கடவுளைக் குறை கூறுவதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன? வண்டிக்காரன் கதை!

இக்கட்டான நேரங்களில் நம் முயற்சியை கைவிடாது நம் புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி, எண்ணங்களை சீராக்கி என்ன செய்தால் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கலாம் என்று யோசித்து செயல்பட வேண்டும்.
Hard work and Success story
Hard work and Success storyAI Image
Updated on

சிலர் எந்தச் செயலையும் சரிவர செய்யாமல் கடவுளிடம் முறையிட்டு எனக்கு கடவுள் நல்வழி காட்டவில்லை என்று குறைபட்டு கொள்வது உண்டு. முயற்சியே செய்யாதவனுக்கு கடவுள் எப்படி அருள்புரிவார். நம் முழு முயற்சியையும் உழைப்பில் காட்டினால் தான் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும். நன்றாக முயற்சி செய்து பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவன் இக்கட்டான நேரத்தில் கடவுளை அழைத்தால் அவர் வழி காட்டுவார். அப்படி கடவுளை அழைப்பதற்கு முன்பாக நம் முழு உழைப்பையும் அந்த செயலில் காட்டி இருக்க வேண்டும். அப்படி காட்டி தோல்வி வரும் பொழுது கடவுளை அழைத்தால் வழி சொல்லுவார். அதுபோல் நடந்த ஒரு கதை இது.

தினசரி மாட்டுவண்டியில் பொருட்களை ஏற்றி தேவையான இடத்தில் சேர்த்து அதில் வரும் வருவாயில் அமைதியாக பிழைப்பை நடத்திக் கொண்டு இருந்தான் ஒருவன்.

அப்படி செல்லும் பொழுது ஒரு நாள் அதிக மழை பெய்து இருந்ததால் சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் அவனுடைய வண்டிச்சக்கரம் புதையுண்டு போயின. வண்டி நிறைய மூட்டைகள். நேரமும் இருட்டி விட்டது.

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கொஞ்சம் படபடப்பான நெஞ்சமுடன் ஆண்டவனே எனக்கு ஒரு வழியும் தெரியவில்லையே என்றான். அவன் இவ்விதம் ஆண்டவனை அழைக்கவும் அவர் உடனே வந்து "எதற்குபா என்னை அழைத்தாய்" வண்டிக்காரனைப் பார்த்து இப்படி கேட்க, அவன் என் வண்டி சக்கரம் சேற்றில் புதைந்து விட்டது என்று கூறினான்.

ஆண்டவன், "வண்டிச்சக்கரம் என்ன? உன் வாழ்க்கைச் சக்கரமே புதையுண்டாலும் கூட நீ தான் முயன்று வெற்றி பெற வேண்டும். நீ உன் வண்டிச் சக்கரம் புதைந்தது பற்றி எண்ணி கவலைப்படுகிறாய். எவ்வளவு பேர்கள் பெரிய பெரிய சிக்கல்களில் எல்லாம் மாட்டிக்கொண்டு தங்கள் முயற்சிகளால் வெற்றி பெற்று முன்னேறி உள்ளார்கள். உன் வண்டிச்சக்கரம் இவ்விதம் சேற்றில் சிக்கி உள்ளதே, நீ என்ன முயற்சியை மேற்கொண்டாய்? உன் தலைப்பாகையை அவிழ்த்து சக்கரத்தில் கொடுத்து தள்ளிப் பார்த்தாயா" என்று கேட்டார்.

இல்லை என்று தலையை அசைத்தான்.

அந்த முன்னிருட்டு வேளையில் சோர்ந்து போய் கொஞ்சம் களைப்புடன் காளைகள் இரண்டையும் அவிழ்த்து வண்டியில் கட்டி விட்டுக் கொஞ்சம் பொறுத்து மீண்டும் காளைகளை வண்டியில் பூட்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமுடன் வண்டியின் முன்புறத்தில் அமர்ந்து சாயவும், அவ்விதமே கண்ணயர்ந்து விட்டான். அவனுடைய ஆழ்ந்த கனவில் தான் இத்தனை காட்சிகளை எல்லாம் கண்டிருந்தான்.

உடனே சோர்வு நீங்கியவனாக எழுந்து, காளைகள் இரண்டையும் வண்டியில் பூட்டியவனாக தன்னுடைய தலைப்பாகையை அவிழ்த்து சுருட்டி தோளுக்கு ஆதரவாக கொடுத்து சக்கரத்தில் தோளை வைத்து தள்ளவும், அதே நேரத்தில் காளைகளும் கொஞ்சம் வேகமாக இழுக்கவும், சேற்றில் புதையுண்ட சக்கரம் சமதளத்தை அடைந்தது. அவன் வண்டியில் ஏறியதும் வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. நம் கனவில் வந்த ஆண்டவன் கூறியது உண்மைதான்.

'நாம் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் ஆண்டவனை அழைத்து என்ன பயன்?' ஆண்டவன் சொல்லியது போல எவ்வளவு பேர்கள் பெரிய பெரிய சிக்கல்களில் எல்லாம் மாட்டிக் கொண்டு தங்கள் முயற்சிகளால் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று எண்ணி அவன் புதியதோர் உற்சாகமுடன் வண்டி ஓட்டிச் சென்றான். தன்னுடைய ஊர் சேர்வதற்கு முன்னால் உள்ள ஊர்களில் எல்லாம் கொடுக்க வேண்டிய மூட்டைகளை எல்லாம் கொடுத்துவிட்டு புத்தொளி பெற்றவனாக வீட்டிற்குச் சென்றான்.

இதையும் படியுங்கள்:
ஜான் பார்தீனின் உண்மை கதை: தன் மீது நம்பிக்கை இருந்தால் என்ன நடக்கும்?
Hard work and Success story

அப்பொழுது அவனுடைய மனைவி இவன் முகத்தில் தெரிந்த புத்துணர்வைக் கண்டு ‘இன்றைக்கு வருமானம் நிறைய வா’ முகம் எல்லாம் பூரிப்பாக இருக்கிறதே என்று கேட்டாள். வருமானம் சுமார் தான் என்றும், உழைப்பதற்கு ஆற்றலையும் ஊக்கத்தையும் தன்னுடைய கனவு மூலம் உணர்த்தியதைப் பற்றியும் கூறி மகிழ்ந்தான்.

மறுநாளில் இருந்தே அவன் உழைப்பு அதிகமாகியது; ஓய்வு ஒழிவு என்பதே இல்லாமல் உழைத்த வண்ணம் இருந்தான். முன்னேற்றம் அவனுடைய வீட்டுக் கதவை தட்டிய வண்ணம் இருந்தது; ஆதலால் அவன் வாழ்வில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று மகிழ்ந்தான் என்பதாக கதை முடியும்.

அதுபோல நாமும் இக்கட்டான நேரங்களில் நம் முயற்சியை கைவிடாது நம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, எண்ணங்களை சீராக்கி என்ன செய்தால் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கலாம் என்று யோசித்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் வாழ்வில் முன்னேறலாம் என்பது உறுதி.

logo
Kalki Online
kalkionline.com