இன்றைய சமூக வலைத்தள காலத்தில், எல்லோரும் எதையாவது பேசிக்கொண்டே இருக்க விரும்புகிறார்கள். கருத்து சொல்வது என்பது ஒரு கடமை போலாகிவிட்டது. ஆனால், எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பவர்களே வரலாற்றில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் பேச்சுத் திறனை வைத்து அவர்களை அறிவாளி, முட்டாள் என இரண்டாகப் பிரித்துள்ளார்.
அரிஸ்டாட்டில்: கிரேக்கத்தின் ஸ்டாகிராவில் பிறந்து, பிளாட்டோ போன்ற ஜாம்பவான்களிடம் பாடம் கற்று, மாவீரன் அலெக்சாண்டருக்கே குருவாகத் திகழ்ந்தவர் அரிஸ்டாட்டில். இவர் வெறும் தத்துவங்களை மட்டும் காற்றில் பறக்கவிடாமல், அறிவியல், அரசியல், மற்றும் நெறிமுறைகளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தவர். மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது சமநிலையான மனநிலையில் இருக்கிறது என்று நம்பியவர். அவருடைய பல கருத்துகளில், பேச்சுத்திறன் பற்றிய கருத்து இன்றும் நம் அன்றாட வாழ்விற்குத் தேவைப்படுகிறது.
அறிவாளிக்கும் முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
"அறிவாளிகள் தங்களிடம் சொல்ல ஏதேனும் விஷயம் இருந்தால் மட்டுமே பேசுவார்கள்; ஆனால் முட்டாள்கள் தாங்கள் பேசியே ஆக வேண்டும் என்பதற்காகப் பேசுவார்கள்," என்கிறார் அரிஸ்டாட்டில். இதன் அர்த்தம் மிக ஆழமானது. ஒரு அறிவாளி, வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தவன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும், நோக்கம் இருக்கும். ஆனால், சிந்திக்காமல் பேசுபவர்கள், அமைதியை நிரப்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் உளறிக் கொட்டுவார்கள்.
ஒரு கூட்டத்தில் கவனித்துப் பாருங்கள். அதிகம் சத்தம் போடுபவரிடம் சரக்கு இருக்காது. "குறை குடம் கூத்தாடும்" என்ற பழமொழி இவர்களுக்குப் பொருந்தும். தேவையற்ற பேச்சு என்பது வெறும் சத்தம் மட்டுமல்ல; அது ஆபத்தானதும்கூட. அதிகம் பேசும்போது நாம் பிறரைப் பற்றிப் புறம் பேசுகிறோம், அல்லது தவறான தகவல்களைப் பரப்புகிறோம். இது இறுதியில் நம் மீதான மரியாதையைக் குறைத்துவிடும்.
வாழ்க்கையில் இதைக் கடைபிடிப்பது எப்படி?
வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் மத்தியிலோ ஒரு விவாதம் நடக்கும்போது, உடனடியாகப் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசரத்தை விடுங்கள். இதுதான் புத்திசாலித்தனத்தின் முதல் படி. மற்றவர்கள் சொல்வதை முழுமையாகக் காது கொடுத்துக் கேட்பதே பாதிப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்.
அறிவாளிகள் மௌனத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். தேவையில்லாத விவாதங்களில் மௌனமாக இருப்பது, முட்டாள்தனமான பேச்சை விட மேலானது. நீங்கள் பேசும் வார்த்தை, அந்தச் சூழலை மேம்படுத்துமா அல்லது மோசமாக்குமா என்று ஒரு நொடி யோசித்துவிட்டுப் பேசினாலே போதும், பல உறவுச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
நாக்கு, மிகச் சிறிய உறுப்புதான், ஆனால் அது உருவாக்கும் விளைவுகள் மிகப்பெரியவை. அரிஸ்டாட்டில் சொன்னது போல, பேசுவதற்கு முன்பு சிந்திப்பது ஒரு கலை. வெறும் சத்தத்தை உருவாக்குபவராக இல்லாமல், அர்த்தமுள்ள கருத்துகளைப் விதைப்பவராக மாறுவோம். எப்போது பேச வேண்டும் என்பதை விட, எப்போது பேசாமல் இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பவனே உண்மையான ஞானி.