
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தை சாதிப்பதற்காகவும், வெற்றிக்காகவும் போராடிக் கொண்டேயிருக்கிறோமே? வாழ்க்கை எந்நேரமும் போராட்டமாக இருக்கிறதே என்று எப்போதாவது எண்ணியதுண்டா? இப்படிப்பட்ட போராட்டம் வாழ்க்கைக்கு அவசியம் தானா? இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் இருந்த விவசாயி கடவுளிடம் கடுமையாக சண்டைப் போடுகிறார். ‘கடவுளே, உனக்கு பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்த நேரத்திற்கு மழையை தருகிறாய், நினைத்த நேரத்திற்கு காற்றை தருகிறாய். இதனால் மிகவும் தொந்தரவாக உள்ளது. அதனால், அந்த வேலையை என்னிடம் ஒப்படைத்துவிடு’ என்று கூறினார்.
இதைக்கேட்ட கடவுளும், ‘சரி இனி வெயில், மழை, காற்று எல்லாம் உன்னுடைய பொறுப்பு’ என்று வரம் கொடுக்கிறார். விவசாயியும் மிகவும் மகிழ்ச்சியோடு இவை மூன்றையும் சரியான விகிதத்தில் பயன்படுத்த பயிறும் நன்றாக பச்சைபசேல் என்று வளர்கிறது. இதனால் வயல் வெளியே பார்க்க மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.
இப்போது பயிறை அறுவடை செய்யும் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்து உள்ளே உடைத்துப் பார்க்கிறார். அனுள்ளே தானியங்களேயில்லை. அடுத்து ஒவ்வொன்றாக அறுத்து உடைத்து பார்க்கிறார். எதிலேயும் தானியங்களேயில்லை.
விவசாயி திரும்பவும் கடவுளே என்ன இது? என்று கேட்கிறார். கடவுளும் புன்னகையுடன் சொல்கிறார், ‘நான் காற்றை வேகமாக வீச செய்வதால் வேர்கள் மண்ணை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும்.
மழையை அளவாக கொடுப்பதால் பயிர்கள் வேர்களை நாலாப்பக்கமும் அனுப்பி தண்ணீரைத் தேடும். இந்தப் போராட்டம்தான் தாவரங்களை வலுவானதாக மாற்றி ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்கிறது. ஆனால், நீ அதை போராட விடாமல் தேவையான அனைத்தையுமே கொடுத்ததால், அது செழிப்பாக வளர்ந்ததே தவிர ஆரோக்கியமாக வளரவில்லை’ என்று கூறினார்.
இந்தக் கதையில் வந்த பயிர்களைப்போலத்தான் நம் வாழ்க்கையும். எப்போதுமே சுகமாக இருந்தால் எதையுமே சாதிக்க முடியாது. பல போட்டிகளையும், போராட்டங்களையும் வாழ்வில் சந்திக்கும் போது தான் நாமும் திறமையானவர்களாக வளர்வோம். இதைப் புரிந்துக் கொண்டு போராடிப் பாருங்கள் நிச்சயம் வெற்றிப் பெறலாம்.