பணம் இருந்தால் பிரச்னையா?

Motivation Image
Motivation ImageImage credit- pixabay.com

-மரிய சாரா

ணம் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம், மனமிருந்தால் போதும் என்பதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாவதில்லை. பணம் மட்டும்தான் என்பதும் சரியல்ல, அதேபோல் பணம் இல்லை யென்றாலும் வாழலாம் என்பதும் சரியல்ல. பணத்தின் தேவை இல்லையென்றால், யாரும் படிக்கவேண்டாம், யாரும் வேலைக்குச் செல்லவே வேண்டாம், யாரும் எங்கும் செல்லவேண்டாம்.

அதீத பணம் ஆபத்துத்தான். பேராசையும் பெரும் நஷ்டம்தான்.  ஆனால், உணவு, உடை, இருப்பிடம், நீர், காற்று போல பணமும் அத்தியாவசியம்தான். பணம் தேவை இல்லை என்று தைரியமாகப் பேசுபவர்கள் எல்லோருமே தங்களுக்கான தேவைகளை நாள்தோறும் நிறைவேற்றிக்கொள்ளும் பணபலம் உள்ளவர் களாகத்தான் இருப்பார்கள். உண்மையில் தேவையில் இருக்கும் இயலாதவர்களைக் கேட்டுப்பார்த்தால் தெரியும் பணம் எவ்வளவு முக்கியம் என்று.

மனிதனுக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும் என்கிற உந்துதல் மட்டுமே அவனை உயிர்ப்புடன் வைக்கும். உயர்ந்த குறிக்கோள் இல்லாவிட்டால் அவன் பிறந்ததே வீண் என ஆகிடும். ஒவ்வொரு மனிதனும் தான் இருக்கும் நிலையிலிருந்து உயர வேண்டும்; சாதிக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை.

ஒரு தொழிலில் சாதித்து பெரும் பணக்காரரானவரைப் பார்த்து, அவரைப்போல உழைக்கவேண்டும், அவரைப்போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறேதும் இல்லை. ஆனால், அவரைப்போல உழைக்கவும் தயாராக இருக்கவேண்டும். அவரைப்போல சில தியாகங்களை செய்யவும் தயாராக இருக்கவேண்டும்.

அதை விடுத்து, அவன் இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கிறான், அவ்வளவு சொத்து வைத்திருக்கிறான், அவனுக்கு என்ன, என்னதான் செய்கிறானோ,  எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வருகிறதோ என அவன் மீது பொறாமைகொள்வது என்பது நமது இயலாமையை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.

வாழ்க்கையில் உழைத்து சாதித்தவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறுவதில் தவறேதும் இல்லை. இயலாமையில் புலம்பி கழிப்பதில் பலன் ஏதும் இல்லை. பணக்காரன் எல்லாம் நிம்மதியாக இல்லை, அவன் நிம்மதியாக தூங்குவதில்லை என்று சொல்லுவதை எல்லாம் நம்பாதீர்கள்.

பணம் உள்ளவனுக்குத்தான் பிரச்னைகள் வரும் என்றெல்லாம் இல்லை. பிரச்னைகள், சோதனைகள் இவையெல்லாம் மழை வெய்யிலைப்போல. அவற்றிற்கு இருப்பவன், இல்லாதவன் எல்லோருமே ஒன்றுதான். நமக்கு பிரச்னைகள், எதிர்பாராத துன்பங்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்ள துணிவோடு பணமும் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் டேஸ்ட்டில் எளிதான மைசூர் பர்ஃபி செய்யலாமா?
Motivation Image

மனமிருந்தால் மட்டும் போதும் மகிழ்வுடன் வாழலாம், பணம் தேவையில்லை என்று இனி உங்களுக்கு யாரேனும் அறிவுரை சொன்னால், அவரிடம் உங்களுக்கு ஒரு பிரச்னை என்று சொல்லி பணம் கேட்டுப் பாருங்கள்; அப்போது தெரியும் அவர் பணத்திற்குத் தரும் மதிப்பு உங்களின் நல்ல மனத்திற்கு தரும் மதிப்பைவிட பல மடங்கு அதிகம் என்று.

பணம் அத்தியாவசியம். அதை உழைத்துச் சம்பாதியுங்கள், சம்பாதித்ததைச் சற்று உங்களுக்கு என சேர்த்தும் வையுங்கள். சம்பாதிப்பதில் மற்றவருக்கு என்று மட்டுமே இல்லாமல் உங்களுக்காகவும், உங்கள் சந்தோஷத்திற்காகவும் சிறிது செலவு செய்துகொள்ளுங்கள். பணம் தேவை இல்லை என்பவனை சற்று தள்ளியே வையுங்கள்.

ஒரே ஒருமுறை பிறக்கிறோம். கிடைத்திருக்கும் இந்த வாழ்வை நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக வாழ்ந்துவிட்டு செல்வோம். பணம் தேவை மட்டுமல்ல, அது அத்தியாவசியம் என்பதை அறிந்து உழைப்போம், வாழ்வில் வெற்றி பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com