
மதிப்பும் மரியாதையும் தானாக வருவதில்லை. நம்முடைய ஒழுக்கமான நடத்தையாலும், சுயமான சிந்தனையாலும் பிறர் நம்மை மதிக்கும்படி செய்யவேண்டும். மதிப்பும் மரியாதையும் பிறர் கொடுக்கும் பொழுது நம்முடைய அகங்காரமும் தற்பெருமையும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் யார் நம்மை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்களோ நாமும் அவர்களை அந்த இடத்திலேயே வைத்துக்கொள்ளப் பழகினால் நம்முடைய மதிப்பும் மரியாதையும் கெடாது. அவ்வை கூறியதுபோல் மதியாதார் தலைவாசல் மிதிக்காமல் இருப்பதே நல்லது.
நாம் பழகும் விதமும், பிறரை மதித்து நடத்தும் விதமும்தான் நம்மை பிறர் மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் வைக்கும். பிறரை அன்புடனும் மரியாதையுடனும் நடத்துவது அவசியம். நாம் பழகும் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும், மனிதாபிமானத்தையும் அங்கீகரித்து அவர்களை கவனமாக மரியாதையுடன் கையாள வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் மூலமும், உடல் மொழிகளின் மூலமும் மரியாதையை வெளிப்படுத்தலாம்.
நம்மை பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே மற்றவர்களையும் நாம் நடத்த வேண்டும். இந்த உணர்வு மட்டும் இருந்தால் போதும் மதிப்பும் மரியாதையும் தானாகவேத் தேடிவரும். பிறரை அவமதிப்பதும், குறைத்து மதிப்பிடுவதும், முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும், பிறர் முன்னிலையில் மரியாதைக் குறைவாக நடத்துவதும் அவர்களுக்கு நம் மேல் மதிப்பும் மரியாதையும் குறைவதுடன் விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தும்.
அடிப்படை மரியாதை கூட இல்லாதது சுமுகமான உறவுகளைக் கூட பாதிக்கும். மரியாதை என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை மதிக்க வேண்டுமென்றால் நாம் அதற்கு தகுதி உள்ளவர்களாக, நம் செய்கைகள் மூலம் தயாராக இருக்க வேண்டும். நாம் இயல்பாக செய்கின்ற செயல்தான் மதிப்பானதாக இருக்க வேண்டுமே தவிர மதிப்பிற்காக எடுத்துக் கூட்டி ஒரு செயலை செய்யக்கூடாது.
ஒருவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட வேண்டுமானால் அவரது தோற்றத்தைக் கொண்டோ, வசதியைக்கொண்டோ ஏற்படுவதில்லை. அவர் தன்னைச் சுற்றியுள்ள சக மனிதர்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதை பொறுத்தே ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் தன்னை பிறர் மதிக்க வேண்டும், மரியாதை தர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.
அது மனித இயல்புதான். ஆனால் ஒருவரைப் பற்றிய உயர்ந்த எண்ணம் அவர் எதிரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரை நினைக்கும் பொழுது நம் மனதில் மரியாதை தோன்ற வேண்டும். அப்படி இயல்பாய் அவர்களின் குணநலன்களைப் பார்க்கும்பொழுது அவர்கள் மீது நமக்கு ஒரு மதிப்பு ஏற்படுகிறதே அதுதான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை.
மரியாதை என்பது ஒருவர் செய்யும் நற்செயலுக்காக பிறர் அவர் மீது கொண்டிருக்கும் மதிப்பு. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மதித்து மரியாதையுடன் நடத்த வேண்டிய பண்பினை பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலிருந்தே கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அனைவரையும் மதித்து அன்பு செலுத்தும் பண்பு வளரும்.
உண்மைதானே நண்பர்களே!