
வார்த்தைகள் எல்லோரிடமும் இருக்கும் மிகக் கூர்மையான ஆயுதம். அதைக்கொண்டு பிறருடைய மனக்காயத்திற்கு மருந்திட முடியும் என்று தெரிந்தும் நம்மில் பலர் அதை காயப்படுத்துவதற்காக மட்டும்தான் பயன்படுத்துகிறோம். கண்ணுக்கெதிரில் நிற்கிற சக மனிதனிடம் அன்பு பாராட்ட முடியாத ஒருவனால் கண்ணால் காணமுடியாத கடவுளிடத்தில் மட்டும் எப்படி அன்பை காட்ட முடியும்.
ஒருவரின் வார்த்தைகள் மற்றவர்கள் மீது நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பேசும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வார்த்தைகள் மிகவும் வலிமையானவை. பேசும் வார்த்தைகள் எல்லாம் பிறரை புண்படுத்தும் படியாக இல்லாமல் அன்பை பெருக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் வார்த்தைகள் அம்பு போன்றது. அவற்றை சரியாக பயன்படுத்தத் தெரியாவிட்டால் வார்த்தைகள் விட்டவனிடமே வந்து சேரும்.
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். நம்முடைய வார்த்தைகள் எப்பொழுதுமே பிறரின் மனதை கொல்லாமல், புண்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பேசும் வார்த்தைகளை வசப்படுத்த தவறியவர்கள் வாழ்க்கையில் மோசமான அனுபவங்களை பெற வேண்டியிருக்கும். தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மறக்க வேண்டாம். இது வார்த்தைகளின் வலிமையையும், ஒருவருடைய மனதை புண்படுத்தும் வார்த்தைகள் ஏற்படுத்தும் காயத்தை ஆற்றுவது கடினம் என்பதையும் விளக்குகிறது.
எனவே பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். வார்த்தைகள் எப்பொழுதும் ஆயுதங்களை விட வலிமையானவை. உடல் ரீதியான காயங்களையும், வலிகளையும் மருந்துகளால் குணப்படுத்த முடியும். ஆனால் மனரீதியாக ஒருவரை காயப்படுத்தினால் அதன் விளைவு அல்லது தாக்கம் அதிகமாக இருக்கும்.
வார்த்தைகளை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். வில்லை விட்டுச் சென்ற அம்பையும், வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளையும் ஒருபோதும் திரும்ப பெற முடியாது என்பதை பேசுவதற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் சிலரோ தாங்கள் பேசும் வார்த்தைகளைக் கொண்டு ஒருவர் மீது கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கோ அல்லது அதிகாரத்தை நிலைநாட்டவோ பயன்படுத்துகிறார்கள்.
மகிழ்ச்சியான வார்த்தைகள் நம் வாழ்வில் சந்தோஷத்தை கொடுக்கும். சோகமான வார்த்தைகளோ இருண்ட உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கோபமான வார்த்தைகள் மற்றவர்களின் இதயங்களில் விரிசல்களை ஏற்படுத்தி மக்களிடையே தூரத்தை அதிகரிக்கும். உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் நம் இதயங்களை உருக்க வைக்கும். நம்பிக்கையான வார்த்தைகள் நாம் விரும்புவதைப்பெற போராட வைக்கும்.
ஊக்கமளிக்கும் வார்த்தைகளோ ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றும் திறன் கொண்டவை. நாம் பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. அவற்றைத் தவறாக பயன்படுத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அதுவே அவற்றை சரியான முறையில் பயன்படுத்த நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையையும் அற்புதமாக மாற்ற உதவும்.