மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

-மரிய சாரா

சிறுவயதில் மழையில் விளையாடி மகிழ்ந்த அனுபவம் நம் எல்லோருக்குமே இருக்கும். அதிலும் 90's கிட்ஸ் எல்லோருக்கும் இந்த அனுபவம் நன்றாகவே நினைவில் இருக்கும். இப்போதெல்லாம் மழை என்றாலே பிள்ளைகளை மழையில் விளையாட நாம் விடுவதில்லை. காய்ச்சல், சளி போல ஏதேனும் தொல்லைகள் வந்துவிடுமோ என பயந்து பயந்து வளர்க்கிறோம்.

ஆனால், நமது சிறுவயது நினைவுகள்? ஆஹா இன்று நினைத்தாலும் தித்திக்கின்றனவே? அழகாய் மழை எனும் இயற்கை நீரில் நீராடி மழை நிற்கும்வரை ஆசை தீராமல் நனைவோம். பின் அம்மா திட்டிக்கொண்டே தலையை துவட்டும்போதுகூட, இனி மறுமுறை எப்போது இப்படி மழையில் நனைந்து ஆனந்திப்போமோ என்று ஏக்கமாய் இருக்கும். பள்ளி முடிந்து வரும்போது மழையில் ஆட்டம் போட்டு மெதுவாய் நடந்து வீடு சேர்ந்த அந்த நினைவுகள் இன்னும் பசுமையாய் நெஞ்சினில்.

கொட்டும் மழையில் நீரோடைகளில் வழிந்ததோடும் அந்த நீரில் மீன்பிடித்து வீட்டிற்கு அம்மாவிடம் சொட்ட சொட்ட நனைந்துகொண்டு வந்து தரும்போது ஓர் ஆனந்தம் வருமே? என்னமோ உலக சாதனை நடத்தி பதக்கம் கொண்டுவந்ததைப்போல ஒரு பெருமிதம். மழை நீரில் மீன் பிடிக்கவே தனித் திறமை வேண்டுமென மனம் அப்போது நமக்கு சொல்லிக்கொண்டிருக்குமே? சில்லென நம்மீது விழும் அந்த மழைத்துளிகள் நம்மை அவ்வளவு இன்பமாக மாற்றிக்கொண்டிருக்கும்.

நாம் வளர்ந்த பின்னும் மழை பலரது வாழ்வில் முக்கிய நண்பனாக இருக்கிறதை மறுக்கமுடியாது. ‘மழை’ திரைப்படத்தில் ஸ்ரேயா நினைக்கும்போதெல்லாம், அழைக்கும்போதெல்லாம் மழை வருவதைப்போல கதை அமைந்திருக்கும். எனது வாழ்விலும், எனக்கும் மழைக்குமான அப்படி அழகான நினைவுகள் பல உண்டு.

மனம் கனத்துப்போய், அழுது ஓய என் விழிநீர் போதாது என நின்ற பல தருணங்களில் மேகங்கள் வானில் திரண்டு மழையாய் அழுது கொட்டித்தீர்த்துவிடும் எனக்காக. அத்தருணங்களில், நான் பெரும் சக்தி கொண்டு தனிமையை விரட்டியதுபோல ஒரு மகிழ்ச்சி. வறண்டுபோன நிலத்தில் விழும் ஒரு துளி நீரும் எவ்வளவு இனிக்கும் என்பதை அந்த நிலம் மட்டுமே உணர முடியும்.

அதேபோல்தான் சோகங்கள் மனதில் படர்ந்தது மனம் வறண்டுபோய் இருக்கும் சூழலில், ஒரு பெரு மழையோ அல்லது சிறு சாரலோ ஆனாலும் அந்த நேரத்தில் அது தரும் ஆறுதல் என்பது பெரும் படையே எதிரில் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன வலிமையைத் தந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
ஆணவம் அறிவை அழிக்கும்; அகம்பாவம் நம்மையே அழிக்கும்!
Motivation image

வாழ்வில் பல போராட்டங்களில் நாம் தனியாய் விடப்பட்டதை உணரும் தருணங்கள் எல்லோருக்கும் நடக்கும். சுற்றி எல்லோரும் இருந்தாலும் யாரும் இல்லாமல் தனித்துவிடப்பட்டது போன்ற உணர்வில் தவிக்கும்போது, ஒரு மழை, சிலுசிலுவென்று உணர்வோடு வந்து நம்மை வருடும்போது, அந்த மழைக்காற்று வீசும்போது, ஓர் இனிமையான உணர்வு தோன்றும். அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் உன்னதமான வலிமை.

விழியோரம் வழியும் நீரைத் துடைக்க நம் கையை நீட்டவும் மனமின்றி உடைந்து சிதறிக்கிடக்கும் நிலைமையில், தோளைத்தட்டி தூக்கிவிட்டு, வலிமை தரும் உணர்வை மனிதர்கள் தர முடியும் என்பதைவிட, இயற்கையான மழை தரும் அந்த இனிய வருடல்... எவராலும் எந்த சக்தியாலும் தர முடியாத விலைமதிப்பில்லாத பொக்கிஷம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com