சிலர் வீட்டில் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். சத்தம் போடாதே, வாயை மூடு என்றாலும் கேட்கமாட்டார்கள். சில பெரியவர்களை அழைத்து சபையில் நின்று மணமக்களை வாழ்த்த சொன்னால் கூட எனக்கு சபை நடுக்கம் அதிகம் என்னால் பேச முடியாது என்று விலகிச் செல்பவர்கள் இருக்கிறார்களா? என்றால் இருக்கிறார்கள்தான்.
அதுபோல் பள்ளி பருவத்தில் திருக்குறள் போட்டியில் கலந்து கொண்ட இரண்டு மாணவிகளில் ஒருவர் 100 குறள் ஒப்பிக்க வேண்டியதற்கு 120 குறள்களை படித்து நன்றாக மனப்பாடம் செய்து எங்களிடமெல்லாம் ஒப்பித்து சரளமாக மேடையில் பேசுவதற்கு தன்னை தயார்படுத்தி வைத்திருந்தாள். மேலும் அவள்தான் எப்பொழுதும் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குவாள். அனைவரிடமும் அன்பாக பழகுவாள். ஆதலால் அவளைப் பற்றிய மதிப்பீடு எல்லோருக்கும் அதிகமாக இருந்தது. அவள்தான் ஜெயிப்பாள் என்று அனைவரும் முழு நம்பிக்கையுடன் இருந்தோம்.
இன்னொரு மாணவி பள்ளியில் போட்டிக்கென்று கொடுத்திருந்த 100 குறள்களை மட்டுமே படித்திருந்தாள். அவள் யாரிடமும் ஒப்பித்து ஒப்பீடு பார்க்கவில்லை. வகுப்பிலும் அமைதியாகவே இருப்பாள். ஆதலால் அவளைப் பற்றிய மதிப்பீடு எல்லோருக்கும் மிகவும் தாழ்வாகவே இருந்தது. பேசா மடந்தையாக இருக்கும் இவள்
போட்டிகளில் கலந்து கொள்கிறாள் என்றால் சபை நடுக்கம் இன்றி அவளால் பேச முடியுமா? வகுப்பறையிலேயே யாரிடமும் பேசாதவள் சபையில் பேசி விடுவாளா? என்ன தைரியத்தில் கலந்து கொள்கிறாள்? .இவளால் ஜெயிக்க முடியுமா? என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்கள்.
திருக்குறள் போட்டி அன்று ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மேடையில் குறள்களை ஒப்பிக்க ஆரம்பித்தனர். சிலர் அழகாக படித்ததை ஒப்பித்தார்கள். சிலர் அதை பாடலாக பாடி ஒப்பித்தார்கள். சிலர் ஆடலுடன் பாடி ஒப்பித்தார்கள். இப்படி செய்தவர்கள் குறைந்த அளவே ஒப்பித்தார்கள் .
என் வகுப்பு தோழியர்களின் முறை வரும்போது 120 குறள் படித்த மாணவி அவையைக் கண்டு நடுங்கி முப்பது குறள்களை மறந்து கூறாமலே வெளியேறினாள். மேலும் குறட்பாக்களை கூறும் பொழுது பயத்தில் சில குறள்கள் குரல்வளையை விட்டு வெளியே வராமலே உள்ளே சென்று விட்டது.
கடைசியாக வந்த இன்னொரு தோழி எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி குறட்பாக்களை எல்லோரும் ரசிக்கும் வண்ணம் நிதானமாக பிரித்து பொருள் விளங்கும் வண்ணம் ஒப்பித்தாள். சிறிது கூட சபை நடுக்கமே இல்லை. இடை இடையே நடுவர்கள் ஏதாவது ஒரு குறளுக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்ட பொழுது சிறிதும் பயமும் தயக்கமும் இன்றி பதில் கூறினாள். அவளின் அந்த முதல் மேடை அனுபவத்தை கண்டு அனைவரும் விக்கித்து போனோம்.
கடைசியாக அவளுக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது. அதற்காகவும் அவள் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. எப்பொழுதும்போல் அமைதியாகவே இருந்தாள். அதன் பிறகு ஆளைப் பார்த்து எடை போடுவதை அனைவரும் நிறுத்திக் கொண்டோம். ஆழ்கடல் எப்பொழுதும் அமைதியாக இருக்கிறதே ஏன்? என்று உணர்த்திய சம்பவம் அதுதான். அடக்கம் அமரருள் உய்க்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.
செல்லும்பாதை சரியாக இருந்தால்
வேகமாக அல்ல
மெதுவாக ஓடினாலும்
வெற்றி தான்!
வாழ்க்கை குறுகியது வாழுங்கள்
கோபம் தேவையற்றது அதை தூக்கி எறியுங்கள்
பயம் மோசமானது அதை எதிர்கொள்ளுங்கள்
நினைவுகள் இனிமையானவை அதை ரசியுங்கள்!