வீட்டை ஆளவும், நாட்டை ஆளவும் தேவையான பண்புகள் குணங்கள் பல. உண்மை, நேர்மை, இனிமை, கனிவு, கருணை, பாசம் இப்படிப் பட்டியலிடலாம்.
இவற்றையெல்லாம் சுருக்கி, ஒரு சொல்லாகச் சொல்வதென்றால், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரே பண்பைச் சொல்வதென்றால் - அதை அன்பு என்று கூறலாம்.
அன்பு இல்லை என்றால் மனிதர் இல்லை. உறவு இல்லை. குடும்பம் இல்லை. சமூகம் இல்லை. நாடு இல்லை. உலகம் இல்லை.
அன்பே மனித வாழ்க்கைக்கும் உலக இயக்கத்திற்கும் அடிப்படை உயிர் உள்ள ஓர் உடம்பு அன்பினால் செயல்படுகிறது. அன்பினால் வாழ்கிறது.
அன்பு மென்மையானதாகத் தோன்றும். ஆனால் அதன் வலிமை அதிகம்; கல்லை விட அதிகம். இரும்பை விட அதிகம். இதற்குத் தண்ணீரை உவமையாகச் சொல்லலாம்.
தண்ணீர் எளிதானது. தண்ணீர் பலமற்றது. இப்படி நினைக்கிறோம். உண்மையில் தண்ணீரின் சக்தி பெரிது. தண்ணீர் பாய்ந்தால், அதைத் தடுக்கும் சக்தி எதற்கும் இல்லை. அது எதையும் தாக்கி உடைக்கும். மாளிகைகள் மட்டுமல்ல, மலைகளைக் கூட விழுங்கும், மூழ்கடிக்கும்." நீர்மிகின் சிறையும் இல்லை" என்பது சங்கப் பாடல் வரி.
தண்ணீர் மிகுதியாகப் பெருகினால் அதைத் தடுக்கும் சக்தி எதற்கும் இல்லை என்பது பொருள். அன்பின் ஆற்றலை, அளவை, ஆதிக்கத்தை அருட்பாவில் விளக்குகிறார். இராமலிங்க அடிகள்.
அன்பினால் யானையை ஆளலாம். கரடி, புலி, சிங்கத்தைக் கட்டிப் போடலாம். பெரும் வல்லமை பெற்ற அரசர்களை, அரக்கர்களை வெல்லலாம். சர்வ வல்லமை பொருந்திய ஆண்டவனையும் ஆட்டிப் படைக்கலாம்.
நீங்கள் அன்பு என்னும் பண்பை பெறுங்கள். அன்புடையவராகுங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். அன்பை நீங்கள் எங்கே செலுத்துகிறீர்களோ அங்கிருந்துதான் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
அன்பு ஒரு வகையில் எதிரொலி போன்றது. அன்பு செலுத்தினால் அந்த அன்பு திரும்பி வரும். உடனே வரலாம் கொஞ்சம் பொறுத்து வரலாம். ஆனால் நிச்சயம் வரும். அன்பு என்பதை பாசம் என்றும் சொல்லலாம். நேசம் என்றும் சொல்லலாம். மனிதர்களை நேசியுங்கள். நேசிப்பதற்கு யோசிக்க வேண்டியது இல்லை. நேசம் உங்களுக்கு எப்போதும் நல்லதே செய்யும்.