
நம்மை ஏமாற்றுபவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்கப் பழகவேண்டும். ஏமாற்றுபவர்கள் சில தந்திரங்களை நம்மிடம் உபயோகிப்பார்கள். நம்மை யோசிக்கவே நேரம் எடுக்க விடமாட்டார்கள். அத்துடன் நம்மை பிறரிடம் இருந்து தனிமைப்படுத்தி விடுவார்கள். நாம் கேட்காமலே அவர்கள் தங்களை மிகவும் நல்லவர் என்றும், உத்தமர் என்றும், பிறருக்கு உதவுபவர் என்றும் தன்னிலை விளக்கம் வேறு கொடுப்பார்கள்.
ஆனால் அவர்கள் கண்களை உற்று நோக்கினால் அது உண்மையை சொல்லிவிடும். அதிகம் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும் பொழுது பல வழிகளில் ஏமாற வாய்ப்பு உண்டு. எனவே எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
நாம் எப்போதுமே பிறருடன் பேசும் பொழுது குறிப்பாக புதியவர்களுடன் பேசும்பொழுது கண்களைப் பார்த்து பேசவேண்டும். அப்படி பேசும்போது அவர்கள் நம் கண்களை பார்க்காமல் வேறு எங்கோ அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே பேசுவார்கள்.
அத்துடன் நம்மை ஏமாற்றும் முன்பு யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நம்மைத் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்று தந்திரமாக பேசுவார்கள். அதில் நாம் எளிதில் மயங்கி விடுவோம். நமக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எப்பொழுதும் உஷாராக இருக்க வேண்டும்.
நம்மை ஏமாற்ற நினைப்பவர்கள் நாம் கேட்கின்ற எந்த கேள்விகளுக்கும் நேரடியான பதிலை சொல்ல மாட்டார்கள். அத்துடன் அவர்களைப் பற்றிய முழு விவரங்களை அதிகம் சொல்லாமல் ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். அவர்களின் பேச்சில் உண்மை தன்மை இருக்காது. இப்படிப்பட்ட நபர்களிடம் சற்று ஒதுங்கியே இருக்கவேண்டும். அவர்களின் பேச்சும், எதிர்பார்ப்பும் அவர்களுடைய தேவையை சார்ந்து நம்முடன் பேசுவதாகவே இருக்கும்.
ஏமாற்ற நினைப்பவர்கள் நம் பலவீனங்களை அறிந்துகொண்டு அதனை சிறந்த ஆயுதமாக பயன்படுத்துவார்கள். இதனை நாம் சிறிது ஆழ்ந்து கவனித்தால் கண்டு கொள்ளலாம். ஒருவர் மீது கொள்ளும் கண்மூடித்தனமான ஈர்ப்பும், அதிகபட்சமான நம்பிக்கையுமே நம்மை அவர்கள் ஏமாற்ற காரணமாகின்றது. இப்படிப்பட்ட சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏமாற்று பேர்வழிகளை கவனமுடன் கையாளத் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஏமாற்று பேர்வழிகள் தங்களின் காரியம் ஆனதும் நம்மை கழட்டிவிட தயங்க மாட்டார்கள். நாம் அவர்களுக்கு பண்ணுகிற உதவி எல்லாமே ஒரு வழி பாதையாகவே இருக்கும். அவர்களிடம் இருந்து திரும்பி நமக்கு எதுவுமே வராது. இப்படிப்பட்டவர்களிடம் கடன் கேட்டு பாருங்கள். உடனே நம்மை தவிர்த்துவிட்டு ஏதோ அவசர காரியம் இருப்பதுபோல் ஓடிவிடுவார்கள். ஒருவர் நம்மை ஏமாற்றுகிறார் என்று தெரிந்ததும் அவருடன் உறவாடாமல் அவரை விட்டு விலகி விடுவது தான் சிறந்தது.
ஒருவர் நம்மை அளவுக்கு அதிகமாக புகழ்ந்தால் நாம் நிச்சயம் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் முளைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். பாடுபட்டு சம்பாதித்த பணத்தையும் புகழையும் இழக்காமல் இருக்க எப்பொழுதும் விழிப்புடன் இருத்தல் அவசியம். இல்லையெனில் ஏமாற்றுப் பேர்வழிகள் புதுப்புது உத்திகளைக் கையாண்டு மோசடி செய்வார்கள்.
ஏமாற்றுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு பாதிப்பை உண்டு பண்ணலாம். நாம்தான் நம்மை காத்துக்கொள்ள, எச்சரிக்கையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.