
ஒவ்வொரு ஆண்டும் மே 23 ஆம் நாளன்று, உலக ஆமை நாள் (World Turtle Day) கொண்டாடப்பட்டு வருகிறது. ஆமைகள் அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாப்பாக வாழவும், அழிவில் இருந்து அவற்றை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘உலக ஆமை நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆமைகள் மீது ஆர்வமுடைய, விலங்கு ஆர்வலர்களான சூசன் டெல்லெம் மற்றும் மார்ஷல் தாம்சன் ஆகியோரால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட, அமெரிக்க ஆமை மீட்பு நிறுவனம் 1990 ஆம் ஆண்டில், மே 23 ஆம் நாளை உலக ஆமை நாளாக அறிவித்துக் கொண்டாடத் தொடங்கியது.
ஊர்வன வகுப்பைச் சேர்ந்த ஆமை அல்லது யாமை (Turtle) என்பதன் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. ஆமைகளில் மொத்தம் 356 இனங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஆமைப் பிரிவின் சில இனங்கள் சுராசிக் இடைக்காலம் முதலே இருந்திருப்பதாகக் கண்டறியப்பட்டடுள்ளது.
எனவே, இவை ஊர்வனவற்றில் பாம்புகளுக்கும் முதலையினங்களுக்கும் மூத்தவை. குளிர் இரத்த விலங்குகளான ஆமை, உடல் வெப்பநிலையைச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக் கூடியவை. இது அம்னியோடிக்கு (அம்னியோன் = கருவைச் சுற்றியிருக்கும் ஒரு வகைச் சவ்வு) வகையைச் சேர்ந்த விலங்கு. எனவே, அதே வகையைச் சேர்ந்த மற்ற விலங்குகளான ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போல இவை காற்றைச் சுவாசிக்கின்றன. மேலும் ஆமைகள் நீருக்குள்ளே அல்லது நீரையொட்டியோ வாழ்கின்ற போதிலும், தனது முட்டையினை நீருக்கடியில் இடாமல் தரையிலேயே இடுகின்றன.
ஆமைகள் பெரும்பாலான நேரம் நீருக்கடியில் இருந்தாலும் மூச்சு விடுவதற்காக, அவை நீருக்கு மேலே அவ்வப்போது வந்தாக வேண்டும். இனத்தைப் பொறுத்து ஒரு ஆமையால் ஒரு நிமிடம் முதல் ஒரு மணி நேரம் நீருக்கடியில் இருக்க முடியும். சில வகை ஆமைகள் வாழ்நாள் முழுவதும் தரையிலேயே வாழ்கின்றன. மேலும், சில ஆமையினங்களில் அவற்றின் குளோயேக்கா (Cloaca) என்னும் பின்துளைகளில் உள்ள பாப்பில்லே எனப்படும் உறுப்பு உள்ளது. இது மீன்கள் எவ்வாறு செவுள்கள் மூலம் நீரில் கரைந்துள்ள ஆக்சிசனை எடுத்துக் கொள்கின்றனவோ அதுபோல ஆக்சிசனை எடுத்துக் கொள்ள உதவுகிறது. மற்ற ஊர்வனவற்றைப் போலவே ஆமைகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன.
இவற்றின் முட்டைகள் மென்மையாக உள்ளன. ஆமைகள் தம் முட்டைகளை நீர்நிலைக்குருகில் உள்ள உலர்ந்த (அஃதாவது ஈரமற்ற) மணல்வெளியில் இட்டு மூடி வைக்கின்றன. முட்டைகள் தாமாகவே பொரிந்து ஆமைக் குஞ்சுகள் மணலுக்கு மேலே வந்து நீரை நோக்கிச் செல்கின்றன. தாய் ஆமைகள் குஞ்சுகளைப் பராமரிப்பதில்லை.
ஆமைகள் பருவம் அடைய பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன. மேலும் இவை சில ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் முட்டையிடுகின்றன. ஆண்டு தோறும் முட்டையிடுவதில்லை. சில ஆமையினங்களில் சுற்றுச்சூழல் வெப்பம் முட்டையில் இருக்கும் கருவின் பாலினத்தை முடிவு செய்கிறது. வெப்பம் மிகுந்திருப்பின் பெண் ஆமையும், குறைந்திருப்பின் ஆண் ஆமையும் பிறக்கின்றன.
ஆமைகள் பகலில் சுறுசுறுப்பாக இரை தேடிக் கொண்டிருக்கும். ஆமையின் உணவானது அது வாழும் இடத்தைப் பொருத்து மாறுபடுகிறது. நன்கு வளர்ந்த ஆமைகள் பொதுவாக நீர்வாழ்த் தாவரங்களை உண்கின்றன. மேலும், சிறிய பூச்சிகள், நத்தைகள், புழுக்களையும் உண்கின்றன. அரிதாக இறந்த கடல் விலங்குகளையும் தின்றதாக அறியப்படுகிறது.
நன்னீரில் வாழும் சிறிய ஆமைகள் பல சிறிய மீன்கள் முதலான நீரில் வாழும் உயிரினங்களை உண்ணும் ஊனுண்ணிகளாகும். ஆமைக் குஞ்சுகளின் வளர்ச்சிக்குப் புரதம் தேவை என்பதால் அவை முற்றிலும் ஊனுண்ணிகளாகவே இருக்கின்றன. கடலாமைகள் பொதுவாக மென்மையான உடலைக் கொண்ட கடலுயிரினங்களையும் ஜெல்லி மீன் எனப்படும் கடல் இழுதுகளையும் பஞ்சுயிரிகளையும் உணவாகக் கொள்கின்றன. வலுவான தாடையைக் கொண்ட ஆமைகள் ஓடுடைய மீன்களைத் தின்கின்றன. தோணியாமை ஊனுணவைத் தின்பதில்லை. அது பெரும்பாலும் பாசிகளையே உணவாகக் கொள்கிறது.
ஆமைகள் அவற்றின் இறைச்சி, ஓடு மற்றும் தோலுக்காக சட்டவிரோதமாக வேட்டையாடி வணிகம் செய்யப்படுகின்றன. சில நாடுகளில் ஆமைகள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுப்புற மாசுபாடு காரணமாகவும், ஆமைகளின் வாழ்விடத்தை அழிப்பதாலும் ஆமைகளின் அழிவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆமைகள் நீர் மற்றும் நிலப்பரப்பில் வாழ்வதால், சுற்றுப்புற சூழலை பராமரிப்பதிலும், சூழலை சமநிலைப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனவே, உலக ஆமை நாளில், அழிந்து வரும் ஆமைகளை பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆமைகளின் வாழ்விடத்தைக் காப்பாற்றவும், பல்வேறு அமைப்புகள் மற்றும் குழுக்கள் மூலம் இணைந்து நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
ஆமைகள் குறைந்தது 40 ஆண்டுகளும், கூடுதலாக 300 ஆண்டுகளும் என்று உயிர் வாழக்கூடியவை. அவற்றின் சராசரி ஆயுட்காலம் சுமார் 150 ஆண்டுகள் என்று இருக்கிறது. ஆமையின் உடல் உறுப்புகள் அவ்வளவு சீக்கிரம் பழுதாவது இல்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நூறாண்டுகள் ஆன ஆமைகளின் ஈரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை ஆராய்ந்ததில் அவை இளம் ஆமைகளின் உறுப்பைப் போலவே இருந்துள்ளது. இதனால் மரபணு ஆய்வாளர்கள் நீண்ட வாழ்நாளைப் பற்றி அறிந்து கொள்ள இவற்றின் மரபணுக்களை ஆராய்ந்து வருகின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.