
சிலருக்கு அற்புதமான திறமைகள் இருக்கும். ஆனால் அவர்களால் சோபிக்க முடியாமல் போய்விடும். அதற்கான காரணங்களில் ஒன்றாக அவர்களின் நேர நிர்வாகம் இருக்கும்.
ஒரு செயலை முடிக்க ஒரு வாரம் கெடு என்று இருந்தால் இப்போது செய்யலாம் அப்போது செய்யலாம் என கடைசி நாள் வரை தள்ளிப் போட்டு பின் பரபரப்பில் அரைகுறையாக முடிப்பவர்கள் அந்த லிஸ்டைச் சேர்ந்தவர்களே.
வெற்றிக்கு முக்கிய தேவை அன்றன்று முடிக்க வேண்டியதை அன்றே முடிக்கும் வேகம்தான். நமது அலட்சிய தாமதப்போக்கு பல வெற்றி வாய்ப்புகளை வீணாக்கிவிடும் வேலைகளை தள்ளிப் போடுவது என்பது வாய்ப்புகளை வரவிடாமல் செய்து வளர்ச்சிக்கு தடையாக விடும். நம்முடைய நற்பெயர் கெடவும் வாய்ப்பாக அமைந்துவிடும்.
அந்த அதிகாரி ரயில்வே துறையில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். அவரது உறவினர் தனது மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தரும்படி அவரிடம் கேட்டிருந்தார். இளைஞனின் படிப்பும் தகுதியும் சரியானதாகத் தோன்ற அவரும் உதவுவதாக வாக்களித்தார்.
அந்த இளைஞன் குறிப்பிட்ட நேரத்தில் வந்து தன்னை சந்தித்தால் ரயில்வே துறை மேலாளரை சென்று பார்க்கலாம் என்று தெரிவித்தார். காலை 10 மணிக்கு அவரை வந்து பார்க்க வேண்டிய அந்த இளைஞன் 20 நிமிடம் தாமதமாக வந்தான். அவரோ வீட்டில் இல்லை.
அவன் திரும்பி சென்று விட்டான். சில நாள் கழித்து மீண்டும் அவரை பார்ப்பதற்காக வந்தவன். "சார் நீங்கள் சொன்னீர்களே ரயில்வே வேலை…" என்று ஆரம்பித்தான்.
"ஓ அதுவா அதற்கு வேறு ஆள் போட்டாச்சு பா." என்று அவர் சொன்னார்.
அந்த இளைஞன் முகம் வாடியவனாக "அன்று நான் வந்தேன். ஆனால் நீங்கள்தான் இல்லை" என்று அவர் மீதே குறையை திருப்பி விட்டான். "தவறு இளைஞனே. நான் வரச் சொன்னது 10 மணிக்கு நீ வந்ததோ 10.30 மணிக்கு 20 நிமிடம் தாமதமாக வந்தாய். நான் சொன்ன நேரத்தில் நீ வந்திருந்தால் அந்த வேலை உனக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். உனக்காக நானும் காத்திருக்க முடியாது வேலைக்கு உத்தரவு வழங்குபவர்களும் காத்திருக்க முடியாது" என்றார் அந்த அதிகாரி. இளைஞன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினான்.
ஆம். அந்த இளைஞனுக்கு வேண்டுமானால் 20 அல்லது 30 நிமிடத்தில் பெரிய வித்தியாசம் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் ஒரு பெரிய நிறுவனத்தையே நிர்வகிக்கும் அந்த அதிகாரி போன்றவர்கள் அந்த 20, 30 நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு வைத்திருப்பார்கள் முன்னமே.
முன்பெல்லாம் தொழிலில் வெற்றி பெற்றிருக்கும் பிரபலங்கள் கூடவே ஒருவர் இருப்பார். அவருக்கு அந்தரங்க ஆலோசகராக அவர் செயல்படுவார். அந்த பிரபலங்கள் யாரிடம் பேசவேண்டும், அதற்கான நேரம், செயல்கள் என்ன என்பதை முன்கூட்டியே தயாரிப்பதுதான் அந்த பர்சனல் செகரட்ரியின் வேலையாக இருக்கும். இப்போது அவர்கள் இடத்தை கணினி கைப்பற்றி நேரங்களை நினைவுபடுத்துகிறது.
வெற்றியாளர்கள் தங்கள் வெற்றியை எப்போதும் யாருக்காகவும் எதற்காகவும் தள்ளிப்போட விரும்புவதில்லை. எனவேதான் அவர்கள் வேலையையும் தள்ளிப் போடுவதில்லை. இதை நாமும் புரிந்து கொண்டால் வெற்றிப்பாதையில் பயணிக்கலாம்.