சில பலவீனங்களால். தமக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அந்த பலவீனங்களைத் திட்டமிட்டு வெல்லவேண்டும்.
கடந்த காலங்களில் செய்த சிறு தவறுகளால் நாம் மற்றவர்களைவிட பின்தங்கி இருக்கலாம். அதுவே நமக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருக்கலாம். உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை, நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளையும் நீங்கள்தான் தேர்வு செய்யவேண்டும். உங்களால் அது எளிதில் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் காரணத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள். பிறகு அதை நீக்குவதற்கான முயற்சிகளில் உறுதியுடனும் தெளிவுடனும் இறங்கி, அதை அறவே அகற்றிப் போடுங்கள்.
தாழ்வு மனப்பான்மைக்கு மற்றொரு முக்கிய காரணம் பிறரோடு நம்மைப் பொருத்திப் பார்ப்பது. இதை முதலில் நிறுத்த வேண்டும். நான் முதலில் சொன்னபடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். உங்களுக்கும் அந்தத் திறமை நிச்சயமாக இருக்கும். பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து உங்களை நீங்கள் மதிப்பிடக் கூடாது. உங்களிடம் இருக்கும் திறமை நிச்சயமாக மற்றவரிடம் இருக்காது. அப்படியென்றால் நீங்களும் சிறப்பானவர்தானே! நமது பலவீனத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் நம்முடைய தனிப்பட்ட திறமைகளை நினைத்துப் பெருமைப்பட ஆரம்பித்தோமானால் தாழ்வு மனப்பான்மை தானாகவே நம்மிடமிருந்து விடை பெற்றுக்கொண்டுவிடும்.
புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், பாடுதல் இசைக் கருவிகள் வாசித்தல், விளையாடுதல் என உங்களை ஊக்குவிக்க, உற்சாகப்படுத்த ஏகப்பட்ட விஷயங்கள் உலகத்தில் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு உகந்தவற்றைத் தேர்ந்தெடுத்து அதில் தீவிரமாக ஈடுபடுங்கள். உங்கள் திறமை வளர வளர, தாழ்வு மனப்பான்மை தப்பித்தேன் பிழைத்தேன்என்று உங்களை விட்டு ஓடி விடும்.
பிறர் நம்மை கவனிக்கவில்லையே. நமக்கு சமூகத்தில் செல்வாக்கு இல்லாததால்தான் அவர்கள் நம்மை கவனிக்கவில்லை. நம்முடன் பழகுவதைத் தவிர்க்கிறார்கள் என்றெல்லாம் சிந்தித்து, இருக்கும் சிறிதளவு தாழ்வு மனப்பான்மையையும் பெரிதாக வளர்த்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் வேலைகள், ஆயிரம் காரியங்கள் இருக்கும். அதனால் உங்களைக் கவனிக்க அவர்களுக்கு நேரமிருக்காது. எனவே இதுபோன்ற தேவையில்லாத யூகங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
எப்போதும் பிறருக்கு உதவி செய்வதை, உணர்வுகளோடு ஒன்றிய பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிறருக்கு நீங்கள் உதவி செய்யும்போது, அவர்களைவிடச் சிறப்பான நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள். அது உங்களுடைய தாழ்வு மனப் பான்மையை அகற்றும். சமூக நலப் பணிகளில் குழுவில் ஒருவராகச் சேர்ந்து செயல்படும்போது, பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். குழுவாக எப்படிப் பணியாற்றுவது என்பதையும் கற்றுக் கொள்ள முடியும். இத்தகைய கூட்டு உழைப்பும் உங்களுடைய தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறியும்.
பிறருடன் பேசி மகிழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்வதற்கு இது உதவும். உங்களிடமிருந்து வெளிப்படும் கருத்துகள், பிறரைக் கவரும்போது அவர்கள் மூலம் உங்களுடைய திறமை தானாக வெளிப்படும். பிற ரைப் பற்றியும் நன்கு புரிந்து கொள்வீர்கள். இதனால் குறையும் நிறை யும் கலந்ததுதான் மனித வாழ்க்கை, இயல்பு என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். தாழ்வு மனப்பான்மை இதனால் இல்லாமல் போகும்.