சிலர் எப்போதும் பிரச்னைகளையே கூறுவார்கள். வெயிலாக இருக்கிறது. மழையாக இருக்கிறது. இது சரியாக இல்லை என்றே கூறுவார்கள். இந்தமாதிரி நெகடிவாக புலம்புபவர்கள் மகிழ்ச்சியை அடையவே முடியாது. நாம் எதையும் பார்க்கும் விதத்தில்தான் சந்தோஷம் கிடைக்கும். எதிர்மறையாக பார்த்தால் எல்லாம் கெட்டதாகத் தெரியும்.
சிலர் தங்களை எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களோடு ஒப்பிட்டே பார்ப்பார்கள். இதையே நீங்கள் தொடர்ந்து செய்தால் உங்கள் மகிழ்ச்சிக்கான தேடலைத் தொலைத்து விடுவீர்கள். உங்களுடைய வெற்றியை பற்றி கூட மறந்து விடுவீர்கள்.
பலர் கடந்த காலத்தில் நடந்ததையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். கடந்த காலத்தைப் பற்றி வருந்துவதாலும், எதிர்காலம் பற்றிய பயத்தாலும் நிகழ்காலத்தின் சந்தோஷத்தை இழந்து விடுகிறார்கள்.
பெரும்பாலான மக்கள் பொருட்களின் மீது ஆசை வைத்துக்கொண்டே இருப்பார்கள். புதிய பொருள் வாங்கியதும் இன்னும் வேறு எதிலாவது ஆசைபடுவார்கள். இது தொடர்கதையாக இருக்கும். இந்த மகிழ்ச்சி தற்காலிகமானது.
தன் சொந்த நலனில் அக்கறை காட்டாதவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உங்களுக்கு ஏற்படும் வருத்தமான விஷயங்களுக்காக மனம் கலங்காதீர்கள். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நம் அனுபவங்களால் நமக்கு வளர்ச்சி ஏற்படுகிறது. எப்போதும் பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதுவும் உங்களுக்கு சந்தோஷத்தைக் தராது.
நீங்கள் நன்றி உணர்வோடு இல்லையென்றால் மகிழ்ச்சி தங்காது. நமக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்கள் குறித்து நன்றி உணர்வோடு இருந்தால் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்..
உங்கள் உறவுகளோடு இணக்கமாக இல்லையென்றால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உங்கள் உறவுகளை ஒதுக்கி வைத்து தனி ஆளாக நீங்கள் பணம், வெற்றி மற்றும் பல விஷயங்களை அடைந்தாலும் மகிழ்ச்சியை பெற முடியாது.