உங்களுக்குப் பிடிக்காத காரியத்தை மற்றவர்கள் செய்யும்போது உங்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. உங்கள கோபம் நண்பர் மீது இருக்கலாம். ஏன் கடவுள் மீது கூட இருக்கலாம். மற்றவர்களால்தான் கோபம் வருகிறது என்று நினைக்கிறீர்கள்? அது எங்கே உற்பத்தியாகிறது. வெளியிலா? இல்ல, உங்களுக்குள்தான் வேர் பிடித்திருக்கிறது. அதன் மூலம் சாதிக்க முடியும் என்று அதை ஒரு கருவியாகக் கொள்கிறீர்கள். ஆனால் அதை அடுத்தவர் மீது ஏவும் போது அவர் மீது ஏற்படுத்தும் பாதிப்பை விட உங்களுக்கல்லவா அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் கோபத்துக்கு அடிப்படைக் காரணமாக மற்றவர்கள் அல்ல, நீங்கள்தான் என்பதை உணர்ந்து விட்டீர்களானால், அந்தக் கோபம் எப்பேர்பட்ட முட்டாள்தனம் என்பது புரியும்.
ஒருவர் கழுதையை வாங்கினார். அதை விற்றவர் "தயவு செய்து இதை அடித்து உதைத்து வேலை வாங்காதீர்கள். அன்பாகச் சொன்னாலே இது புரிந்து கொள்ளும்" என்றார். மறுநாள் கழுதையை வாங்கியவர் அதனிடம் சென்று "வா,கண்ணா வேலைக்குப் போகலாம்" என்றார். அது அசையவில்லை. கெஞ்சினார், கொஞ்சினார், எதற்கும் அது மசியவில்லை. அவருக்கு கோபம் வந்தது. விற்றவனை அழைத்து வந்தார். அவர் சுளீரென்று ஒரு பிரம்படி கொடுத்ததும் அது எழுந்து வேலைக்குச் தயாரானது. வாங்கியவர் "நான் இப்படி அதை அடித்ததில் லையே. அன்பாகச் சொன்னாலே கேட்கும் என்று என்னை ஏன் ஏமாற்றினாய்" என்றார். அதற்கு அவன் "ஐயா, இப்பவும் நான்சொல்கிறேன். அன்பாக பேசினாலே போதும். ஆனால் கழுதையின் கவனத்தை நம் பக்கம் திருப்ப ஒன்றிரண்டு சவுக்கடிகள் தேவைப்படும்" என்றார்.
நாமும் மற்றவர்களை நெறிப்படுத்த இப்படி வேகமாக தட்ட வேண்டி வரலாம். ஆனால் அதற்கு கோபம் அவசியமில்லை. உங்களுக்குக் கீழ் இருப்பவர் அலுவலக விதிகளுக்கும் புறம்பாக நடந்துகொள்ளும் சமயத்தில் நீங்கள் சும்மாயிருக்க முடியாது. நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். ஆரம்பத்திலிருந்து அவரிடம் நீங்கள் அன்பை செலுத்தியிருக்கலாம். உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை வளர்ந்திருக்கும். அத்தியாவசியமான சூழ்நிலையில்தான் நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளார் என அவர் உணர்வார். ஆனால் உங்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் வக்கிரமான சந்தோஷத்திற்காக நடவடிக்கை எடுத்தீர்களானால், அவர் உங்கள் மீது காழ்ப்பை வளர்ப்பார். தன் கை ஓங்குவதற்காக காத்திருப்பார்.
உலகத்தில் அதிகாரத்தால் ஆள் நினைக்கும் இடங்களில் பல புரட்சிகள் இப்படித்தான் வெடிக்கின்றன. நீங்களே சொல்லுங்கள். உங்களை ஆள நினைப்பவரை பிடிக்குமா? அல்லது நண்பனைப்போல் அணைத்துக் கொள்பவரைப் பிடிக்குமா?.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக செயல்பட வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் அடிப்படைத் தன்மையான அன்பை அசைத்து விடாமல் பார்த்துக் கொண்டால் யாருக்கும் வலி இல்லாமல் உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியும்.