ஆணவம் அறிவை அழிக்கும்; அகம்பாவம் நம்மையே அழிக்கும்!

Motivation image
Motivation imageImage credit-pixabay.com

கம்பாவம் என்பதும் ஒரு குணம்தான். இந்த குணம் ஒரு மனிதனுக்கு வளர ஆரம்பித்துவிட்டாலே போதும் அவன் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம். ஆனால் ஆபாசத்தின் உச்சத்தில் இருக்கும் பொழுது எதுவும் தெரியாது.

“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்.

அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத்தான் ஆணவம் வருகிறது. ஆனால், பெரும்பாலான நிறை குடங்களுக்கு அது வருவதில்லை...

வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள் தனமான தைரியம் தோன்றி, ‘எல்லாம் நாமே’ என்ற எண்ணம் ஒரு சிலருக்கு பிறந்து, தடுமாறி ஒரு செயலை செய்யத் தொடங்கியதும், ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, அவர்களை கூனிக் குறுகச் செய்கின்றன.

ஆணவத்தின் மூலம் வெற்றியோ, லாபமோ கிடைப்பது இல்லை;  அடிதான் பலமாக விழுகிறது.

தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி; தான் அமைச்சராகி விட்ட போதையில் மக்களை அலட்சியப்படுத்தும் அரசியல்வாதிகள். தான் சொன்ன ஏதோ ஒன்றை பொது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாளும் எதையாவது உளறிக் கொண்டிருக்கும் தலைவர்கள்.

இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப்போய் விடுகின்றார்கள்...

‘எதற்கும் தான் காரணமல்ல'; என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை. ‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், பொது இடங்களில் அவமானப்படாமல் தப்பியது இல்லை.

நம்மோடு பணியாற்றுபவர்கள் நம் உறவினர்கள், நம் நண்பர்கள் என அவர்களை நாம் எப்பொழுது அனுசரிக்காமல் அலட்சியம் காட்டுகிறோமோ அப்பொழுதே நமக்குள் அகம்பாவம் என்ற குணம் வளர தொடங்கி விடுகிறது. 

நான் ஆணவமாக இருப்பேன் அகம்பாவம் பிடித்து இருப்பேன் என கூறுபவர்கள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இருக்க மாட்டார்கள் அவர்கள் சாதித்த வரலாறு ஏதேனும் உங்களால் சொல்ல முடியுமா?

ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு. திரைப்பட நடிகர்கள் உண்டு. பணக்காரர்கள் உண்டு. ஆனால், அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.

இதையும் படியுங்கள்:
கொஞ்சம் உங்கள் பாதங்களையும் கவனியுங்களேன்!
Motivation image

ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயல் காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பிவிடுகிறது...

நம்மிடம் ஏதும் இல்லை என்பது ஞானம். நம்மை தவிர ஏதும் இல்லை என்பது ஆணவம். ஞானம், பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது. ஆனால், ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.

அகம்பாவம் என்ற குணத்தை நாம் பெற்றிருந்தால் இன்றே அதை தூக்கி எறிந்து விட்டு தலைமுழுகி விடுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கைக்கு நல்வழி காட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com