
வீண் பெருமை என்பது தற்பெருமை கொள்வது. தங்களைப் பற்றியும் தாங்கள் செய்யும் செயல்களைப் பற்றியும் தேவையில்லாமல் பிறரிடம் தம்பட்டம் அடிப்பது. இப்படி வீண் பெருமை பேசுவது நல்லதல்ல. இது மற்றவர்களிடம் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கும். அத்துடன் வீண் பெருமை பேசுபவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும் உருவாக்கலாம்.
வீண் பெருமை பேசுபவர்கள் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால் அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அத்துடன் நம்மைப் பற்றி எதிராளியிடம் தவறான எண்ணங்கள் ஏற்பட்டு நம்மை புறக்கணிக்கலாம். இது மற்றவர்களுடனான உறவை பாதிக்கும். சமுதாயத்தில் மற்றவர்களிடமிருந்து நம்மை விலக்கி வைத்துவிடும்.
பெருமை என்பது ஒருவருடைய சொந்த சாதனைகளில் இருந்து பெறப்படும் திருப்தியான உணர்வு. வீண் பெருமை என்பது அதைப்பற்றி அதிகப்படியாக பெருமை கொள்வது. இது ஒரு எதிர்மறை ஆளுமைப் பண்பாக கொள்ளப்படுகிறது. வீண் பெருமை என்பது மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் வெளிப்படும் உணர்வாகும். இது முற்றிலும் தவறானது. மற்றவர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெறும் நோக்கம் கொண்டது. இது சுயநலம் மற்றும் அகந்தையை வெளிப்படுத்தும். மற்றவர்களுடனான உறவை மோசமாக்கும் பண்பு கொண்டது.
பெருமை என்பது செய்யும் செயல்களால் ஏற்படும் ஒரு இயல்பான நேர்மறையான உணர்வாகும். இது பெருமை கொள்பவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் காரணமாக அமையும். பிறருடன் நல்ல உறவை பேணிகாக்கவும், வளர்க்கவும் உதவும். அதுவே வீண் பெருமை பேசுவதால் ஏற்படும் விளைவுகள் வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும்.
வீண் பெருமை பேசுவதால் சமூகத்தில் மரியாதை இழப்பு ஏற்படும் அதாவது மதிப்பு குறையும். வீண் பெருமை பேசுவதால் குழுவாக சேர்ந்து வேலை செய்ய இயலாமல் போகலாம். இது தொழில் ரீதியாக வாழ்க்கையில் பின்னடைவை உண்டாக்கும். எப்பொழுதும் தன்னைப் பற்றியும் தன் பெருமையை பற்றியும் பேசிக் கொண்டிருப்பதால் தனிமைக்கு ஆளாக நேரிடும்.
இது மன அழுத்தத்தை உண்டாக்கும். இப்படி பகட்டான பேச்சால் மற்றவர்களை புண்படுத்துவதால் அவர்கள் நம்மை விட்டு விலகிப்போவார்கள். இதனால் தனிமை என்பது ஏற்படும். உறவும், நட்பும் முறிந்துபோக வழிவகுக்கும்.
வீண் பெருமை பேசுபவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு காது கொடுத்து கேட்க மாட்டார்கள். தாங்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுவதால் இவர்களால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை இழக்க வேண்டிவரும். இதனால் வாழ்வில் முன்னேற்றத்தை இழக்க வேண்டி வரும்.
மற்றவர்களுடன் எப்போதும் வாதம் செய்வதால் கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இதனால் அவர்களைப் பற்றி தவறாக புரிந்துகொள்ளவும், தேவையற்ற குழப்பங்களையும், சிக்கல்களையும் உருவாக்கும்.
எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வீண் பெருமை பேசுவது சரியா? சிந்தியுங்கள் நண்பர்களே!