
நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்ப்பார்க்கும் மாற்றத்திற்கு சின்ன சின்ன செயல்களே ஆரம்ப புள்ளியாக இருக்கும். நாம் ஒரு காரியத்தை எவ்வளவு பெரிதாக செய்கிறோம் என்பது முக்கியமில்லை. என்ன செய்கிறோம் என்பதே முக்கியமாகும். இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் ஒரு முதியவர் கடற்கரையோரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு சின்ன பையன் பெரிய அலைகளால் கரை சேர்ந்த நட்சத்திர மீன்களை தூக்கி கடலில் வீசிக்கொண்டிருந்தான். இந்த முதியவர் அந்த சின்ன பையனிடம் சென்று, ‘நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்.
அந்த சின்ன பையன் முதியவரிடம், ‘இல்லை தாத்தா! இந்த நட்சத்திர மீன்கள் மீது சூரிய ஒளிபட்டால் அது இறந்துவிடும். அதனால்தான் அதை மீண்டும் கடலில் தூக்கி வீசுகிறேன்’ என்று கூறினார். அதைக்கேட்ட அந்த முதியவர்,' இதென்ன அபத்தமாக இருக்கிறது. இந்த கடற்கரை எத்தனையோ கிலோ மீட்டர் தூரம் நீண்டு இருக்கிறது. அதில் எத்தனையோ நட்சத்திர மீன்கள் வந்து கரை ஒதுங்கும். இந்த ஒரு சில நட்சத்திர மீன்களை நீ கடலில் தூக்கி எறிவதால் மட்டும் என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட போகிறது’ என்று கேட்டார்.
இதைக்கேட்ட அந்த சின்ன பையன் தன் கையில் இருந்த மீனைக்காட்டி, ‘இதோ! இதனுடைய வாழ்க்கைக்கு நான் செய்வது பெரிய மாற்றம்தான்’ என்று சொல்லிக் கொண்டே அதை மீண்டும் கடலில் தூக்கிப்போட்டான்.
இந்த கதையில் சொன்னதுப்போல, நாம் ஆசைப்படுவதுப் போல இந்த உலகம் ஒரே நாளில் மாறிவிடப்போவதில்லை. பெரிய மாற்றத்தை எதிர்ப்பார்த்தால், அதை சின்ன சின்ன செயல்களில் இருந்து தொடங்க வேண்டும். அதுவும் அந்த செயலை நம்மிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அப்போதே ஒரு பெரிய மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும். இதைப் புரிந்துக்கொண்டு செயல்பட்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.