எந்த ஒரு செயலையும் துணிந்து செய்தால் வெற்றி நிச்சயமே!

Success
Success
Published on

நம் வாழ்க்கையில் வாய்ப்புகள் என்பது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடாது. பெரும்பாலும் நம்மில் பலர் நம்முடைய திறமைகள் என்ன என்பதை இன்னும் கண்டறியாமல் இருப்பதற்கு சரியான வாய்ப்புகள் அமையாததும் ஒரு காரணம். ஒருவேளை நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நமக்கு அந்த வாய்ப்புகள் அமைந்து விட்டால் நம்மால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் அதற்காக மெனக்கிட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி முழு பலத்தையும், முழு அறிவையும் பயன்படுத்தினோமானால் இதோ இந்தச் சிறுவன் வெற்றிக் கனிகளை தொட்டுப் பறித்ததை போல நாமும் தொட்டுப் பறிக்க முடியும்!

ஒரு நாள் வேட்டையாடுவதற்காக சிறுவனும் அவனுடைய தந்தையின் காட்டுப்பகுதிக்குச் சென்றனர். நெடுந்தூரம் சென்றும் அன்று அவர்கள் கண்ணில் எந்த விலங்குகளும் படவில்லை. நேரம் ஆக ஆக கொண்டு சென்றிருந்த உணவும், நீரும் குறையத் தொடங்கியது. இவ்வளவு தூரம் அலைந்துவிட்டோம், ஆனாலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது அவர்களுக்கு மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தாகம் வேறு அதிகமாக இருந்தது. எனவே அவனுடைய தந்தை முற்றிலும் தீர்ந்து போன தண்ணீர் பாட்டிலில் நீரை நிரப்புவதற்காக அச்சிறுவனின் கையில் வில்லையும் அம்பையும் கொடுத்து விட்டு அருகில் உள்ள நீர் நிலையை தேடிச் சென்றார்.

நெடுநேரம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த சிறுவனுக்கு திடீரென இலைகள் அசையும் சத்தம் கேட்கவே மெதுவாக எழுந்து பார்த்தான். அங்கே மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. நன்கு வளர்ந்து கொளுத்த மானாக இருந்த அதை பார்த்ததும் இதை வேட்டையாடினால் எப்படியும் ஒரு வாரத்திற்கு நமக்கு உணவு பஞ்சம் தீர்ந்துவிடும் என நினைத்தான் சிறுவன். ஆனால் இதனை எப்படி வேட்டையாடுவது? நமக்கு தான் வில் அம்பை சரியாக உபயோகிக்க தெரியாதே! தந்தையைப் பார்த்து ஓரளவு கற்றிருக்கிறோம், ஆனாலும் அவர் உதவி இல்லாமல் இதுவரை தானாக வில் அம்பை பயன்படுத்தியதில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தான்.

இதையும் படியுங்கள்:
வாழ்வை வடிவமைக்கும் காலங்கள்!
Success

அந்த மானும் அவன் இருப்பதை கவனிக்காமல் அங்கு நெடு நேரம் புல் மேய்ந்து கொண்டே இருந்தது. ஆனாலும் தண்ணீர் எடுக்க போன, அவன் தந்தையோ வரவே இல்லை. நன்கு வயிறு நிறைய புற்களை மேய்ந்த பின் மான் அந்த இடத்தை விட்டு மெதுவாக நகர ஆரம்பித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அந்த சிறுவன் இதற்கு மேல் தன் தந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நமக்கு கிடைத்த இந்த உணவையும் விட்டு விடுவோம்! என நினைத்து மெதுவாக வில் அம்பை எடுத்து குறிபார்க்க ஆரம்பித்தான். மானின் கழுத்துப் பகுதியை குறி பார்த்து அம்பை விடும் வேளையில் திடீரென மான் துள்ளி குதித்து விட்டது. மானின் கழுத்துப் பகுதியில் பாய வேண்டிய அம்பு அதன் கால் பகுதியில் பாய்ந்ததோடு அருகில் உள்ள மரத்தையும் சேர்த்து துளைத்து விட்டது.

காலில் பாய்ந்த அம்பு மரத்தோடு சேர்த்து சொருகிக் கொண்டதால் மானால் அந்த இடத்தை விட்டு அசைய முடியவில்லை. அந்த நேரம் பார்த்து அவனது தந்தையும் அங்கு வந்து விட்டார். உடனே நடந்த சூழலை புரிந்து கொண்டு அவனது தந்தை விரைவாக செயல்பட்டு மானைப் பிடித்துக் கொண்டார். உரிய நேரத்தில் கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்ட சிறுவனின் செயலை மனதாரப் பாராட்டிய தந்தை அவனை அன்போடு அரவணைத்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
அன்பென்னும் ஆக்க சக்தி!
Success

நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்பது மழைக்காலங்களில் சில சமயங்களில் வானில் தோன்றி மறையும் வானவில்லை போன்றது தான். எனவே வாய்ப்புகள் கிடைக்கும் அந்த காலங்களிலே மிகச் சரியாகப் பயன்படுத்தி கொண்டோமானால் நம் வாழ்க்கைப்பாதை முன்னேற்றத்தின் அடுத்த படியை நோக்கி நகர்ந்து விடும். ஒருவேளை அது வெற்றி எனும் அடுத்த படியை அடையாமல் போனால் கூட அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் அடுத்து வரும் செயலை மிகச் சிறப்பாக செய்வதற்கு நமக்கு உதவும்! எனவே வாய்ப்புகள் எனும் வரங்களை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வின் முன்னேற்றத்தை நோக்கி பயணத்தை தொடங்குங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com