
வெற்றி என்பது முயற்சி மற்றும் திறமையில் மட்டுமல்ல முழு ஈடுபாட்டுடன் செய்யும் செயலிலும் உள்ளது. பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் செயல்களை ஈடுபாடு இன்றி துரிதமாக செய்வதும் அரைகுறையாக செய்வதும் வெற்றி அல்ல.
நம்முடைய செயல்பாடு நமக்கு தெரிந்தால் போதும். பிறருக்கு தெரியவேண்டும் என நினைப்பதால் நமக்கு எவ்வித லாபமும் இல்லை. மாறாக அவர்களின் பொறாமை பார்வைகள்தான் நம்மைத் தொடரும். நாம் செய்வதில் எது தவறு எது சரி என்பதை உணர்ந்து தவறை சரி செய்து சரியான வெற்றி கிடைக்கும்வரை நாம் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கவேண்டும்.
வெற்றி கிடைத்தால்தான் நம் மனதில் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். இந்த வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் எந்த வேலையை நாம் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும். நம்முடைய அதிகபட்ச திறமையை வெளிப்படுத்த வேண்டும் அப்போதுதான் அந்த வெற்றி முழுமையடையும்.
படித்த ஒரு கதை இங்கு நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜா தன்னுடைய அரண்மனை சிற்பியிடம் 100 அடியில் ஒரு கடவுள் சிலையை செய்து அதை 50 அடி உயரமான பீடத்தில் வைக்க வேண்டும் என்ற பொறுப்பை தந்தார். சிற்பியும் அதை ஏற்று சிலையை முடிக்க 5 வருஷம் அவகாசம் கேட்டார்.
ராஜாவும் சரின்னு சொல்லிட்டார் . 5 வருடங்கள் கழித்து வந்து கேட்ட ராஜாவிடம் சிறு தவறு நிகழ்ந்ததாக மன்னிப்புகேட்டு இன்னும் 2 வருடங்கள் வேண்டும் என சிற்பி கேட்க சரி என்ற ராஜாவும் அனுமதி தர 2 வருடங்கள் கழித்து சிற்பியின் சிற்பக் கூடத்திற்கு வந்த ராஜா சிற்பி செய்த சிலையைப் பார்த்து அசந்து போனார்.
அவ்வளவு அற்புதமாக அந்த சிலை அமைந்திருந்தது. சிலையை பார்வையிட்டபோது அருகில் அதே போன்ற மற்றொரு சிலை அதே அழகுடன் இருந்ததை கண்டார் ராஜா. சிற்பியிடம் அதன் காரணத்தை கேட்டார் "5 வருடங்களாக இந்த சிலையை செய்து இங்கே போட்டு வைத்திருக்கிறீர்கள். இதையே நீங்கள் தந்திருக்கலாமே இரண்டிலும் எந்த வித்தியாசமும் இல்லையே" என்று சொல்ல சிற்பி ராஜாவிடம் "சற்று பொறுங்கள்" என்று சொல்லி ஒரு நூலை கொண்டு வந்து அந்த சிலையின் நாசிக்கருகில் விட்டார் அந்த நூல் சிறிதே சிறிது உள்ளே நுழைந்தது.
ஒரு மிகச்சிறிய குண்டூசியின் அளவை விட சிறிய ஓட்டை அங்கு இருந்தது. வியப்புடன் ராஜா "இந்த சிலை இருக்கப் போகுதோ ஐம்பதடி உயரத்தில் இந்த சிறு ஓட்டை எவர் கண்களும் விழாது. அப்படி இருக்க நீங்கள் இதே சிலையை அங்கே வைத்திருக்கலாமே ?" என்று சொல்ல அந்த சிற்பி சொன்னார் "இந்த சிலையில் குறை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். மேல் இருக்கும் கடவுளுக்கும் தெரியும் என் மனசாட்சியை விட்டு இதை எப்படி நான் மக்களின் பார்வைக்கு வைப்பேன்? இதனால் என் பணி முழுமையாகாமல் கால முழுவதும் குற்ற உணர்வு என்னைத் துரத்தும் " என்று கூற சிற்பியின் பணி ஈடுபாட்டையும், நேர்மையையும் பாராட்டி ராஜா அவருக்கு சொன்னதுக்கு மேல் பரிசுகளை அளித்து அவரை கௌரவித்தார்.
முதலில் நம்முடைய மனசாட்சிக்கு நம்முடைய செயல் முழுமையானதாக தெரியவேண்டும் அப்போதுதான் அதில் கிடைக்கும் வெற்றியும் நம்மை மகிழ்விக்கும்.