சிலர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ வேண்டும். பதவி வேண்டும். கௌரவம் வேண்டும். எந்த சங்கடமும் இல்லாமல் பொருள் ஈட்ட வேண்டும் என நினைப்பது உண்டு.
இது சாலையில் எந்த வாகனமும் இல்லாதபோது நான் வண்டி ஓட்டுவேன் என்று கூறுவதைப் போன்றது. எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. சிறிது விலகி இருந்து மனதை நிர்மலமாக்கி ஆழமாக சிந்தித்தால் விடைகாண முடியும். அதிலேயே முழுவதுமாக மூழ்கினால் மூச்சு திணறி விடுவோம்.
ஒரு அரசர் இருந்தார். பக்கத்து நாட்டு அரசர் அவருக்கு வாட்டசாட்டமான யானையை பரிசாக அளித்தார். அது மிகப் பெரிய யானை. அதன் எடையை அறிய அரசருக்கு ஆவல் ஏற்பட்டது. அந்தக்காலத்தில் நடைமேடை தராசு இல்லை. மந்திரிகளிடம் யோசனை கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மந்திரி ஒருவரின் 10 வயது மகன் தான் அதன் எடையை சரியாகக் கணித்துச் சொல்வதாகக் கூறினான். அரசரும் வாய்ப்பு கொடுத்தார்.
அவன் அந்த யானையை அருகில் இருந்த நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கு ஒரு படகில் யானையை ஏற்றினான். படகு தண்ணீரில் ஆழ்ந்தது. தண்ணீரின் மட்டத்தை குறிக்க படகில் குறியீடு செய்தான். பிறகு யானையை படகிலிருந்து இறக்கினான். பெரிய பெரிய கற்களை படகில் ஏற்றினான். ஏற்கனவே குறியீடு செய்த நீரின் அளவு வரும்வரை கற்களை படகில் நிரப்பினான். யானை ஏறியபோது எந்த அளவு படகு தண்ணீரில் மூழ்கியதோ அந்த கோடு வரும்வரை கற்களைக் போட்டான். பிறகு கற்கள் ஒவ்வொன்றாக எடுத்து எடைபோட்டு பிறகு எடையைக் கூட்டினான். பிறகு அரசனிடம் இதுதான் யானையின் எடை என்று கூறியபோது எல்லோரும் அவன் திறமை கண்டு வியந்தார்கள். எல்லோரும் யானையை ஒட்டுமொத்தமாக பார்த்தார்கள். அதனால் எடையைக் கணிக்க முடியவில்லை.
ஆனால் சிறுவனோ யானை பல எடைகளின் கூட்டுத்தொகை என எண்ணினான். எளிதில் விடை கண்டான். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் அதைச் சின்னச் சின்ன செயல்களாகும் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்க திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.
மகத்தான செயலைச் செய்ய சரியான திட்டமிடும்போது பாதி நிறைவேறியதாக பொருள். பிறகு அதை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும். செயலைச் செய்யும்போதே மகிழ்ச்சி ஏற்பட வேண்டுமே தவிர செய்த பிறகு மகிழ்ச்சி வரும் எண்ணக்கூடாது.
சில நாடுகளில் நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கே மூளைப் புயல் என்ற நிகழ்ச்சியை நடத்துவதுண்டு. அதில் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தீர்வு சொல்லலாம். அனைவரும் கூட்டத்தில் சமமாகவர்களாகக் கருதப்படுவார்கள். அங்கு எந்த யோசனையையும் முட்டாள்தனமானது என்று நிராகரிக்கவோ நிந்தனை செய்யவோ கூடாது என்ற நிபந்தனை. எதிர்பார்த்தபடி வாழ்க்கை அமையப் பெறாதவர்கள் பலர் உள்ளனர். சில நேரங்களில் நம் எதிர்பார்ப்பை விட மேன்மையானவற்றும் நடப்பதுண்டு. எதிர்பார்த்தவை கிடைக்காவிட்டாலும் வாழ முடியும்.
ஆனால் வாழ்க்கையே பறிபோய்விட்டால் எதையும் சாதிக்க முடியாது. பிரச்னைகளுக்கான தீர்வு வெளியே இருந்து வரும் என்று நினைப்பதால் மகிழ்ச்சி பறிபோகிறது. தீர்வு நம்மிடம்தான் உள்ளன. பிரச்னையை முழுமையாக அறிய முயன்றால் அதில் தீர்வும் ஒளிந்து கொண்டிருப்பதை துல்லியமாக அறிய முடியும். பிரச்னைகள்தான் வெற்றியை உருவாக்குகின்றன.