
"நாளுக்கு நாள் வேகமா ஓடிக்கிட்டே இருக்குப்பா... நாட்கள் எப்படி போகுதுன்னே தெரியல" - உண்மையில் நாட்கள் வருடங்கள் வேகமாகத்தான் செல்கிறதா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கா?
நினைவுகளாகச் சேமிக்கப்படும் நேரம்
நேரம் விரைந்து செல்வது போன்ற உணர்வு பெரும்பாலும் நம் மூளையின் செயல்முறை மற்றும் நினைவுகளைச் சேமிக்கும் விதத்தில் இருந்து உருவாகிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் செய்யும்போது நம் மூளை அனைத்து நிகழ்வுகளையும் நினைவில் எடுத்துக்கொள்ளாது. இதனால் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளையும் ‘ஏதோ கடந்து செல்வதுபோல்’ உணர்வோம்.
ஆனால், உண்மையில் நேரம் ஒரு நிலையான வேகத்தில்தான் சென்று கொண்டிருக்கிறது. நாம் சந்திக்கும் நிகழ்வுகளை நம் மனதிற்கு புரியும்படி எவ்வாறு உணர்கிறோம் என்பதில்தான் முழு அர்த்தமே மறைந்துள்ளது.
நம் மூளையைப் பொறுத்தவரை, அது, நாம் சந்திக்கும் புதுமையான அனுபவங்களைத் தெளிவான விவரங்களுடன் பதிவு செய்யும் வல்லமை படைத்தது. இதனால் சிறு வயதில் நம் கண்களுக்குத் தெரிந்த புதுமையான விஷயங்களும், அதனால் ஏற்பட்ட சந்தோஷங்களும், வேதனைகளும் நம் நினைவில் நேர காலத்துடன் அழியாத நினைவாய் நம் மனதில் பதிந்துவிடும்.
இன்னும் சொல்லப்போனால் இந்தக் குழந்தை பருவ நினைவுகளை வைத்துத்தான் சிலர் தங்கள் நிகழ்கால வருடத்தையே கணக்கு போடுவார்கள். ஆனால், அதன்பின் வயது ஏற ஏற நாம் சந்திக்கும் வழக்கமான செயல்கள் அல்லது அன்றாட குடும்பச் சூழ்நிலைகளால் சில நேரங்களில் நினைவுகளற்ற நேரங்களாக நாம் நாட்களைக் கடந்து சென்றுவிடுவோம். இறுதியில் அதுவே நம்மை ஒரு நாள் ‘இதெல்லாம் எப்படி சென்றது’ என்று யோசிக்க வைக்கும்.
காலம் நம்மோடு சேர்ந்து பயணிப்பதை எப்படி உணரலாம்?
இந்த மனநிலையை மாற்றுவதற்கு நம் அன்றாட வாழ்வில் செய்துக்கொண்டிருக்கும் செயல்களில் சில புதுமைகளைப் புகுத்தி பார்க்க வேண்டும். அறிமுகமில்லாத இடங்களுக்குப் பயணம் செய்யுங்கள். இன்னும் சுவாரசியமாக வேண்டும் என்றால் உங்கள் நடைமுறைகளை சற்று மாற்றி பார்க்கலாம். அதனால் உங்களுக்கு நன்மை ஏற்படுகிறதோ அல்லது தீமை ஏற்படுகிறதோ, அதை வைத்து நீங்கள் சந்திக்கும் நிகழ்வுகளே நீங்கள் கடக்கும் நேரம், நாள் பற்றிய நினைவை உங்களுக்கு உணர வைக்கும்.
குறிப்பாக உங்கள் திரை நேரத்தைக் குறைப்பது (Reducing screen time), ஒற்றைப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது (Avoiding multi-tasking) போன்றவற்றைச் செய்யும்போது உங்களால் அன்றைய நாளில் கடந்து செல்கின்ற நேரத்தை உணரமுடியும்.
இதில் முக்கியமாக பார்க்கப்படுவது உங்கள் நினைவாற்றலை எப்படி நீங்கள் மெருகேற்றிக் கொள்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது. அதற்கு ஒவ்வொரு நாளும் தியானம், உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்யும்போது உங்களால் அந்தத் தருணத்தையும், அதன் தொடர்புடைய நேரங்களையும் உணர முடியும். இறுதியில் அதுவே நேரம் சம்பந்தமான விழிப்புணர்வை உங்களுக்குள் புகுத்திவிடும்.