
சில காலங்களுக்கு முன்பு தகவல்கள் (Information) கிடைக்காமல் பலர் தவித்தார்கள். 'வாழும் வாழ்க்கைக்கு ஒரே வழிகாட்டி ஆசிரியர்தான்' என்றும் நம்பினார்கள். இதனால், சரியான தகவல்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி அவர்களுக்குத் தேவையான முடிவுகள் எடுத்தவர்கள் 'குரு' என்று அழைக்கப்பட்ட ஆசிரியர்கள்தான்.
ஏனென்றால் "தகவல்கள் தெரிந்தவர்கள், "விவரம் புரிந்தவர்கள்", "உலக ஞானம் தெரிந்தவர்கள்" -என ஆசிரியர்களை மாணவ - மாணவிகள் அன்று நம்பினார்கள். ஆசிரியர்கள் தகவல்களை மட்டும் சேகரித்து வைக்காமல் மாணவ - மாணவிகளின் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை எடுத்து அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உதவினார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. ஆசிரியரை மட்டுமே நம்பியிருந்த கல்விமுறை, இன்று தொழில் நுட்பத்தை (Technology) நம்ப ஆரம்பித்துவிட்டது. கூகுள் (Google), பேஸ்புக் (Facebook), டுவிட்டர் (Twitter). வாட்ஸ்அப் (Whatsaவpp) என புதிய தொழில்நுட்ப வசதிகளை இளைஞர்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
தகவல்கள் இப்போது தாராளமாய், ஏராளமாய் இலவசமாய் கிடைக்கிறது. இந்தத் தகவல்கள், மனஉறுதியையும், நல்ல நம்பிக்கையையும் அவர்களுக்கு வழங்குகிறது. ஆனால், சிறந்த முடிவுகள் எடுக்கும் திறமையை இந்த தகவல்கள் வழங்குவதில்லை. போதிய அனுபவமும் (Experience), முடிவெடுக்கும் திறமையும் (Clarity in Thinking) கொண்ட ஆசிரியர்களால் சிறந்த முடிவுகளை எடுக்க மாணவ-மாணவிகளுக்கு உதவ இயலும்.
முன்பெல்லாம் ஆசிரியர்களும் பெற்றோர்களுமே மாணவ மாணவிகளுக்கு முடிவெடுத்தார்கள். ஆனால், மாணவ மாணவிகளே இன்று தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை தாங்களாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனாலும், இந்த சிறப்புத் திறமைகள் மாணவ-மாணவிகளிடம் இல்லாத நிலை காணப்படுவதால், தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த முடிவுகளை அவர்களால் எடுக்க முடியாமல் போய்விடுகிறது.
வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் தான் ஒருவருடைய வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அடிப்படையாக அமைவதோடு, முடிவெடுத்தல் என்பது ஒரு தனி கலையாகவே இருக்கிறது.
வாழ்க்கை முடிவுகளை தீர்மானிப்பதற்கு முன்பு, முடிவெடுப்பதற்குத் தேவையான தகவல்களை சேகரித்துக்கொண்டு, "அந்தத் தகவல்கள் சரியானவைதானா என்பதை உறுதி செய்து நமது வாழ்க்கையின் குறிக்கோளோடு இணைத்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
டீன் ஏஜ்" எனப்படும் வளர் இளம்பருவத்தில் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான தகவல்களில் மட்டுமே கவனம் செலுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செயப்பட இயலாத சிலர் தொழில்நுட்ப உதவியோடு - தேவையற்ற தகவல்களையும் சேகரித்து வைக்கிறார்கள். இதனால், வாழ்க்கை முழுவதும் சேதம் அடைந்துவிடும் என்பதை இந்த இளைய உள்ளங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான தகவல்களை அதிக அளவில் சேகரித்து நல்ல முடிவுகளை எடுப்பதற்கான பயிற்சியினை குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் முறையாக மேற்கொள்வது அவசியமாகும்.