
படிப்பு முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்த பின், ஒவ்வொருவரின் அடுத்த இலக்கு பதவி உயர்வு!! பதவி உயர்வு பெறுவதற்கு பல போட்டிகளையும் சவால்களையும் சந்திப்பது அவசியமானதாயிருக்கும். தனக்குள் 9 வகையான திறமைகளை வளர்த்துக் கொண்டால் பதவி உயர்வை விரைவில் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். அந்த திறமைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.பேச்சில் திறமை (Communication Skill): தன் மனதில் உள்ள எண்ணங்களை மற்றவர்களிடம் தெளிவாக பேசி வெளிப்படுத்துதல் மற்றும் பிறர் பேசுவதை குறுக்கீடு இல்லாமல் கவனமுடன் கேட்பது ஆகிய இவ்விரண்டு குணமும் பிறரை உங்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும். மேலும் எவ்வித குழப்பமுமின்றி வேலையை செய்து முடிக்க உதவும்.
2.பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல்: நெருக்கடியான சூழ்நிலைகளில் தெளிவாக சிந்தித்து, பிரச்னைகளுக்கு விரைவில் ஒரு பொருத்தமான தீர்வை உங்களால் கொடுக்க முடியுமானால், அது, எதிர்காலத்தில் எந்த வேலையையும் உங்களிடம் தயக்கமின்றி கொடுத்து செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கையை உங்கள் மானேஜர் மனதில் உண்டு பண்ணும்.
3.நேர மேலாண்மை (Time Management): உங்கள் வேலையை திறமையுடனும் சமயோசிதமாகவும் கையாண்டு குறித்த நேரத்தில் செய்து முடிப்பது, உங்களிடம் அதிகமான பொறுப்புகளை ஒப்படைக்கலாம் என்ற நம்பிக்கையை உங்கள் பாஸ் மனதில் உருவாக்கும்.
4.மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாறிக்கொள்வது:
உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பர். வேலை செய்யும் வழிமுறைகளில் மாற்றம் உண்டாகும்போது, அது எவ்வளவு சிக்கல்கள் மற்றும் சவால்கள் நிறைந்ததாக இருந்தபோதும், திறந்த மனதோடு அதை ஏற்றுக்கொண்டு, அந்த வேலையை செய்து முடிக்க தயாராவது உங்களின் திறமைக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.
5.தலைமையேற்கும் பண்பு (leadership): தேவையேற்படும்போது, நீங்கள் ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, அமைதியுடன் கடினமாக உழைத்தும், பிறருக்கு வழிகாட்டியாய் செயல் புரிந்தும் வெற்றியைக்கொண்டு வரும்போது, அது, நீங்கள் அடுத்த நிலைக்கு முன்னேறிச்செல்ல தயாராயிருப்பதை உங்களின் மேலதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டும்.
6.முடிவெடுக்கும் திறன்: கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு விஷயத்தில் சிறந்த முடிவை உங்களால் எடுக்க முடியுமென்றால், அது, பிறருக்கு உங்கள் மீதான நம்பிக்கையையும் புரிதலையும் மேலும் அதிகரிக்கச் செய்யும்.
7.தொழில்நுட்ப அறிவு: உங்கள் வேலையுடன் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் (Tools) மற்றும் கணினியுடன் தொடர்புடைய விஷயங்களை நீங்கள் முழுமையாகப் புரிந்து வைத்திருப்பது, உங்கள் வேலையை நீங்கள் துரிதமாக செய்து முடிக்கவும், பிறருக்கு வழிகாட்டவும் துணையாயிருக்கும்.
8.தொழில் சார்ந்த நன்னடத்தை (Professionalism):
எப்பொழுதும் குறித்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பது, அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துகொள்வது, பிறரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருப்பது போன்ற நற்குணங்களை நீங்கள் எப்பொழுதும் பின்பற்றும்போது அனைவர் மனதிலும் இடம் பிடிக்க முடியும். வேலைக்கு நீங்கள் எவ்வளவு மரியாதை கொடுக்கிறீர்கள் என்பதை பிறர் உணரச்செய்யவும் முடியும்.
9.டீம் ஒர்க்: மற்றவர்களுடன் குழுவாக இணைந்து பணிபுரியும்போது அமைதியுடன், ஒருங்கிணைந்து, கடினமாக உழைத்து வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது நீங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதியுள்ளவர் என்பதை அது பிறர்க்கு உணர்த்தும்.