மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்: உருளைக்கிழங்கு பிரபலமானதும் இப்படித்தான்!

Think Differently
Think Differently
Published on

வெற்றியை நோக்கிப் பயணிப்பவர்கள் சரியானப் பாதையில் செல்லவில்லை என்றால், வெற்றி என்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும். ஒருவர் எவ்வளவு முயற்சி செய்தும் வெற்றியை அடைய முடியவில்லை என்றால், மாற்றி யோசிக்க வேண்டும். மாற்றி யோசித்து அதில் வெற்றி கண்ட ஒரு வெற்றியாளனைப் பற்றிய சுவாரஸ்யத் தகவலைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

இன்று நமக்கெல்லாம் மிக எளிதில் கிடைக்கும் உருளைக்கிழங்கு முன்பெல்லாம் பன்றிகளுக்கும், கால்நடைகளுக்கும் கொடுக்கப்படும் உணவாகத் தான் இருந்தது. இந்த உணவு எப்படி இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த உணவாக மாறியது என்று ஆச்சரியமாக உள்ளதல்லவா! உங்களைப் போலத் தான் நானும் ஆச்சரியப்பட்டேன் இந்த உண்மை தெரியும் போது. உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்தமான உணவுகளின் பட்டியலில் சேரக் காரணமாக இருந்தவர் தான் பிரான்ஸ் மருந்தாளுநர் ஆன்டோயின் அகஸ்டின் பார்மென்டியர். சரியான நேரத்தில் இவர் மாற்றி யோசித்ததால் தான் இன்று அனைவரது வீட்டு சமையலறையிலும் உருளைக்கிழங்கு இருப்பதற்கு முக்கிய காரணம்.

பிரான்ஸ் நாட்டில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிய பார்மென்டியர், பிரஷ்யா நாட்டு இராணுவத்தால் ஒரு போரின் போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவரை அவமானப்படுத்த சிறை அதிகாரிகள் அப்போதைய பன்றியின் உணவான உருளைக்கிழங்கை சாப்பிடக் கொடுத்தனர். பன்றியின் உணவையா சாப்பிடுவது என தயங்கிய பார்மென்டியர், அதிகப்படியான பசியின் காரணமாக வேறு வழியின்றி சாப்பிட்டார். உருளைக்கிழங்கை சாப்பிட்ட பிறகு அதன் ருசியை உணர்ந்து, ஒன்று விடாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், உருளைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துகளை ஆராய்ச்சி செய்தார்.

ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு உருளைக்கிழங்கு தான் என பார்மென்டியர் சொன்னதை அப்போது யாருமே காது கொடுத்து கேட்கவில்லை. இருப்பினும், அவர் இம்முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. மக்களுக்கு உருளைக்கிழங்கின் சுவையைக் காட்டி விட்டால் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள் என ஒரு திட்டம் தீட்டினார். இதன்படி தன்னுடைய பெரிய பண்ணையில் உருளைக்கிழங்கைப் பயிரிட்டு, இராணுவ வீரர்களை காவலுக்கு வைத்தார். இதனால் இவரது பண்ணையில் பெரும் மதிப்பு மிக்க பொருள் விளைவிக்கப்படுகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவியது.

இதையும் படியுங்கள்:
பெண்களே கொஞ்சம் மாற்றி சிந்தியுங்கள்!
Think Differently

இரவில் இராணுவக் காவல் இல்லாத நேரத்தில், மக்கள் பலரும் பண்ணைக்குள் நுழைந்து உருளைக்கிழங்கைத் திருடி, சமைத்துச் சாப்பிட்டு பார்த்தனர். இதன் சுவையை உணர்ந்த மக்கள், உருளைக்கிழங்கை விரும்பத் தொடங்கினர். இதனால் வெகு விரைவிலேயே ஐரோப்பா முழுவதும் மக்கள் விரும்பும் உணவாக உருளைக்கிழங்கு மாறியது. இதன் மூலம் குறைந்த விலையில் ஊட்டச்சத்து மிக்க உணவு மக்களுக்கு கிடைத்தது.

தொடக்கத்தில் உருளைக்கிழங்கு சுவை மிகுந்த உணவு என பார்மென்டியர் சொன்ன போது யாரும் கேட்காத நிலையில், மாற்றி யோசிக்கும் திறன் காரணமாக இவரது முயற்சியில் வெற்றியைக் கண்டார். இன்று உலகம் முழுவதும் சிப்ஸ் முதல் பிரெஞ்சு ஃப்ரை வரை உருளைக்கிழங்கு தான் பயன்படுத்தப்படுகிறது.

எந்த ஒரு செயலிலும் நமக்கு வெற்றி கிடைக்காமல் போனால், சோர்ந்து விடாமல் அதில் வெற்றியை எப்படிப் பெற முடியும் என மாற்றி யோசித்துப் பாருங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com