இந்த எண்ணத்தை தவிர்த்தால் வெற்றி உறுதி!

If you avoid this thought, success is guaranteed!
motivational articles
Published on

திறமைகள் வசதிகள் இருந்தும் சிலர் எப்போது பார்த்தாலும் இந்த எண்ணத்துடனே இருப்பார்கள். இவர்களால் என்றுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அது என்ன எண்ணம் என்று தெரியுமா? அதற்கு முன் இவரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆர்தர் ஆஷே (arthur ashe) மிகச் சிறந்த அமெரிக்க தொழில்முறை டென்னிஸ் வீரர்.  விம்பிள்டன் வெற்றிக் கோப்பையை முத்தமிட்டு உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். அவருக்கும் வந்தது சோதனை. 1983ல் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது ரசிகர்கள் துடிக்கும் மனதுடன் அவரின் நலத்துக்காக பிரார்த்தனை செய்தனர்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. பூரண குணம் பெற்ற ஆஷேவை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள். ஆஷேவுக்கும் பெரும் ஆனந்தம். ஆனால் அடுத்து வந்தது மீண்டும் வேதனை.

ஒரு நாள் ஆஷேவின் உடலில் பிரச்னைக்குரிய மாற்றங்கள் ஏற்பட அதற்காக ரத்தப் பரிசோதனை செய்தவர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார். காரணம், அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தது.

உயிர் காப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு, அங்கே பயன்படுத்திய ரத்தத்தில் உயிர்கொல்லி நோயான, எய்ட்ஸ் கிருமிகள் இருந்தன என்று சொல்லப்பட்டது. ஆனாலும் உலகம் நம்புமா?

அதன் பின் ஆஷேவின் மீதான சமூகத்தின் பார்வை மாறியது. பிரபலத்துக்கு  எய்ட்ஸ் என்பது பெரிய செய்தி ஆயிற்றே? ஒரு பக்கம் பத்திரிகைகள் ஆஷேயின் நோயைக் குறித்து அதனதன் பாணியில் பக்கம் பக்கமாக எழுதின. அதை நம்பிய ரசிகர்களும் ஆஷேயை வெறுப்புடன் பார்த்ததுதான் வேதனை.

ஆனால் ஆஷே இதற்காக யார் மீதும் கோபம் கொண்டு சுயபச்சாதாபத்துக்குள் நுழைந்து கொள்ளவில்லை. எந்தத் தருணத்திலும் அவர் தன்னுடைய நேர்மறை எண்ணங்களையும் மன தைரியத்தையும்  இழக்கவில்லை.

உண்மையை அறிந்த ஒரு  நண்பர் ஆஷேவிடம் இப்படி கேட்டார்.
“நண்பரே உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?”

ஆஷே புன்னகையுடன்   “எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று இப்போது நான் கேட்க மாட்டேன். அப்படிக் கேட்டால் நான் மேலும் பல எனக்கு மட்டும் ஏன் இப்படி? களைக் கேட்க வேண்டும்” என கூறவும், நண்பர் புரியாமல் பார்த்தார்.  ஆஷே தன் பேச்சைத் தொடர்கிறார்.

இதையும் படியுங்கள்:
வெற்றி எங்கள் கையிலே!
If you avoid this thought, success is guaranteed!

“சோகமான செய்திகள் வரும்போது மட்டும் எனக்கு ஏன் இப்படி என்று கேட்பது நியாயம் என்றால், மகிழ்ச்சியான தருணங்கள் வரும்போதும் அதே கேள்வியை எழுப்ப வேண்டும் அல்லவா? ஆனால் நான் எழுப்பவில்லையே!”

“என்னுடன் விளையாடிய எத்தனையோ பேரை நான் வெற்றி கொண்டேன். அப்போது ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று  கேள்வி எழுப்பவில்லை.  அழகான மனைவி வாய்த்தபோது இந்தக் கேள்வியை கேட்கவில்லை. அழகான குழந்தை பிறந்த போது இந்தக் கேள்வியை கேட்கவில்லை. இன்னும் எத்தனையோ நல்ல வரங்கள் எனக்கு வழங்கப்பட்டபோது கேட்காத நான், எனக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியை இப்போதும் கேட்க மாட்டேன்.” என்று ஆஷே சொன்னதைக் கேட்டு, அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தார் அந்த நண்பர்.

பின்னாளில் எய்ட்ஸ் தொடர்பான நிமோனியா பாதிக்கப்பட்டு ஆஷே மறைந்தாலும் பலருக்கும் அவர் வாழ்வின் மூலம் தன்னம்பிக்கை விதைகளை விதைத்து வாழ்கிறார் எனலாம்.

"எனக்கு மட்டும் ஏன் இப்படி?" எனும் எண்ணத்தை கைவிட்டு கிடைத்ததற்காக நன்றி சொல்லிப் பாருங்கள். வெற்றி தேடிவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com