
வாழ்க்கையில் அனைவருக்கும் வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் என்ன என்பதை அவரவர் சூழல் தகுதிக்கேற்ப தேடுவதிலேயே பெரும்பாலும் கழிந்து விடும். ஆனால் அன்றைய பெரியோர்கள் சொன்ன பொதுவான சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் இன்றும் வெகு சீக்கிரம் வெற்றியைத் தேடிப்பெறலாம்.
அதில் ஒரு வழிதான் அதிகாலை துயில் எழுவது. இதனால் பெறும் நன்மைகள் ஏராளம் என்கிறது நமது ஆன்மிகக் குறிப்புகள். என்ன நன்மைகள் பெறலாம் என்பதைப்பற்றி படித்து திரட்டிய குறிப்புகள் இங்கு.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முந்தைய சுமார் 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலமான பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் எந்த செயலும் நன்மையே தரும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த நேரத்தில் வெளிப்புற மனித சக்திகள் குறைவாகவும், அண்ட சக்திகள் உச்சமாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
நல்வாழ்வுக்கான திருமணம் முதல் புதுமனை புகுவது மற்றும் அலுவலகங்கள் பூஜை வரை நல்ல நிகழ்வுகளை பிரம்ம முகூர்த்தத்தில் நிகழ்த்துவதால் பலமடங்கு பலன் தருவதாகவும், வாழ்வை வளமாக மாற்றும் சக்தி கொண்டதாகவும் ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் நம்பப்படுகிறது.
கற்பகத்தரு நேரம் எனவும் சொல்லப்படும் அதிகாலை 4 மணியின் அமைதியான குழ்நிலை காரணமாக முந்தைய நினைவுகளின்றி மனம் அமைதியாக இருக்கும் .இதனால் சிந்தனை கூர்மை, விழிப்புணர்வு, தியானம் மூலம் பிரஞ்ச பேராற்றலோடு இணைதல் என மிக அற்புதமான தருணங்களை அனுபவிக்கலாம்.
அதிகாலை தரும் அற்புத மேஜிக்குகளாக இந்த 6 விஷயங்களை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். வெற்றி தரும் SAVERS எனப்படும் இந்த 6 வழிமுறைகள் இதோ உங்களுக்காக
S - Silence (prayer, Meditation) அமைதி
வெளி உலக பரபரப்புகள் இல்லாத அமைதியான அந்த நேரத்தில் முகத்தில் புன்னகையுடன் தூய்மையான இடத்தில் ஆழ்ந்த சுவாசத்துடன் தியானிப்பது. தியானம் மட்டுமே நம்மை உள்முக பயணத்திற்கு அழைத்துச் சென்று வாழத்தேவையான புத்துயிர் தரும்.
A - Affirmation ( positive thoughts) நேர்மறை எண்ணங்கள்
நம்மை நாமே உற்சாகப்படுத்த நமது இலக்குகளை நிர்ணயித்து அதை மனதில் உருவேற்றலாம். எழுதி வாசிக்கலாம். நான் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கு எல்லாம் நன்மையாகவே நடக்கிறது. சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். நான் மிகவும் திறமையாக செயல்படுகிறேன் என்பது போன்ற நேர்மறை வார்த்தைகளை நமது சூழல் மற்றும் தேவைக்கு ஏற்ப சொல்லலாம்.
V - Visualisation (Dreams) கனவு
நமது இலக்கு என்ன? அதற்கான செயல்கள் எப்படி இருக்க வேண்டும்? குறிப்பாக நமக்கு என்ன வேண்டும் என்பதை மனத்திரையில் காட்சிப்படுத்தி அதில் வெற்றி பெறுவதைப்போல கற்பனை செய்து மகிழ்வுடன் அதனை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது. இதனால் நமது லட்சியம் பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்பட்டு உண்மை ஆகும்.
E - Exercise - உடற்பயிற்சி
உடற்பயிற்சிகள் இன்றி ஆரோக்கியம் இல்லை. ஆரோக்கியம் இன்றி வெற்றி சாத்தியமில்லை என்பதால் எளிமையான நடை பயிற்சி, சூர்ய நமஸ்காரம் என்று தினமும் பழக்கப்படுத்தி கொள்ளலாம்.
R - Reading ( learn or read to get knowledge) வாசித்தல்
ஆழ்மனதில் ஆழமாக பதியும் அதிகாலை வாசிப்பு மிகப்பெரிய வரம். . புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். தன்னம்பிக்கை புத்தகங்கள் முதல் ஆன்மீக ஈடுபாடுடன் பகவத்கீதை வரை உங்களுக்கு எதில் விருப்பமோ அதை வாசிக்கலாம்.
S - Scribing ( to do task) குறிப்புகள்
வெற்றிக்கு முதன்மையான படிதான் குறிப்பெடுத்துக் கொள்ளுதல். நமது இலக்கு என்ன? இன்னும் நம்மை எப்படி மாற்றிக்கொள்வது, இன்றைய நிகழ்வுகளுக்கான திட்டமிடல் என்ன, மென்மேலும் முன்னேற என்ன செய்யவேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வரிசைப்படுத்தி தெளிவாக எழுதி உங்கள் கண்களில் படும்படி வைத்துக் கொள்ளுங்கள். என்ன? வெற்றிக்கான அதிகாலை எழுவதன் ரகசியங்கள் தெரிந்துவிட்டதா? இதை கடைப்பிடித்து நீங்களும் வெற்றியாளராக மாறலாமே.