

"நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், வாழ்க்கை சலித்துப்போய்விடும்" என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், நாம் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்றால், அது சலிப்பைவிட பெரிய வலியைத் தரும். பல நேரங்களில், நாம் ஒன்றை ஆசைப்பட்டு திட்டமிடுவோம். ஆனால் காலம் நமக்காக வேறு ஒன்றை வைத்திருக்கும். அப்போது எழும் முதல் கேள்வி, "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?" என்பதுதான். இந்த விரக்தி, நம்மை கடவுள் நம்பிக்கையையோ அல்லது நம் மீதான நம்பிக்கையையோ கூட இழக்கச் செய்துவிடும்.
ஆனால், வாழ்க்கை (miracle in life) பல ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு புதிர். இன்று நாம் சந்திக்கிற ஏமாற்றம், நாளை ஒரு பெரிய வெற்றிக்கான வழியாக இருக்கலாம். இதை உணர்த்துவதற்காக, ஒரு சிறிய, கதையை இப்போது நாம் பார்ப்போம்.
ஒரு மீனவன் கடலுக்கு போய் மீன் பிடிக்கலாம் என்று அன்று இரவு வீட்டை விட்டு கிளம்புகிறார். அன்னைக்கென்று பார்த்து அந்த கடலில் மிக பெரிய புயல் உருவாகிறது. அவராலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய படகை கட்டுப்படுத்த முடியவில்லை. புயலில் நன்றாக மாட்டிக்கொள்கிறார்.
மறுநாள் காலை எழுந்து பார்க்கிறார். இரவு அடித்த புயலால் தன்னந்தனியான தீவில் வந்து சிக்கிக்கொண்டதை உணர்கிறார். அங்கு குடிக்க தண்ணீரும் இல்லை சாப்பிடுவதற்கும் எதுவும் இல்லை.
இருப்பினும் அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததால். கடவுள் எப்படியாவது இந்த ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றுவார் என்று நம்புகிறார். அதுவரைக்குமாவது உயிரோடு இருக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு சிறிய வீட்டை கட்டுகிறார்.
மறுநாள் காலை உணவு தேடி சென்று வருவதற்குள் அவர் கட்டிய வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க எவ்வளவோ முயற்சித்தும் வீடு எரிந்து சாம்பலாகிறது. இதனால் மனம் உடைந்த அந்த மீனவன், "கடவுளே! உனக்கு மனசாட்சியேயில்லையா?" என்று வானத்தை பார்த்து கத்தும் போது தூரத்தில் இவரது தீவை நோக்கி ஒரு கப்பல் வருவதை கவனிக்கிறார்.
அதில் இருந்த கேப்டன் இவரை பத்திரமாக தனது கப்பலில் ஏற்றிக்கொள்கிறார். "இவ்வளவு பெரிய கடலில் என்னை எப்படி கண்டுப்பிடித்தீர்கள்?" என்று மீனவன் கேட்கிறார். அதற்கு கேப்டன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"இந்த தீவில் இருந்து அதிகமாக புகை வந்ததை பார்த்து தான் நான் இங்கு வந்தேன்" என்று கூறுகிறார்.
சில நேரங்களில் நம் வாழ்க்கையிலும் நாம் நினைப்பதற்கு எதிராக எல்லா விஷயங்களும் நடக்கும். அந்தசமயம் நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று நினைப்போம். ஆனால் நாம் முடிவு என்று நினைக்கும் சில விஷயங்கள் தான் நம் வாழ்க்கையில் ஆரம்பமாக இருக்கும். இது நமக்கு தாமதமாகவே புரியும்.