

மனிதராகப் பிறந்தவர்கள் சில பழக்க வழக்கங்களுக்கு மட்டும் அடிமையாவது இல்லை. நம்மையும் அறியாமல் சக மனிதருக்குக்கூட நாம் அடிமையாகிவிடுவது உண்டு.
நாம் ஒருவர் மீது அதிக பாசம் வைத்து, அவர் சொல்வது சரியா? தவறா? என்றுகூட ஆராயாமல் அதையே பின்பற்றுவோம். இதுவும் ஒருவகையான அடிமைத்தனம்தான். முன்பெல்லாம், ஒருவர் மற்றொருவரைக் கட்டாயப்படுத்தி ஒரு வேலையை சொல்லி அடிமைகள் ஆக்குவர். ஆனால், இப்பொழுது மறைமுகமாக பல வழிகளில் நாம் மற்றவர்களுக்கு தானாகவே சென்று அடிமையாகிறோம். இதனால், நமது உணர்ச்சிகள் மதிக்கப்படுவதைவிட மிதிக்கப் படுவதுதான் இன்றைய சூழல்.
ஒருவர் நம்மை ‘பயன்படுத்திக்கொள்கிறார்’ என்று அறிந்தப்பிறகு ‘அவர்தானே’ என்று அலட்சியமாக இருந்துவிடுகிறோம். எத்தனை முறை அவர் தவறு செய்தாலும், அதனால் நாம் எவ்வளவு பாதிப்படைந்தாலும் அவரிடமே சென்று சகஜமாகப் பழகுகிறோம். இதுதான் நாம் அவருக்கு அடிமையாவது என்பது.
யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் சரி, ஒரு எல்லை வைத்துக்கொள்வது நல்லது. இல்லையென்றால், அந்த நட்பு உங்களையே காவு வாங்கிவிடும்.
அடிமையாவதின் அறிகுறிகள் :
1. ஒருவர் உங்களிடம் பணம் என்று உதவி கேட்டால், உங்களிடம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு கொடுங்கள். அப்படியில்லாமல், வேறொரு நண்பரிடம் கேட்டு வாங்கி கொடுக்கிறீர்கள் என்றால் அது அடிமைத்தனத்திற்கான முதல் அறிகுறித்தான்.
2. எந்த ஒரு செயலையும் முடிவுகளையும் நீங்கள் எடுங்கள். அல்லது அதற்கு சம்பதப்பட்டவர்களைக் கேட்டு எடுங்கள். அதைவிட்டு உங்கள் தனிப்பட்ட விஷயத்திற்கோ அல்லது உங்கள் குடும்ப விஷயத்திற்கோ முடிவை அந்த நபரிடம் கேட்டு, அதே முடிவை நீங்கள் சிறிதும் யோசிக்காமல் எடுத்தால். அதுவும் பிரச்னைதான்.
3. ஒருவர் ‘அது செய்யாதே!, இது செய்யாதே!‘ என்று கூறும்போது, ‘ஏன்’ என்ற கேள்வி கேட்காமல் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள் என்றால் அதுவும் ஒருவகையான அடிமைத்தனம்தான்.
4. அவர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பதும் உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கும் விஷயம்தான்.
ஒருவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கும்போதே இந்த அறிகுறிகள் இருந்தால், சுதாரித்துக்கொள்ளுங்கள்.
ஆரம்பத்திலிருந்தே, இந்த அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் உடனே செய்ய வேண்டியது:
1. உங்கள் மொபைலில் அவருடைய பெயரை மாற்றுங்கள். மொபைலில் அவர் கணக்குகளை கண்ணில் படாதப்படி ஹைட் (Hide) செய்யுங்கள்.
2. உங்கள் நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள். ஆனால், அதனை மொபைலில் எந்த ஒரு வலைத்தளங்களிலும் பதிவிடாதிர்கள்.
3. ஒரு நாளை எப்படி முழுவதுமாக பயன்படுத்துவது என்று பட்டியலிட்டு ஓய்வில்லாமல் அதன்படி நடந்துக்கொள்ளுங்கள்.
4. அவரின் ஞாபகம் தரும் எந்த பொருளையும் கண் முன்னே தெரியும்படி வைத்துக்கொள்ளாதிர்கள்.
5. பொதுவாக இரவு நேரங்களில் ஒருவரது ஞாபகம் வராமல் தடுப்பது மிக கடினமான ஒன்று. அப்போது சுவாரசியமான புத்தகம் படியுங்கள். அல்லது விறுவிறுப்பான படங்களைப் பாருங்கள். இது உங்கள் மூளையை களைப்பாக்கும். அதனால், நல்ல தூக்கம் வர உதவும்.
6. அவரைப் பற்றி அதிகம் பேசுவதை நிறுத்தினால், காலமே அவரை உங்கள் நினைவில் இருந்து நீக்கும்.