திருமணத்திற்கு பின் நண்பர்கள் தேவையா? ஒரு புதிய பார்வை!

பணம் பிரதானமான உலகில், எல்லையோடு நிற்கும் நட்பை விட ஆயுள் வரை துணை நிற்கும் உறவுகளே மேல் என்பதை விளக்கும் ஆழமான கட்டுரை.
Friendship and Relationships
Friendship and RelationshipsCredit: AI Image
Updated on

நம் வாழ்வில் நண்பர்கள் அவசியமா?

இப்படி ஒரு கேள்வியை யாரிடம் கேட்டாலும் சரி உடனே “ஆம். ஒவ்வொருவர் வாழ்விலும் நட்பு அவசியம்” என்பார்கள். நான் கூட போன வருடம் வரை “ஆம்” என்று சொன்னவன்தான். ஆனால் இப்போது என்னிடம் இந்த கேள்வியைக் கேட்டால் “இல்லை, அவசியமில்லை” என்பேன்.

தற்போதைய பரபரப்பான வாழ்க்கையில் பணம் ஒன்றே பிரதானம் என பலரும் நினைக்கும் வாழ்க்கையில், நண்பர்கள் அவசியமில்லை என்பதே நிதர்சனம். ஒரு நண்பன் நம் தனிப்பட்ட வாழ்வின் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் நம் வாழ்வின் விளிம்பைத் தொட மனைவி ஒருவரால் மட்டுமே முடியும்.

மனைவியை விட நட்பே சிறந்தது என்று சொல்பவர்களையும் நாம் பல இடங்களில் பார்க்கிறோம். திருமணத்திற்கு முன்புவரை நண்பர்களுடன் சுற்றுதல், சினிமாவிற்குச் செல்லுதல், இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்புதல் என எல்லாம் சரிதான்.

ஆனால் திருமணம் இவை எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. அது சரியும் கூட. ஆனால் பல நண்பர்கள் இதைப் புரிந்து கொள்ளுவதே இல்லை.

'நண்பேன்டா' என்று சொல்லுவதெல்லாம் சினிமாவில் டிராமாவில் மட்டுமே ரசிக்க முடியும். சிரிப்பையும் வரவழைக்கும். ஆனால் நிஜ வாழ்வில் இதெல்லாம் சாத்தியப்படாது. மாறாக ஆழமான நட்பு பலருக்கு பலவிதமான பிரச்சினைகளை உருவாக்கி விடுவதையும் நாம் பார்க்கிறோம்.

தன் நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால் எதைப் பற்றியும் யோசிக்காமல் யாரிடமும் கேட்காமல் ஓடிவந்து உதவி செய்த சூழ்நிலை இப்போது இல்லை. அவசரத் தேவைக்குப் பணம் கேட்டால் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

சில தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் அவசியம் தேவை என்பார்கள். ஆனால் நண்பனிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய மனைவியிடம் பகிர்ந்து கொள்ளமுடியாத தனிப்பட்ட விஷயம் என்பது மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாகத்தான் இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை மறைக்காமல் மனைவியுடன் பகிர்ந்து விவாதியுங்கள். உங்கள் மனதும் லேசாகும். மனைவி உங்களுக்கு ஒரு சரியான தீர்வினைத் தருவார்.

நண்பர்களுடன் செலவிடும் நேரத்தை உங்கள் மனைவியுடன் செலவிடுங்கள். உங்கள் பிள்ளைகளுடன் செலவிடுங்கள். உங்கள் அன்பான அப்பா அம்மாவுடன் செலவிடுங்கள். இவர்கள் யாரும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நமக்கு கெடுதல் நினைக்காதவர்கள். சொல்லப்போனால் இவர்கள் அனைவருமே நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைப்பவர்கள்.

இதையும் படியுங்கள்:
யாரிடம் விலகி இருக்க வேண்டும்? சாணக்கியர் காட்டும் வாழ்க்கைப் பாதை!
Friendship and Relationships

உறவினர்கள் எல்லோரும் என்னிடம் நடிக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்கு ஒரு வார்த்தை. நீங்களும் பலருக்கு ஒரு உறவினர்தான் என்பதை மறக்காதீர்கள். உறவு என்பது பந்தம் பாசத்தோடு பிணைந்தது. உறவினர்களிடம் அவ்வப்போது மனஸ்தாபங்கள் எழலாம். அவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படலாம். நீங்கள் அவர்களைப் பார்த்து பொறாமைப்படலாம். ஆனால் இது அப்படியே நீடிப்பதில்லை. காலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடுகிறது. நமக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடிவந்து உதவுபவர்கள் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். இக்காலத்து நண்பர்கள் நமக்கு ஆபத்து ஏற்படும்போது ஓடிஒளிந்து கொள்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

நண்பன் எனக்கு அவசியம் தேவை என்பவர்கள் ஒரே ஒரு நல்ல நண்பரைத் தேர்ந்தெடுத்து நட்பு பாராட்டுங்கள். அவர்களிடமும் தினசரி பார்த்து அளவளாவியே தீருவேன் என்று அடம்பிடிக்காமல் அளவாகப் பழகுங்கள். அவசியம் ஏற்படும் போது மட்டும் சந்தியுங்கள்.

உங்கள் மனைவியைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க முடியாது. உண்மையாக அன்பு பாராட்ட முடியாது. நல்லது நினைக்க முடியாது. மனைவியை சிறந்த நட்பாகப் பாருங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் வாழ்க்கை ஒளிவீசும்.

கூடுமானவரை நண்பர்களைத் தவிர்க்கப் பாருங்கள். இக்காலத்து நண்பர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை அனுபவம் மெல்ல மெல்ல உங்களுக்கு உணர்த்தும். புரிந்து கொண்டால் மனஉளைச்சல் இல்லாத நிம்மதியான வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
உறவுகளில் ஒளிந்திருக்கும் நிழல்கள்: வஞ்சகமும் வேதனையும்!
Friendship and Relationships

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com