தோற்றுப் பார் வெற்றி உன்னைத் தேடி ஓடி வரும்!

Motivation image
Motivation imageimage credit - pixabay.com

வெற்றி எனும் முகவரியைச் சென்றடைய வழிகாட்டும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒரு அங்கம். இந்த உலகத்தில் தோல்வியை சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்பிக்கிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழு வெற்றி பெற வேண்டுமானால் தோல்வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ்க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் எட்டாவது அதிசயமாகும்.

வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு வெற்றியைப்பெற அவர் சந்தித்த தோல்விகள் ஏராளமாக இருக்கும். பட்ட அவமானங்களோ அதைவிட அதிகமாக இருக்கும். வெற்றி என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரியவைக்க உதவும் ஒரு கருவியே தோல்வி.

உங்களுக்கு மிகவும் பிடித்தமாக பத்து சாதனையாளர் களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகங்களை எடுத்து ஒவ்வொருவருடைய வாழ்க்கை யையும் கூர்ந்து படித்துப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை முறை தோற்றிருக்கிறார்கள் என்பதை பட்டியலிடுங்கள். வாழ்க்கையில் தோற்காமல் சாதனை படைத்தவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது இப்போது உங்களுக்குப் புரியும்.

தோல்விகளைக் கண்டு பயந்து ஓடுபவர்களை தோல்வியானது தொடர்ந்து துரத்திச் சென்று அவர்களை முடக்கிவிடும். முன்னேறாமல் தடுத்துவிடும். தோல்விகளை துச்சமென நினைத்து அதை எதிர்த்துப் போராடுபவனைக் கண்டு தோல்வி பயந்தோடும். அவனே வாழ்க்கையில் வெற்றியும் பெறுகிறான்.

தோற்று விட்டோமே என்று கவலைப்பட்டு மனதைத் தளர விடாதீர்கள். வருத்தப்பட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். விடுதலைப் போரில் காந்திஜி சந்திக்காத தோல்விகளா? அவமானங்களா? அவர் மனஉறுதியோடு அனைத்தையும் எதிர்கொண்டதால்தான் இன்று நாம் அவரை தேசப்பிதா என்று அழைக்கிறோம்.

தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாக வெற்றியை மட்டுமே போதிக்கிறார்கள். மற்றொரு அங்கமான தோல்வியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதே இல்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியை சந்திக்கும்போது மனமுடைந்து போகிறார்கள். தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே ஒரு விபரீதமான முடிவினை எடுக்கிறார்கள். அது தற்கொலை. தோல்விக்கு முடிவு தற்கொலைதான் என்று ஒவ்வொருவரும் தீர்மானித்திருந்தால் இந்த உலகம் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமா? இந்த உலகத்தில் ஒரு மனிதன் கூட மிஞ்சி இருக்கமாட்டான்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தோல்வி என்பது வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒரு விஷயம் என்பதை அவ்வப்போது புரிய வைத்து வளர்க்க வேண்டும். தோல்வி அடையும்போது அவர்களைத் திட்டாமல் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுடைய வெற்றிக்கு வித்திட வேண்டும். மனம் தளராமல் தோல்வியை எதிர்கொண்டு எப்படி வெற்றியைப் பெறுவது என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

ஓவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னாலும் பல தோல்விகள் ஒளிந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மின்சார பல்பினைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் தனது ஆராய்ச்சிகளில் ஏராளமான தோல்விகளைச் சந்தித்தவர். ஒருசமயம் ஒரு நண்பர் அவரிடத்தில் “பல முறை தோல்வியைச் சந்தித்தீர்களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா ?” என்று கேட்டார். அதற்கு எடிசன் “நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் தோல்வியின் மூலம் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்” என்று பதிலுரைத்தார்.

இதையும் படியுங்கள்:
அடர்த்தியான கண் இமைகளுக்கு இயற்கையான அழகு குறிப்புகள் சில…
Motivation image

சாதனையாளர்கள் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாத காரணத்தினால் தான் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியை சந்திக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை தோற்கும் போதும் துவண்டு போகாமல் பெரியதொரு வெற்றியை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள் என்பதை மனதளவில் உணருங்கள். பதினைந்தாவது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால் பதினான்கு மாடிகளை நீங்கள் நிச்சயம் கடந்துதான் ஆக வேண்டும். தோல்விப்படிகளை மெல்ல மெல்ல கடந்துதான் வெற்றியின் முகவரியை நீங்கள் அடைய முடியும். வெற்றியின் முகவரியை அடைய விரும்பினால் நிச்சயம் நீங்கள் தோல்விகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும். தோற்றுப்பாருங்கள். அப்போதுதான் வெற்றியின் முகவரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத்தேடி ஓடி வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com