
ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் திறமைசாலிகளே! திறமைசாலிகள் ஒருபோதும் ஓய்வெடுக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற முயல்வார்கள். இவர்களில் வெற்றியின் உச்சத்தை தொடும் திறமைசாலிகள்.
மனிதனை மனிதன் மதிக்கும் அந்த பக்குவம் திறமைசாலிகளுக்கு நிறையவே உண்டு. அவர்கள் வெற்றிக்கு பின்னால் இருப்பதும் அவர் பிறரை மதிப்போடு நடத்துவதும் ஒரு காரணமாக இருக்கும். பிறர் மனதை நாம் வென்றுவிட்டால் நமக்கு வெற்றி என்பது மிக சுலபமாக கிடைத்துவிடும். இவற்றையெல்லாம் உணர்த்தும் ஒரு குட்டிக்கதை இப்பதிவில்.
வாண்டர்லீப் என்பவர் நியூயார்க்கில் நேஷனல் சிட்டி பேங்கில் உயர்ந்த பதவியில் அமர்ந்தார். அவருக்குத் தனி அறையும், உதவியாளரும், நல்ல ஊதியமும் வழங்கப்பட்டன. வேலையில் சேர்ந்த முதல் நான்கு நாட்கள் அவருக்கு எவ்விதமான வேலையும் தரப்படவில்லை. அவர் மிகுந்த அனுபவசாலி என்பதால் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார். எப்போதாவது சில சிக்கலான சூழ்நிலையில் அவரது உதவி தேவைப்படும் என்றளவில் அவருக்குப் பதவியைத் தந்திருந்தார்கள்.
நான்கு நாட்கள் பொறுத்திருந்த வாண்டர்லீபுக்கு சும்மா இருக்க முடியவில்லை. வங்கியின் மேலாளரைப் பார்த்து இந்த நாட்களில் ஒரு திட்டம் வகுத்துள்ளதாகவும், இதை விளம்பரம் செய்து அறிமுகம் செய்தால் நல்ல லாபம் உங்களுக்குக் கிடைக்கும் என்றார்.
வங்கி மேலாளர் "நமது வங்கிக்கு விளம்பரமா? தேவையில்லையே!'' என்று மறுத்தார். ஆயினும் வாண்டர்லீப் தனது திட்டத்தைக்கூற வேறுவழியின்றி அதை விளம்பரம் செய்து பார்த்தது வங்கி. கடன் பத்திரங்களை அறிமுகம் செய்யும் இந்தத் திட்டம் மூலம் வங்கியின் லாபம் பல மடங்கு பெருகியது. நான்கு நாட்கள் சும்மாயிருந்தாலும் சுகமான திட்டத்தைக் கண்டறிந்த வாண்டர்லீப் பின்பு அந்த வங்கியின் தலைவரானார்.
திறமைசாலிகள் ஒருபோதும் ஓய்ந்திருக்கமாட்டார்கள். அவர்களை ஓய்வெடுக்கச் சொன்னாலும் வேறு ஒரு வேலையைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள். சுறுசுறுப்பாக வேலை செய்யும் மனித மன இயந்திரங்களை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாது.
''ஒரு மனிதனை மதித்தால் அவன் செயல்பாடு அதிகரிக்கும்' திறமைசாலிகள் அப்படித்தான் முன்னேறுகிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.