யாரையும் நம்பக்கூடாதா? மனித வாழ்க்கையின் உண்மை முகம் என்ன சொல்கிறது?

நாம் மற்றவர்கள் மீது வைக்கும் முழுமையான நம்பிக்கையும், காட்டும் அன்பும் மட்டுமே, அவர்களிடம் இருந்து நேர்மையான உழைப்பையும் நன்றியுணர்வையும் நமக்குப் பெற்றுத் தரும்.
Positive Thinking
Positive ThinkingAI Image
Updated on

சாதாரணமாக பேசும் பொழுது யாரையும் நம்பக்கூடாது என்று கூறுவது உண்டு. அப்படி யாரையும் நம்பாமல் எந்த மனித இனமும் வாழ்க்கையை வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம். நாம் பயணம் செய்வதற்காக ஒரு ரயிலிலோ அல்லது பேருந்திலோ, விமானத்திலோ ஏறுகிறோம் என்றால் அதை ஓட்டுபவர்களை நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் நாம் அவைகளில் பயணம் செய்ய முடியாது. பள்ளியில் குழந்தைகளை சேர்க்கிறோம். அப்பொழுது அங்கு உள்ள ஆசிரியர்களை நம்பினால் தான் குழந்தைகளை அங்கு சேர்க்க முடியும். ஒரு வேலையை ஒருவரிடம் ஒப்படைக்கிறோம் என்றால் அவர் அந்த வேலையை செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில் தான். இப்படி எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் அந்த நிர்வாகம் சிறப்புற செயல்பட வேண்டும் என்றால் அங்கு பணி புரியும் அனைவர் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ப ஊதியம் கொடுக்க வேண்டும். நன்றாக, யாருமே செய்யாத அளவுக்கு வித்தியாசமான முறையில் திறமையை காட்டி இருந்தால் அவருக்கு ஒரு பாராட்டுதலை வழங்க வேண்டும். அந்த பாராட்டுக்குத் தான் மனது ஏங்கி தவிக்கிறது. அதைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தினால் அங்குள்ள ஒவ்வொரு தொழிலாளியும் தானும் அதுபோல் வளரவேண்டும் என்று முனைவார்கள். ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொருவருக்கும் நல்ல நம்பிக்கை ஏற்படும். எதையும் அலட்சிய படுத்த மாட்டார்கள். நன்றி உணர்வுடன் செயல்படுவார்கள். சிறு சிறு தவறுகளைக் கூட பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மன்னிப்பை வழங்குவார்கள்.

இவையெல்லாம் இருவழிப் பாதை பயணம் என்று தான் கூற வேண்டும். ஒருவரே எல்லாவற்றையும் தாங்கி செல்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. இரண்டு பேரும் ஒருவர் செயலை ஒருவர் உணர்ந்து, அந்த உணர்ச்சிக்கு மதிப்பளித்து, அவர் ஏன் அப்படி செய்கிறார் என்பதை ஆராய்ந்து பார்த்த பிறகு அவரின் மீது நம்பிக்கை வைத்தால் எந்த செயலும் நல்ல செயலாகவே அமையும். அது நல்ல விளைவையே ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
நேர்மறை சிந்தனை: உயர்வான வாழ்க்கைக்கு உரம் போடும் வழிகாட்டி!
Positive Thinking

அதேபோல் மருத்துவரிடம் செல்லும்போது, அங்கு செல்கிறோம். நமக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அவர் கூறும் அறிவுரைகளை அப்படியே ஏற்று நடந்து உடல் நிலையைச் சரியாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சென்றால் எல்லாம் நன்மையாகவே முடியும்.

அதை விடுத்து அந்த டாக்டர் எப்படியோ? அரைகுறை வைத்தியம் செய்வாரோ? அந்த மருந்து நம் உடல் நிலைக்கு ஒத்துவருமா? தவறான மருந்துகளை கொடுத்து விடுவாரோ? என்று பலவாறு யோசித்துச் சென்றால் அந்த அவநம்பிக்கையே நம் உடல்நிலையை மேலும் மோசமாக்கும்.

ஆதலால் எந்த ஒரு விஷயத்தையும் நல்ல நம்பிக்கையோடு துவங்குவோம். அந்த நல்ல நம்பிக்கை நமக்கு நல்வழி காட்டும் என்பது உறுதி. நேர்மறை சிந்தனையும் நற்செயலும் எப்பொழுதும் நமக்கு நல்லதைத் தான் உண்டு பண்ணும்.

இருமனதாய் செயல்பட்ட எந்த காரியமும் வெற்றி அடைந்தது இல்லை;

முழுமனதாய், நம்பிக்கையுடன் செயல்பட்ட எந்த காரியமும் தோல்வி அடைந்தது இல்லை!

என்பதை நினைவில் கொள்வோம்.

logo
Kalki Online
kalkionline.com