
நாம் எதை மனதில் ஆழமாக நினைக்கிறோமோ அதுதான் நம் மனநிலை (Mindset). இலக்கு தெளிவாக இருந்தால் நமது செயல்கள் இலக்கு நோக்கி பயணிக்கும். Mindset தெளிவாக இல்லாவிட்டால், எதுவுமே சரியாக வராது. குழப்பம்தான் மிஞ்சும். Mindset கூட நம் தகுதி, சூழ்நிலை, பொருளாதார வலிமை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நல்ல இலக்காக சரியாக நிர்ணயிக்க வேண்டும். உங்களுக்கு என்று ஒரு குறிக்கோள் வேண்டும். அதை நோக்கி நகர்ந்து செல்லவேண்டும். உடனே உங்களது குறிக்கோள் நிறைவேறாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதை அடைய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தங்களின் பலங்களையும், பலவீனங்களையும் நன்கு அறிந்து உங்களின் பலவீனங்களை களைவதுதான் உங்களின் ஆரோக்கியமான மனநிலையின் முதல்படி. உங்களைப் பற்றி நீங்களே வேறு யாரையாவது பற்றி உங்களை எழுதச் சொன்னால் எப்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் எடை போடுவீர்களோ அப்படி எடை போட்டு எழுதுங்கள்.
சில மணிநேரம் கழித்து நீங்கள் எழுதியதைப் படித்துப் பாருங்கள். நீங்களே இது வரை தெரிந்து வைத்திராத ஒரு மனிதரைப் பார்ப்பீர்கள். உங்களுக்கு உங்களது நிறையும், குறைகளும் துல்லியமாக தெரியும். குறைகளை கழியுங்கள். நிறைகளை கூட்டுங்கள்.
மனக்குறையும், மனம் சம்பந்தமான பிரச்னைகளையும் கொண்டவர்கள் தங்களைப் பற்றிய குறைவான அபிப்பிராயம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். நாம் நமது மனதை எந்த அளவு அமைதியாக வைத்திருக்கிறோமோ, அந்த அளவு விரைவாக செயலில் முன்னேறிசெல்ல முடியும். அலைபாயும் மனதால் செயலில் கவனம் செலுத்த முடியாது. நம்முடைய செயல் முழுமையாக நிறைவடைய மனதை அமைதிப்படுத்துவது இன்றியாமையாதது. மேற்கொள்ளும் செயலில் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும்.
ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும். அறிவுக் கூர்மையால் கூட சில செயல்களை சாதிக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது. ஆனால், சமயோசிதப் செயலாளால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஒரு மனிதன் வெற்றிக்கு அறிவுக் கூர்மை 20 சதவீதம் மட்டுமே அணுசரனையாக இருக்கிறது, சமயோசித ஆளுமையோ 80 சதவீதம் துணை புரிகிறது. பரபரப்பான சூழலில் பதற்றப்படாமல் சமயோசிதமாகச் சிந்தித்து நடந்துகொள்ள வேண்டும். சமயோசித புத்தி உள்ளவன் எந்தச் சூழலிலும் பிழைத்துக் கொள்வான். வாழ்வில் வெற்றியும் பெறுவான்..
வெற்றியும் தோல்வியும் தானாக வருவதில்லை அதை நாம்தான் உருவாக்குகிறோம். உழைப்பவன் வெற்றி பெறுகிறான் உழைக்க மறுப்பவனிடம் தோல்வி தஞ்சம் கொள்கிறது.
முயற்சித்து பார்ப்பதில் ஒரு நன்மை உண்டு, இது நம்மால் முடியாது என்பது புரிந்துவிடும். ஒரு விஷயத்திற்காக முயற்சிப்பதுதான் முறையானது. ஆனால் அது தொடர்ந்து உங்களுக்கு தோல்விகளை தந்தால், தவறு உங்களிடம்தான். அந்த முயற்சியை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் அதை கைவிட்டு விடுவது நல்லது. ஆமாம் தோல்விகளால் தங்களை திருத்திக் கொள்கிறவர்கள்தான் இறுதியில் வெற்றியை தழுவுகிறார்கள்.
வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேண்டியது கடுமையான உழைப்பு. அதற்கு நீங்கள் தயாரா? முன்னேறியவர்களில் முக்கால்வாசிப் பேர் கடுமையான உழைப்பாளிகள்தான். முன்னேறவேண்டும் என்ற உள்ளுணர்வும், கடுமையான உழைப்பும் கொண்டவன் முன்னேறாமல் இருக்க முடியாது.
தன்னைப் புரிந்துகொண்ட பின் வாழ்க்கையை கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. தாழ்வு மனப்பான்மைதான் முன்னேற்றத்திற்கு முதல் முட்டுக்கட்டை. அதை முதலில் தகர்த்தெறியுங்கள். தனக்குப் பிடித்தமான வேலையை மனநிறைவோடு செய்பவன் வெற்றிக்கு வழிவகுக்கிறான்.