
குழந்தை அழுகிறது. துன்பத்தை வெளிப்படுத்துவதற்கு, அதற்கு தெரிந்த ஒரே வழி அழுவதுதான். அழும் குழந்தையின் அழுகையை ஓய வைப்பதற்கு என்ன செய்வதென்று யாரும் நமக்குச் சொல்லித்தருவதில்லை.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியில் போகிறோம். விளையாட்டுக் காட்டுகிறோம்; வேடிக்கை காட்டுகிறோம். அதைப் பார்க்கும் குழந்தை அழுகையை மறந்து சிரிக்கத் தொடங்கி விடுகிறது. அதாவது துன்ப உணர்ச்சியிலிருந்து அதன் கவனம் திசை திருப்பப்படுகிறது.
சாதாரணமாக அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான் இது. இதில் பெரிய மனோதத்துவ உண்மை அடங்கியிருக்கிறது. வெளிக்காட்சிகளைப் பார்த்து அதில் ஒன்றிப் போகும்போது மனதில் நிறைந்துள்ள கவலையும் அல்லது துன்ப உணர்ச்சியும் தானாகவே நம்மை விட்டு நீங்கிவிடுகிறது.
நம்மையறியாமலே இந்த உண்மையைத்தான் குழந்தை அழும் அதன் விஷயத்தில் கடைபிடிக்கிறோம். ஆனால் பெரியவர்களாகிய நாம் அது ஒருவேளை அது குழந்தைத்தனம் என்று எண்ணியோ என்னவோ நம்முடைய வாழ்க்கையில் இந்த எளிய உண்மையை ஏற்றுச் செயல்பட மறுக்கிறோம்.
இந்த அடிப்படை உண்மை நம்மை பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் சோர்வை மறக்க, கவலைகளைப் போக்க கடற்கரைக்கு போகிறோம். பொழுதுபோக்கில் ஈடுபடுகிறோம். ஆனால் அவ்வாறு செல்லும்போது குழந்தைக்குள்ள ஒரு குணம் மட்டும் நமக்கு இருப்பதில்லை.
காட்சிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே குழந்தை தன்னுடைய மனதை அதில் லயிக்க விட்டு விடுகிறது. பெரியவர்களான நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை. கவலையை மறப்பதற்காக வெளியில் செல்லும்போது கூடவே மறக்காமல் கவலையையும் நம்மோடு அழைத்துச்செல்கிறோம்.
குழந்தைக்கும் நமக்குமுள்ள மிகப்பெரிய வேறுபாடு இதுதான் ஆகவேதான் இயேசுநாதர் சொன்னார் - ‘நீங்கள் குழந்தைகளைப் போல ஆகாமல் கர்த்தருடைய சாம்ராஜ்யத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியாது.
இயேசு கிறிஸ்துவின் இந்த வாசகம் மிகப்பெரிய வாழ்க்கை உண்மையை உணர்த்துகிறது. மனத்தால் நீங்கள் குழந்தைகள் ஆகவேண்டும் என்கிறார். மோட்ச சாம்ராஜ்யத்தை வெளியில் போய்த் தேடவேண்டும் என்பதில்லை. நாம் இருக்குமிடத்தையே நம்மால் மோட்சமாகவும் ஆக்கிக்கொள்ள முடியும். இடங்களில் மாற்றம் ஏற்படுவதில்லை; இடங்களை நாம் எப்படிப்பார்க்கிறோம் என்பதில்தான் மாற்றம் ஏற்பட வேண்டும்.
ரவீந்திரநாத் தாகூர் மோட்சத்தைப்பற்றி சொல்லுகின்றபோது, 'அது உனக்குள்ளேயே இருக்கிறது' என்றார்.
மகிழ்ச்சியில் மனத்தின் பங்கு மிகப்பெரியது. மகிழ்ச்சி என்பது ஓர் உணர்வு. இந்த உணர்வை புற விஷயங்கள் மட்டுமே கொடுத்துவிட முடியாது 'விரும்பியது கிடைக்கவில்லையானால் கிடைத்ததை விரும்பக் கற்றுக்கொள்' என்பார்கள்.
உங்களுக்கு அமைந்த வாழ்க்கையை நீங்கள் நேசிக்கக் கற்று கொண்டுவிட்டால் மகிழ்ச்சி தானாகவே உங்களைத் தேடிவரும். தேடிவருமென்று சொல்லுகின்றபோது வெளியிலிருந்து அது வருவதாக அர்த்தமில்லை. மகிழ்ச்சி உங்கள் உள்ளத்தில் தானாகவே சுரக்க ஆரம்பிக்கும்.
நீங்கள் முழுமையான அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமானால் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையை ரசிப்பது என்பது இன்பத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணியாகும்.