
வாழ்க்கையில் நாம் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை புரிந்து நடந்து கொண்டாலே போதும் நமது வாழ்க்கை வெற்றி பயணம்தான். நம்மில் பலருக்கு இது புரிவதில்லை. நாம் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தினால்தான் வெற்றி என்ற இலக்கை நம்மால் அடையமுடியும்.
நாம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை திருப்பிக் கொண்டு செயல்பட்டாலே போதும் எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அதுவே உறுதுணையாக இருக்கும். இப்பதிவில் இருக்கும் 12 விஷயங்களை நீங்கள் கவனம் செலுத்தினால் வெற்றி உங்கள் வசமாகும்.
1- யாரோ ஒருவர் மீது அளவுக்கு அதிகமான அன்பு செலுத்திவிட்டு, திடீரென அவரைப் புறக்கணிக்காதீர்கள், இப்படி ஒதுக்குவதை அவர்களால் தாங்க முடியாது. மனம் உடைந்துவிடுவார்கள்.
2-நம்மைவிட்டு விலகிய உறவுகள், நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று சதா உளவு பார்க்காதீர்கள். அது வீண் வேலை, நேர விரயம். அதைத் தெரிந்துகொண்டால் மனஉளைச்சல்தான் ஏற்படும்.
3-இவர் ஏன் நம்மிடம் பேசவில்லை, அவர் ஏன் நம்மைச் சந்திக்கவில்லை, என்று எவர் குறித்தும் யோசித்துக் கவலைப்படாதீர்கள். உங்களை முக்கியம் என்று நினைக்கும் எவரும் பேசுவார்கள், வந்து சந்திப்பார்கள்.
4-உங்களை எவருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில், வெவ்வேறு பணிகளைச்செய்ய படைக்கப்பட்டவர்கள். உங்கள் வழியில் நீங்கள் பயணம் செய்யுங்கள்.
5-உடல்நலத்தையும் மனநலனையும் கெடுத்துக்கொண்டு எந்த வேலைகளையும் செய்யாதீர்கள். அதனால் உங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களைவிட இழப்புகள் அதிகம்.
6-நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களின் திருமணம், பிறந்த நாள், வீட்டு முக்கிய நிகழ்வுகள் போன்ற தருணங்களில் அவர்களுடன் இணைந்திருக்க மறக்காதீர்கள். மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள எப்போதும் அருகில் இருங்கள்.
7-எல்லா எமாற்றங்களையும் அவமானங்களையும் மனதுக்குக் கொண்டு போகாதீர்கள், நீங்கள் மனம் உடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அடுத்தவர்கள் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள், அவர்களை ஜெயிக்கவிடாதீர்கள்.
8-குடும்பத்தினரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள், மற்ற எல்லோரும் கைவிட்டாலும், உங்களைத் தாங்கிப்பிடிக்கும் ஆதாரமாக இருக்கப்போவது குடும்பம்தான்.
9-யாரையும் வலுக்கட்டாயமாக உங்கள் வாழ்க்கைப் பாதைக்குள் பிடித்து வைக்காதீர்கள். அவர்கள் விலகிப்போக விரும்பினால், விடைகொடுத்து அனுப்புங்கள்.
10-எந்த நேரத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களைத் தேடிப்பிடியுங்கள். மகிழ்ச்சியைத் தொலைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிப்போகாதீர்கள்.
11-தனியாக ஒதுங்கி இருக்காதீர்கள், அலுவலகத்தில், தொழிலில், வியாபாரத்தில், வாழ்க்கையில், சக மனிதர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். புதிய புதிய அறிமுகங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். வாய்ப்புகள் எங்கிருந்தும், எந்த ரூபத்திலும் வரலாம்.
12-உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து வைத்திருங்கள். உங்கள் பலவீனங்களைச் சரி செய்வது எப்படி என்று யாராவது சொல்லும் ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அதையே வைத்து உங்களைத் தாழ்த்திப் பேச எவரையும் அனுமதிக்காதீர்கள்.