
என்ன செய்கிறோம் என்பதை அறிந்து செய்யவேண்டும். அதையும் விரும்பி செய்யவேண்டும். எதை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. செய்வன திருந்த செய் என்பார்கள் பெரியவர்கள். அத்துடன் செய்யும் காரியத்தை விரும்பி செய்தால்தான் அதாவது முழு ஈடுபாட்டுடன் செய்தால்தான் வெற்றி கிடைக்கும். விரும்பி செய்தால் தோல்வி கிடையாது. விருப்பம் இல்லாமல் செய்யும் எந்த ஒரு செயலும் விரும்பிய பலனைத்தராது.
ஒரு காரியத்தை செய்ய விரும்பினால் அதை நாம் ஏன் செய்ய விரும்புகிறோம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதுவே நம்மை செய்யத் தூண்டிவிடும். அத்துடன் ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் செய்ய முடியும் என்று நம்பவேண்டும்.
அப்படி நாம் முழுதாய் நம்பும்போது நம் மனம் அதை செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். செய்ய வேண்டியதை விரும்பிச் செய்ய உந்துதல் கொடுக்கும். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால் போதும். ஆரம்பத்திலேயே முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
இலக்கை நிர்ணயித்துக் கொள்ளும்பொழுது பெரியதாக இலக்குகளை உருவாக்கிக் கொள்ளாமல் சிறிய இலக்குகளாக பிரித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால் ஒவ்வொரு சிறிய இலக்கையும் அடைந்ததும் உந்துதல் அதிகரிக்கும். நம்மால் முடியும் என்ற எண்ணம் அதிகரிக்கும். பிறகென்ன! கவலைப்படாமல் செய்ய வேண்டிய செயலை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டால் எளிதாக முடியும்.
ஒரு செயலை செய்ய விரும்புகிறோம். ஆனால் அதில் சலிப்படையாமல் இருக்க சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள சுவாரஸ்யம் கூடும். உதாரணத்திற்கு உங்களுக்கு சமைப்பது ரொம்ப பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் தினம் ஒரே மாதிரி சாம்பார், ரசம், பொரியல் என்று செய்து சலிப்படையும் பொழுது மாறுதலுக்காக ஒரு நாள் பிரியாணி, ராய்தா, ஒரு நாள் வெரைட்டி ரைஸ் என்று மாற்றி யோசித்து செய்ய ஆரம்பித்தால் நாம் செய்யும் சமையலில் விருப்பம் அதிகரிக்கும். அடுத்து புதிதாக என்ன செய்யலாம் என்று யோசிக்க வைக்கும். செய்வதை விரும்பி செய்யும்பொழுது அலுப்பு ஏற்படாது.
எந்த ஒரு செயலையுமே வேண்டா வெறுப்பாக செய்தால் சரியாக வராது. விரும்பி செய்யும்பொழுது அந்த வேலை ஒரு சுமையாகத் தெரியாது. கட்டாயத்தின் பேரில் செய்யும் போது தான் அதில் ஒரு ஈர்ப்பு இருக்காது. உடல் எடை கூடிவிட்டது. நாளை முதல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு படுக்கிறோம். ஆனால் காலையில் எழுந்ததும் செய்யத் தோன்றாமல் வேறு வேலை பார்க்க சென்று விடுகிறோம். அதையே விரும்பிச்செய்ய ஆரம்பித்தால்?
நம்மை உந்தும் சக்தியாக ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு இன்னும் இரண்டு மாதத்தில் நான்கு கிலோ எடை குறைக்க வேண்டும் என்று ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்க வேண்டும். எடை குறைந்தால் பார்க்க எவ்வளவு ஃபிட்டாக, அழகாக இருக்கும் என்று எண்ணலாம்.
மாடிப்படி ஏறி இறங்கும் பொழுது மூச்சிரைக்காது, பிள்ளைகளுடன் சேர்ந்து ஓடி விளையாடலாம் என உடற்பயிற்சியால் வரும் அனைத்து நல்ல விஷயங்களையும் நினைவில் கொள்ள சிறந்த மனநிலையுடன் கூடிய அதிக ஆற்றல் கிடைக்கும். தோழிகளிடம் பாராட்டும் பெறலாம் என்று எண்ண ஆரம்பித்தாலே ஊக்கம் வந்து செய்ய நினைத்த காரியத்தை விரும்பி செய்ய ஆரம்பித்து விடுவோம். பிறகென்ன வெற்றி நம்வசம்தான்!