கடும் போட்டி நிறைந்த இன்றைய சூழலில், வெற்றிதான் ஒரே லட்சியமாகப் பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும், யூடியூப் ஷார்ட்ஸிலும் வெற்றி பெற்றவர்கள் பற்றிய கதைகளும், சாதனைகளே வைரலாகின்றன. இப்படி சமூக வலைத்தளங்களைப் புரட்டினாலும், நண்பர்கள் வட்டாரத்தில் பேசினாலும் சாதனையாளர்களின் கதைகளே முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியான தோல்விகளைப் பற்றி போதுமான அளவு பேசுவதில்லை.
தோல்வி என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கு ஒருவித பயமும், பதட்டமும் ஏற்படுவது இயல்பு. ஆனால், இந்த மனப்பான்மையை மாற்றிக்கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் அவசியம்.
தோல்வி ஏன் அவசியம்?
1. கற்றலுக்கான வாய்ப்பு:
தோல்வி என்பது நாம் செய்த தவறை, நம் அணுகுமுறையில் உள்ள குறையை அடையாளம் காண ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
“இன்னொரு முறை இப்படிச் செய்யக் கூடாது” என்று கற்றுக்கொண்டு, அடுத்த முறை மேலும் சிறப்பாகச் செயல்பட இது நமக்கு உதவுகிறது.
2. பலம் சேர்க்கும்:
தோல்விகள் நம்மை பலவீனமாக்குவதில்லை; மாறாக நம்மை பலப்படுத்துகின்றன. ஒரு முறை தோற்று, மீண்டும் எழுந்து நிற்கும் துணிச்சல், நம் தன்னம்பிக்கையை வளர்க்கும். இது எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய சவால்களை நிமிர்ந்து எதிர்கொள்ள நமக்கு மனவலிமையை ஏற்படுத்தும்.
3. யதார்த்தமான பார்வை:
வாழ்க்கை எப்போதும் நேர்கோட்டில் இருப்பதில்லை. ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பு. தோல்விகளை ஏற்றுக்கொண்டு, யதார்த்தமான பார்வையுடன் வாழ்க்கையை அணுக நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இது தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க உதவும்.
4. விடாமுயற்சி:
ஒரு செயலில் தோற்றவுடன் கைவிட்டுவிடாமல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய தோல்விகள் நமக்கு ஊக்கமளிக்கிறது. 'முயற்சி திருவினையாக்கும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, விடாமுயற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.
தோல்விகளை எப்படி அணுகுவது?
சுயபரிசோதனை:
"நான் எங்கே தவறு செய்தேன்? இதை எப்படி சரி செய்யலாம்?”
என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொள்வதால் இதற்கான விடையை அறிந்து கொள்ள முடியும்.
கற்றுக்கொள்ளுங்கள்:
நீங்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள ஒவ்வொரு வெற்றியாளரும் எப்போதாவது ஒருமுறை தோல்வியைச் சந்தித்தவர்களே. அவர்களின் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
பகிர்ந்துகொள்ளுங்கள்:
உங்கள் தோல்விகளை நண்பர்களுடனோ, பெற்றோருடனோ அல்லது ஆசிரியருடனோ பகிர்ந்துகொள்வது மனச்சுமையைக் குறைக்கும். அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு உதவலாம்.
மீண்டும் முயற்சி செய்யுங்கள்:
தவறு நடந்த இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும்போது அதனை தோல்வியாக கருதாமல் ஒரு புதிய தொடக்கமாக பார்க்க வேண்டும். அனுபவம் கிடைத்திருக்கும் நிலையில் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். மீண்டும் முயற்சி செய்வதில்தான் வளர்ச்சியும், வெற்றியும் புதிதாக தொடங்கும்.
ஆகவே, தோல்விகளை ஒரு தடையாகப் பார்க்காமல், வளர்ச்சிக்கும் கற்றலுக்குமான படிகளாக இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு தோல்வியும் நம்மை மேலும் வலிமையாக்கி, அடுத்த முயற்சிக்குத் தயார்ப்படுத்தும். தோல்வி என்பது முடிவல்ல அது வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் வழிகாட்டும் புதிய தொடக்கம்தான் என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.