ஒருவரைப் பார்த்தவுடன் எடைபோடுவது என்பது மனிதர்களின் குணமாகும். ‘இவர் இப்படித்தான்’ என்று ஒருவரை பற்றி எதுவுமே அறியாமல் முடிவெடுப்பது சரிதானா? ஒருவரின் உடை, சூழ்நிலை, தகுதி போன்றவற்றை வைத்தோ அல்லது வெறுமனே கண்ணால் காண்பதை வைத்தோ முடிவெடுப்பது சரியாக இருக்குமா? சரி வாங்க, அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிக்கலாம். சாலையோரமாக இருக்கும் டீக்கடைக்கு நண்பர்கள் கூட்டம் ஒன்று வருகிறது. இவர்கள் நண்பர்கள் மட்டுமில்லை டாக்டர்களும் கூட, டீ குடித்து கொண்டே சாலையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பக்கமாக வந்து கொண்டிருந்த ஒருவர் ஒற்றை காலை மட்டும் நொண்டி நடந்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த டாக்டர்களாகிய நண்பர்கள் கூட்டம் அவருடைய பிரச்சனையை பற்றி அலசி ஆராய ஆரம்பித்தனர்.
ஒருவர் சொன்னார், அவருக்கு காலில் ஆணியிருக்கிறது. அதனால்தான் நொண்டி செல்கிறான் என்றார். இன்னொருவர் அவருக்கு கால் சுளுக்கியிருக்கும். அதனால்தான் நொண்டுகிறார் என்றார். இப்படி ஒவ்வொருவரும் அவர் நொண்டி வருவதற்கு தங்களுக்கு தெரிந்தவற்றை வைத்து இதுவாகதான் இருக்கும் என்று முடிவு செய்து கொண்டனர். கடைசியாக நொண்டி வந்த அந்த நபர் அங்கே நின்றுக்கொண்டிருந்த டாக்டர் நண்பர்களிடம் சென்று இங்கே செருப்பு தைக்குற கடை எங்கேயிருக்கிறது என்று கேட்கிறார். அவ்வளவு தான் அதை கேட்டதும் அந்த நண்பர்கள் கூட்டம் கலைந்து சென்றுவிடும்.
இப்படித்தான் பல பேர் இங்கே உள்ளார்கள். ஒருவரை பார்த்த உடன் Quick judgement செய்வது, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் இஷ்டத்திற்கு பேசுவது என்பது பொழுதுபோக்காகி விட்டது. ஒருவரை பற்றி நன்றாக தெரியும்போது அங்கே நாம் எதையுமே எடைப்போட வேண்டிய அவசியம் இருக்காது. தெரியாதவரை பற்றி எடைபோடும் பழக்கம் தவறானதாகும்.
சில சமயம் இது பொறாமையின் வெளிப்பாடாகவும் இருக்கும். ஒருவரின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும்போது இதுபோல அவரைப்பற்றி தவறாக பேசுவது நடக்கும். உதாரணத்திற்கு BTS தென்கொரிய பாப் சிங்கர்ஸ் உலகம் முழுவதும் பிரபலமானவர்கள். அவர்களிடம் பணம், புகழ் எல்லோமே இருக்கிறது என்று சொல்பவர்கள் அதற்காக அவர்கள் போட்ட கடின உழைப்பை பற்றி யோசிக்க மாட்டார்கள்.
இதை தடுக்க ஒரே வழி நம் வேலையை நாம் பார்ப்பது மட்டுமே! அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதை விட்டுவிட்டு நம்முடைய முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரும்போது இது போன்ற வீண் வாதத்திற்கு வேலையில்லாமல் போகும்.