மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். நம் மனமே நம்முடைய வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம். வெற்றிக்கு நீங்கள் எங்கு எப்படி இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. உங்களுக்கு வெற்றிபெற தேவையான மனவலிமை இருக்கிறதா என்பதுதான் முக்கியம்
அந்தப் பெண் கைப்பந்து விளையாட்டில் பல வெற்றிகளை கண்டவர். அவருக்கு நேர்ந்த கொடூரத்தால் பெரும் பாதிப்பை அடைந்தாலும் அவர் முடங்கிவிடவில்லை. மனவலிமையுடன் போராடி உலக அளவில் சாதனை படைக்கத் தூண்டியது.
1988 ல் உத்தரப்பிரதேசத்தில் பிறந்த (Arunima Sinha) அருணிமா சின்ஹா. கைப்பந்து விளையாட்டில் சிறந்தவராக இருந்த இவர் ஒருமுறை பணி நிமித்தம் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு இரவு நேர ரயிலில் பயணம் செல்கிறார். அப்போது திருடர்கள் இவரது கம்பார்ட்மெண்டில் ஏறி தங்கச் சங்கிலியை பறிக்க முயல அருணிமா அவர்களுடன் போராடி அவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். திருடர்கள் அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளினர். குப்புற விழுந்த அவர் முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் மயக்கம் அடைந்தார்.
அந்த ரயில்வே தண்டவாளத்தில் மேலும் ஒரு ரயில் வரும் சத்தம் கேட்டு நினைவு திரும்பி அடுத்த தண்டவாளத்திற்கு செல்ல முயன்றபோது மீண்டும் ஒரு ரயில் அவரை புரட்டி போட்டு சென்றது. இதனால் அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டது. அவரது இலட்சியக் கனவான எவரெஸ்ட் சிகரத்தை தொடும் கனவு நிஜமாவதற்குள் இப்படி ஒரு கொடூர சம்பவம்.
தன்னம்பிக்கை மிகுந்த பெண் அவர் விடுவாரா? ஒரு நல்ல மனிதர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கடும் முயற்சிகள் வலிகளுக்குப் பின் அவரின் ஒரு கால் மட்டும் காப்பாற்றப்படுகிறது.
இவரது நிலைமை தெரிந்து அங்கு வந்த மாமாவிடம் தன் நிலையை எண்ணி வருந்த அவரோ "இமயமலை ஏறுவதற்கு ஒரு கால் போதுமானது" என்று சொல்ல அதையே வேதவாக்காக மனதில் பதித்துக்கொண்டார்.
ஒரு காலை வைத்துக்கொண்டு ஒன்றறை வருடங்கள் பயிற்சி செய்து வழிகாட்டியுடன் ஏறினார். பல சிரமங்கள் பல தடைகள் அவரது ஒரு கால் ஸ்டீல் இரும்பினால் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் அவ்வப்போது மேலே ஏறும்போது அது உறைந்து போகும் அதனை சூடேற்றி பின்னர் மேலே ஏறுவார்கள். மலை உச்சி அடையும் தருணத்தில் கொண்டு சென்ற சிலிண்டரில் ஆக்சிஜன் தீரப்போகிறது எனும் நிலை. அனைத்தும் கடந்து எவரெஸ்ட் சிகரத்தை தொடுகிறர். அவரது லட்சியக்கனவு பலித்தது.
அவருடன் வந்த வழிகாட்டியை வைத்து தனது வெற்றியை ஒரு நிமிட வீடியோவாக எடுக்க சொல்கிறார்.
மீடியாக்கள் சூழ அவர் தன்னுடைய வீடியோவை எங்கு வெளியிட்டார் தெரியுமா? எங்கு தனது கனவு, லட்சியம், தன் பலம் எல்லாம் இழந்து தான் இறந்து விடுவோம் என்று நினைத்தாரோ, அந்த ரயில்வே டிராக் அருகில் சென்று தன் கதையை இந்த உலகத்திற்கு பதிவு செய்தார்.
எவரெஸ்ட் உயரத்தை தொட்ட முதல் மாற்றுத்திறனாளி பெண் எனும் பெருமையுடன் இன்று உலகமே அவரை போற்றுகிறது. ஆம் மனமிருந்தால் எத்தகைய சூழலிலும் நிச்சயம் சாதிக்க முடியும் என்று உணர்த்துகிறது இவரது கதை. ஏன் நம்மாலும்தான்.