
வெற்றி பெற்ற மனிதர்கள் மற்றும் புகழ்பெற்ற மனிதர்களுக்கு என்று சில குணாதிசயங்கள் உணடு. அவர்கள் வாழ்வில் பெற்ற வெற்றியின் காரணமாக தங்களுடைய உடல் மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் அவற்றை வெளிப்படுத்துவார்கள். அந்த ஒன்பது விதமான குணாதிசயங்கள் என்ன என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. அமைதியான குரலில் பேசுதல்;
நிறைகுடம் தழும்பாது என்ற பழமொழிக்கேற்ப மிகச்சிறந்த வெற்றியாளர்கள் எப்போதும் அமைதியான மற்றும் உறுதியான குரலில் பேசுவார்கள். மிக வேகமாக பேசுவதையோ தேவையில்லாமல் குரல் உயர்த்துவதையோ தவிர்க்கிறார்கள். அந்த தொனி அவர்களது அதிகாரத்தையும் நம்பகத்தன்மையும் வெளிப்படுத்துகிறது. அதனால் பிறர் அவர்களை மிக எளிதாக பின்பற்றவும் செய்கிறார்கள்.
2. கண் தொடர்பு;
வெற்றியாளர்கள் எப்போதும் மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள். அது அவர்களின் கண்களில் நன்றாக வெளிப்படும். பிறரிடம் உரையாடும்போது அவர்களது கண்களை பார்த்துதான் பேசுவார்கள். எளிதாக தொடர்பு கொள்ளவும் அவர்களை மதிப்பு மிக்கதாக உணரவைக்கவும் கண்களைப் பார்த்து பேசுவது முக்கியமானது.
3. தற்பெருமை பேசுவதில்லை;
வாழ்வில் மிகச்சிறிய விஷயங்களை செய்பவர்கள்தான் அதைப்பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டு தற்பெருமை பேசுவார்கள். ஆனால் அதிகம் சாதித்த வெற்றியாளர்கள் தங்களது சாதனைகளைப் பற்றி பேசுவதில்லை. மாறாக அவர்களது செயல்கள் மற்றும் சாதனைகள் அவர்களது பெருமையை பேசுகின்றன. இதனால் பிறரிடம் மரியாதையும் பாராட்டும் அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைக்கிறது.
4. குறைவான பேச்சு, அதிகமான கேட்டல்;
அதிக தன்னம்பிக்கை மிக்க வெற்றியாளர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் தமது உரையாடல்களை விட கேட்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். இதனால் எப்போதும் கற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். வலுவான உறவுகளை உருவாக்கவும் பிறர் மீது உண்மையான அக்கறை காட்டவும் கவனித்துக் கேட்பது அவசியம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
5. ஒப்புதலுக்கு காத்திருப்பதில்லை;
தாங்கள் செய்ய நினைக்கும் காரியம் அல்லது அதிக சவால்கள் நிறைந்த ஒரு வேலையை செய்வதற்கு அவர்கள் வெளிப்புறப் பாராட்டுகள், அல்லது ஒப்புதல்களை நம்பி இருப்பது இல்லை. அதற்காக காத்திருப்பதும் இல்லை. தன்னுடைய சுயமதிப்பு, திறமை போன்றவற்றில் அதிக நம்பிக்கை வைப்பதால் தங்களுடைய முடிவுகளில் உறுதியாக இருக்கிறார்கள்.
6. தெரியாது என்று சொல்லத்தயங்குவதில்லை;
தங்களுக்கு ஏதாவது தெரியாத போது அதை ஒப்புக்கொள்ள அவர்கள் தயங்குவதில்லை. இது அவர்களுடைய மனத்தாழ்மை மற்றும் தன்னம்பிக்கையின் உயர்ந்த அடையாளமாக இருக்கிறது. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வதற்கு பதிலாக 'நான் கற்றுக்கொள்ள இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது' என்கிற வெளிப்படைத் தன்மை அவர்களுக்கு வெற்றிகளை தேடித்தருகிறது.
7. தோல்விகள், சவால்களை ஏற்றுக்கொள்ளுதல்;
வெற்றியாளர்கள் எப்போதும் தோல்விகளை பின்னடைவுகளாக நினைப்பதில்லை, மாறாக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆகவே பார்க்கிறார்கள். தங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளவும் சவால்களை வெற்றியை நோக்கிய படிக்கட்டுகளாகப் பயன்படுத்தவும் அவர்களுக்குத் தெரியும். இதனால் கடினமான சூழ்நிலைகளில் கூட அவர்களது மனநிலை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
8. ஆரோக்கியமான நட்பு வட்டம்;
வெற்றியாளர்கள் எப்போதும் எல்லாரையும் கவர முயற்சி எடுப்பதற்குப் பதிலாக தங்கள் குறிக்கோள் அல்லது மதிப்புகளுடன் ஒத்துப்போகும் நபர்ககளுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களது நட்பு வட்டம் மிக மிக ஆரோக்கியமானது. அவர்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் நண்பர்களிடமிருந்து சிறந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.
9. சுயபரிசோதனை;
வெற்றியாளர்கள் மற்றும் தன்னம்பிக்கை மிக்கவர்களின் முக்கியப் பழக்கம் சுய பரிசோதனை செய்து கொள்ளுதல். அவர்கள் தங்கள் செயல்கள், முடிவுகள் மற்றும் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பீடு செய்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவிவதோடு மட்டுமல்லாமல் தங்கள் இலக்குகளுடன் எப்போதும் இணைந்திருப்பதை உறுதி செய்கிறது.