விதியை நிர்ணயிப்பது நமது கடமையே!

motivation image
motivation imageImage credit - pixabay.com

சாதாரணமாக எந்த தொழிலை  செய்பவராக இருந்தாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை கொடுத்துவிட்டால் அவர்கள் மனசார நம்மை வாழ்த்தி விட்டு செல்வார்கள். அதை விடுத்து குறைவான சம்பளத்தை கொடுத்தால் நிறைவுறாத மனது எதையாவது முணு முணுத்துக் கொண்டே இருக்கும். அதை கொடுத்தவர், வாங்கினவர் இரண்டு தரப்புக்குமே ஒரு நிம்மதி   இல்லாத சூழல்  நிலவுவதை காணலாம். சிலர் சில  சில்லரை வியாபாரிகளிடம்  பேரம் பேசுவது உண்டு. 

பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு, மால்களில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் செல்வார்கள். ஆனால், சாதாரண பொம்மை விற்பவர்களிடம் பேரம் பேசுவதை பார்க்கலாம். அது போன்ற நேரங்களில் பேரம் பேசாமல் தவிர்க்கலாமே. 

உழைப்பாளர்கள் சாப்பிடும் சாப்பாட்டை கவனித்த ஒரு சிறுவன் மனதில் தோன்றிய சிந்தனை, அவர்களிடம் அவன் கேட்ட கேள்வி, அதனால் அவன்  செய்த செயல் பற்றி இதோ ஒரு உண்மைக்கதை. 

ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த சிறுவன் பள்ளி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் வயலில் சில விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். 

இதையும் படியுங்கள்:
சிறுகதை – யதார்த்தம்!
motivation image

வேலை முடிந்து கரையேறிய அவர்கள் மிகவும் மோசமாக உலர்ந்து போயிருந்த ரொட்டித் துண்டுகளை மிகவும் ஆவலோடு சாப்பிடுவதைச் சிறுவன் கவனித்தான். 

"இவ்வளவு   மோசமான உணவை ஏன் சாப்பிடுகிறீர்கள்?" என்று கேட்டான் சிறுவன்.

"எல்லாம் எங்கள் விதி! எங்களுக்கு எங்கே நல்ல உணவு கிடைக்கிறது?" என்று வேதனையோடு  கூறினர் விவசாயிகள். 

"நீங்கள்தான் வயலில் இறங்கி கடுமையாக உழைத்து தானியங்களை விளைவிக்கிறீர்கள். உங்களுக்குத்தானே நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்று கேட்டான் சிறுவன். 

"நீ சொல்வது சரிதான். ஆனால் நாங்கள் பாடுபட்டு உழைத்து விளைவிப்பதை எல்லாம் அரசாங்கம் வாரிக்கொண்டு போய்விடுகிறது. அவர்கள் போடும் இந்தப் பிச்சையைத்தான் நாங்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது" என்றனர் விவசாயிகள். 

அவர்கள் சொன்ன விஷயம் அந்த சிறுவனை உணர்ச்சிவசப்பட வைத்தது. இந்த அநீதியை ஒழித்துக்கட்டி விவசாயிகள் தங்கள் உரிமையைப் பெற பெரியவனானதும் பாடுபட வேண்டும் என்று அப்போதே அச்சிறுவன் உறுதி பூண்டான். 

ஜோசப் ஸ்டாலின்..
ஜோசப் ஸ்டாலின்..

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சோவியத் யூனியனின் அதிபரான ஜோசப் ஸ்டாலின்! 

ஒரு குறிக்கோளை திட்டமிடுங்கள். அத்திட்டத்தை நிறைவேற்று வதற்காக முயலுங்கள். அவ்வாறு முயலும்போது எவ்வளவு இடுக்கண்கள் ஏற்பட்ட போதிலும் குறிக்கோளை மட்டும் விட்டு விடாமல் உறுதியுடன் செயல்படுங்கள். அவ்வாறு செயல்படும்போது வெற்றி பெறுவது உறுதி.  வெற்றி பெற்ற பின் உழைப்பாளர்களுக்கு நாம் எதை முறைப்படி செய்ய வேண்டுமோ அதை தப்பாது தவறாது செய்ய வேண்டும்.

மேலே கூறிய செய்தி இதைத்தான் உறுதி பட எடுத்துரைக்கின்றது.  நாமும்  பின்பற்ற வேண்டியது இதைத்தான் என்பதைப் புரிந்து கொண்டு   அதன்படி செயல்பட்டு வாழ்க்கையையில் வெற்றி நடை போடுவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com