என்பதை மட்டும் உன் நினைவில் கொள்ள வேண்டும்.