
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு வகையான தனித்தனி திறமைகள் உள்ளன. ஆனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் நேர்காணல் போன்ற அகாடமி நிகழ்வுகளில் ஐ.கியூ (IQ) எனப்படும் நுண்ணறிவு ஈவு (Intelligence quotient - IQ) எனும் மனித நுண்ணறிவை வைத்தே பெரும்பாலும் மதிப்பிடப்படுகிறது.
பொதுஅறிவு மற்றும் கல்வியறிவு குறைந்தவர்களை 'அவனுக்கு ஐ க்யூவே இல்லை எப்படித்தான் வாழப் போகிறானோ...' என்று பேசுபவர்களைப் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் இன்டெலிஜென்ஸ் என்பது எந்த வகைகளில் அடங்குகிறது? கல்வியறிவு மட்டுமே வாழ்க்கைக்கு அவசியமா? இது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறது ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner) எழுதிய ப்ரேம்ஸ் ஆஃப் மைண்ட் (Frames Of Mind) எனும் புத்தகம்.
இதில் அவர் மனிதர்களின் நுண்ணறிவை அல்லது ஐ க்யூவை 9 வகைகளில் அடக்கி விடுகிறார். அவை என்னவென்று இங்கு காண்போம்...
1. Naturalist intelligence (இயற்கை நுண்ணறிவு)
இயற்கை சார்ந்த விஷயங்களில் இந்த நுண்ணறிவு செயல்படுகிறது. இந்த வகையினர் இயற்கை சார்ந்த மரம் செடி கொடிகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் பற்றிய விபரங்களை எளிதில் அறிந்திருப்பார்கள்.
2. Musical intelligence (இசை நுண்ணறிவு)
இசையுடன் தொடர்பு கொண்ட இந்த நுண்ணறிவு மிக்கவர்கள் எந்த வகை இசை மற்றும் இசை கருவிகள் மற்றும் பல்வேறு இசை பற்றி பயிற்சிகள் இன்றி காதால் கேட்டதை வைத்தே சொல்லக்கூடிய திறன் மிக்கவர்கள்.
3. Logical & Mathematical Intelligence (தர்க்க கணித நுண்ணறிவு)
இயற்கையாகவே கணிதம் மற்றும் கல்வி விஷயங்களில் தேர்ந்த நுண்ணறிவு பெற்றவர்கள். அகாடமி தேர்வுகளில் முதன்மை இடத்தைப் பெற்று அறிவாளிகளாக பாராட்டப் படுவார்கள். மற்றவர்களை விட படிப்பு விஷயத்தில் அதிக அறிவு கொண்ட இவர்களுக்கே கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்னுரிமை தருகிறது.
4. Existential Intelligence (இருத்தலியல் நுண்ணறிவு)
சாதாரணமான பொது விஷயங்களில் கவனம் செலுத்தாமல் பெரிய பெரிய விஷயங்களை ஆராய்ந்து அதில் அறிவைப் பெறுவார்கள். உதாரணமாக ஆன்மிகம் அறிவியலில் யாரும் யோசிக்காத மறுபக்கத்தை தமது நுண்ணறிவு கொண்டு அலசி விடை கண்டுபிடிப்பதில் ஆர்வம் உடையவர்கள். உதாரணமாக ஆன்மீகத் தலைவர்கள், விஞ்ஞானிகள்.
5. Interpersonal Intelligence (தனிப்பட்டவர்கள் நுண்ணறிவு)
பிறர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் உடல் மொழி வைத்தே கணிக்கும் நுண்ணறிவு மிக்கவர்கள் இவர்கள். பிறரிடம் எளிதில் ஊடுருவி அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு தரும் உளவியல் அறிவு அதிகம் இருக்கும் இவர்கள் சிறந்த சைக்காலஜிஸ்டுகள். மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் இவர்கள் எளிதில் கவனம் பெறுவார்கள்.
6. Bodily Intelligence (உடல்சார் நுண்ணறிவு)
தங்கள் உடல் வலிமை பற்றி அறிந்து அதன் படி விளையாட்டுகளைப் தேர்வு செய்யும் இந்த நுண்ணறிவு மிக்கவர்கள் எப்போதும் விளையாட்டு பற்றியும் உடற்பயிற்சிகளையும் சிந்தித்து அதன் வழியே செயல்படுவார்கள். உற்சாகமான உடல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இவர்களுக்கு பிடித்தமானவை.
7. Linguistic Intelligence (மொழியியல் நுண்ணறிவு)
ஒரு மொழியைப் கற்றுக் கொள்ள வேண்டும் தடுமாறுபவர்களிடையே பல மொழிகளை அசால்ட்டாக கற்றுக் கொள்ளும் மொழி நுண்ணறிவு மிக்கவர்கள். இவர்கள் உலக அறிவுடன் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களிடம் அவரவர் மொழியில் எளிதாக கலந்துரையாடும் ஆற்றல் மிக்கவர்கள்.
8. Intrapersonal Intelligence (தனிமனித நுண்ணறிவு)
தன்னைப் பற்றிய மதிப்பீடுகளை அறிந்து அதன் வழியே இயங்கும் நுண்ணறிவாளர்கள் இவர்கள். அமைதியான சூழலை அதிகம் விரும்பும் இவர்கள் தங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து உணர்வு பூர்வமாக முடிவுகளை எடுக்கும் திறன் மிக்கவர்கள்.
9. Spatial Intelligence (இடஞ்சார்ந்த நுண்ணறிவு)
ஒரு இடத்துக்கு சென்று வந்து, திரும்ப சில வருடங்கள் கழித்து அதே இடம் செல்ல வழி கேட்டால் நிச்சயம் பெரும்பாலும் சரியாக சொல்லத் தெரியாது. ஆனால் இடம் சார்ந்த அத்தனை விஷயங்களையும் தங்கள் விரல் நுனியில் வைக்கும் நுண்ணறிவு மிக்க இவர்கள் பயணங்களை வழி நடத்துவதில் வல்லவர்கள்.
இந்த 9 நுண்ணறிவுகளில் சில வகைகளில் நீங்கள் தேர்ந்தவர்களாக இருந்தால் உலகம் உங்களை புத்திசாலி என புகழும். அப்ப நாம?
கவலை வேண்டாம். இதில் உங்கள் திறமைக்கேற்ற துறை சார்ந்த ஒரு நுண்ணறிவு இருந்தால் கூட போதும். அதில் கவனம் செலுத்தி நீங்கள் வெற்றியாளராக மாறலாம். அறிவாளி என்ற பெயருடன்.