
பணிந்து போவது என்பது ஒரு செயலை அல்லது ஒருவரின் கட்டளையை ஏற்று அதை பின்பற்றுவது இல்லையெனில் கட்டுப்படுவது என்று பொருள்படும். அதாவது ஒருவரின் விருப்பத்திற்கு இணங்கி நடப்பதை குறிக்கும். பணிந்து போவது பெரும்பாலான இடங்களில் சமூகத்தில் ஒழுங்கையும், அமைதியையும் நிலை நிறுத்த உதவும். ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் பொதுவான இலக்கை நோக்கி அமைதியாக செயல்பட முடியும். சில இடங்களில் பணிந்து போகாமல் இருப்பது மோதலுக்கும், ஒழுங்கின்மைக்கும் வழி வகுக்கும். அத்துடன் சமூகத்தில் குழப்பங்களையும் ஏற்படுத்தும்.
எல்லா இடத்திலும் பணிந்து போவது என்பது தேவையா? பணிந்து போவது என்பது கோழைத்தனமான செயலா? தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பணிந்து போவது சில சமயங்களில் நல்லது. பணிந்து போவது என்பது கோழைத்தனமான செயல் அல்ல; அது ஒரு மரியாதைக்குரிய நடத்தையாகும்.
இது மற்றவர்களிடம் நல்லுறவை பேணுவதற்கு உதவும் சிறந்த பண்பாகும். இதனால் நம்முடைய சுயமதிப்பு ஒன்றும் குறைந்து விடாது. மாறாக மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய மதிப்பீடு உயர்ந்து நிற்கும்.
பணிவுடன் இருப்பவர்களை எப்போதும் மற்றவர்கள் விரும்புவார்கள். மேலும் அவர்களால் சமுதாயத்தில் ஒரு நல்ல தாக்கத்தை உண்டு பண்ண முடியும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முக்கியமான பண்பாகவும் இது விளங்குகிறது. பிறரிடம் பணிவாக நடந்து கொள்வது, பிறருடைய கருத்துக் களையும், எண்ணங்களையும் காது கொடுத்து கேட்பதுடன் நில்லாமல் மதிப்பது மற்றும் பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்வது போன்றவை சிறப்பான அம்சங்களாகும்.
பிறருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதுடன் எந்த செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் பொறுமையுடன் கையாள்வதும் பணிவுக்கான சிறந்த குணங்களாகும்.
பணிவு என்பது ஒரு போதும் பலவீனமாகாது. அது ஒரு சிறந்த பலமாகும். பணிவு என்பது தாழ்மையான செயலல்ல. அது ஒரு உயர்ந்த பண்பின் அறிகுறியாகும். பணிவாக இருப்பதன் மூலம் ஒருவரின் முழு நம்பிக்கையை நம்மால் பெறமுடியும். அத்துடன் பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவும் முடியும்.
சுய முன்னேற்றத்திற்கும், தலைமை பண்பிற்கும் பணிவு என்பது மிகவும் அவசியம். எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுதும், பிற மனிதர்களுடன் பழகும் பொழுதும் பணிவுடன் செயலாற்றினால் எளிதில் உயர்ந்த இடத்தை அடைந்துவிட முடியும்.
பணிவு என்பது ஒருவரின் பலத்தையும், பலவீனத்தையும் உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வது. கோழைத்தனம் என்பதோ பயம் காரணமாக ஒரு செயலை செய்யாமல் தவிர்க்க நினைப்பது. இது ஒருவரை தனிமைப்படுத்தி பிறருடன் பழக முடியாமல் செய்துவிடும். முன்னேற்றத்தை தடுக்கும். ஆனால் பணிவு என்பது ஒரு அறிவார்ந்த குணமாகும்.
இது பிறருடன் சேர்ந்து பணியாற்றவும், எதிர்ப்படும் பிரச்னைகளை தீர்க்கவும் உதவும். பணிவான குணம் என்பது மற்றவர்களிடம் மரியாதையுடனும் அன்பாகவும் பழக உதவும். பணிவு என்பது நம் அன்றாட வாழ்வில் உறவுகளுடனும், பழகும் பிற மனிதர்களுடனும் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான பண்பாகும்.