

-மரிய சாரா
தலைப்பை பார்க்கும்போது எங்கேயோ கேட்டது போல தோன்றுகிறது அல்லவா? ஆம். கனா திரைப்படத்தில் கதாநாயகியின் தாய் கதாநாயகியிடம் கூறுவார்கள். ஆம் வாழ்க்கையில் பல நேரங்களில் அடம் பிடிக்க தெரிய வேண்டும்.
உயர்ந்த குறிக்கோள், உயரிய லட்சியம் என நம்மில் பலர் முடிவுகளை நன்றாகத்தான் எடுக்கிறோம். ஆனால் அந்த இலக்குகளை நோக்கிய வழி என்பது கரடு முரடானதாகத்தான் இருக்கும் என்கிற நிதர்சனத்தை உணர மறுக்கிறோம். இலக்கு உயர்வானதாய் தேர்ந்தெடுக்கும் அதே சமயத்தில் அதை நோக்கி செய்யப்போகும் பயணத்தின் பாதை மிக எளிதானதாக, குறுகியாதாக, பள்ளம் மேடுகள் அற்றதாக இருக்க வேண்டுமென நினைக்கிறோம்.
அப்படி இருக்கும் வழி எப்படி நன்மை பயப்பதாக இருக்கும்? என்றும் நேர்வழிப் பயணம் தானே நம்மை நிலையான வெற்றிக்கு அழைத்துச்செல்லும்? நேர்வழிப்பயணம் கடினமானது தான். பல தடைகள் வரும். பல தோல்விகள் நம்மை தழுவிடும். இருந்தாலும் அனைத்திலிருந்தும் மீண்டு சென்று இலக்கை அடைவதுதான் நிலைத்த, நீடித்த வெற்றி.
பள்ளியில் 'இவன் எதற்கும் உதவாதவன்' என அவரது ஆசிரியர்களால் சாடப்பட்டவர்தான் தாமஸ் எடிசன். அப்படி உடைக்கப்பட்ட அவர் தான் பின்னாளில் தனது விடா முயற்சியால் பல தோல்விகளுக்கு பிறகு, ஃபோனோகிராஃப் (Phonograph) மின்சார விளக்கு (Electric Lamp) என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான காப்புரிமைகளை வைத்திருந்தார்.
குழந்தைகளின் சொர்க்கமாக இன்று இருக்கும் டிஸ்னி வேர்ல்ட்-ஐ உருவாக்கிய வால்ட் டிஸ்னி, முதலில் அவர் வேலை செய்த இடத்தில் 'உனக்கு கற்பனைத்திறனே இல்லை. உன்னால் எதையும் பெரிதாக செய்யமுடியாது' என்று நிராகரிக்கப்பட்டவர் தான். அவர்கள் பேச்சை கேட்டு, தான் தோல்வியடைந்ததாக அவர் நினைத்து மூலையில் அமர்ந்திருந்தார் என்றால், இன்று அவரால் டிஸ்னி எனும் மாபெரும் குழந்தைகள் உலகத்தை உருவாக்கி 22 ஆஸ்கர்களை தனதாக்கிக்கொள்ள முடிந்திருக்காது.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இவர்களைப் போலத்தான். வெற்றியின் தேடலின்போது தோல்விகள் நம்மை அழையா விருந்தாளிகளாய் வந்து ஆரத் தழுவிடும். அந்த சமயம் மூச்சு முட்டி அய்யோ போதும், இனி என்னால் முடியாது, நான் அழிந்துவிட்டேன் அவ்வளவுதான் என நொறுங்கி விழும் போதுதான் சிறுகுழந்தைகளைப்போல அடம்பிடிக்கும் மனம் நமக்கு தேவைப்படுகிறது.
அட இந்த காரியத்தை என்னைத் தவிர வேறு எவனாலும் வெற்றிகரமாக முடிக்க முடியாது. நான் தான் இதற்கான சரியான ஆள் எனும் மனநிலை மட்டுமே நம்மை உயர்த்திவிடும் ஏணியாக உருவெடுக்கும். அந்த சமயம் நாம் நினைத்த ஆசைப்பட்ட அந்த காரியம் வேண்டும் என திடமாய் அடம்பிடிக்கும் அந்த மனநிலை தான், வழியில் வரும் ஓராயிரம் தடைகளை தகர்த்தெறிந்து, அந்த வெற்றியை நம் வசம் கொண்டு சேர்க்கும்.
ஆகையால் அடம் பிடிக்க பழகுங்கள். வெற்றி கிடைக்கும் வரை மட்டுமல்ல மீண்டும் மீண்டும் வெற்றியை சொந்தமாக்கிக் கொண்டே இருக்கவும் அடம் பிடிக்க பழகுங்கள். நான் நினைத்த என் வெற்றி எனதாக மாறியே ஆகவேண்டும். அதைப்பற்றிய மாற்று சிந்தனையே இல்லை என உங்களுக்கு நீங்களே அடம்பிடித்துச் சொல்லுங்கள். வெற்றி உங்கள் காலடியில்.